மாநாடு சிம்பு

Time loop: டைம் லூப் என்றால் என்ன… படங்களில் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள்?

மாநாடு நவம்பர் 25-ம் தேதி வெளியாக போவதையடுத்து டைம் லூப் பற்றி பலரும் தேடி வருகிறார்கள். போக டைம் லூப் படங்களை பற்றியும் தேடித் தேடி பார்த்து வருகிறார்கள். இந்த கட்டுரையில் அப்படியான டைம் லூப் பற்றின டியூஷன் எதுவும் எடுக்கப்போவதில்லை. அப்படி பாடம் எடுக்கும் அளவுக்கு நான் விஞ்ஞானியும் இல்லை. நான் புரிந்துகொண்ட வகையில், நான் பார்த்த சில படங்களில் தெரிந்த விஷயங்களை எல்லோருக்கும் புரியும் வகையில் டைம் லூப் கான்செப்ட் பற்றியும், அது சார்ந்து வெளிவந்த படங்கள் பற்றியும் பார்க்கலாம்.

டைம் லூப் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது காலம் மீண்டும் மீண்டும் ரிப்பீட் மோடில் நடப்பதே டைம் லூப். இது எப்படி ஆரம்பிக்கும், டைம் லூப்பில் மாட்டிக்கொண்டவருக்கு தான் மாட்டிக்கொண்டது தெரியுமா, எந்த அடிப்படையில் டைம் லூப் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, இந்த டைம் லூப் எதன் அடிப்படையில் நிறைவு பெறுகிறது. இது போல் பல கேள்விகள் உண்டாகும். இதை தெளிய வைத்த படங்களும், மேலும் குழப்பிய படங்களும் பல மொழிகளில் வெளிவந்திருக்கின்றன. பொதுவாக டைம் லூப், டைம் டிராவல் போன்றவைகள் எல்லாம் கற்பனையான ஒன்றுதான். இருப்பினும் இது சார்ந்து வெளிவரும் படைப்புகளுக்கு என்றுமே வரவேற்பு உள்ளது. 30 வருடங்களுக்கு முன் வெளிவந்த Groundhog day படத்தின் மீது எந்தளவுக்கு ஈர்ப்பு இருந்ததோ, அதே அளவுக்கான எதிர்பார்ப்புதான் மாநாடு படத்தின் மீதும் இருக்கிறது. சரி முன்னே சொன்ன கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம்.

மாநாடு சிம்பு
மாநாடு சிம்பு

பார்த்த படங்களின்படி ஏதோ ஒரு அசம்பாவிதம், எதிர்பாராத ஒரு சம்பவம், விபத்து… ஏதேனும் நிகழ்ந்தால் டைம் லூப் ஆரம்பமாகிறது. படத்திலும், படைப்பிலும்தான் இது சாத்தியம் என்பதால் படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கு மட்டும்தான் தான் டைம் லூப்பில் மாட்டிக்கொண்டது தெரிகிறது. அடுத்தது டைம் லூப் எதன் அடிப்படையில் ஆரம்பிக்கிறது என்று பார்த்தால் ஒரு குறிப்பிட்ட நேரம் முடியும் முன்போ, அல்லது டைம் லூப்பில் மாட்டிக்கொண்டவர் இறக்கும்போதோ அடுத்த லூப் ஆரம்பிக்கிறது (இப்படித்தான் எல்லா படைப்புகளிலும் ஆரம்பிக்கும் என்று இல்லை. ஒவ்வொரு படைப்புகளிலும் ஒவ்வொரு மாதிரி). கடைசியாக இந்த டைம் லூப் எப்படி முடிவு பெறுகிறது அல்லது நிறைவுக்கு வருகிறது என்று பார்த்தால் அந்த நாளுக்கான அல்லது அந்த லூப்-க்கான purpose நிறைவு பெற்றால் அல்லது அந்த சைக்கிள் உடைந்துவிட்டால் இந்த டைம் லூப் நிறைவுக்கு வந்துவிடுகிறது. டைம் லூப் கான்செப்டில் வெளிவந்த படங்கள் ஏறத்தாழ அப்படித்தான் முடிந்திருக்கின்றன.

பல நுணுக்கமான விஷயங்கள் இதற்குள் ஒளிந்திருப்பதால் கிரியேட்டர்கள் இதை அணுகுவதற்குத் தயங்குவார்கள். இதனால்தான் தமிழில் இந்த கான்செப்ட் படம் வெளிவரவில்லை. மாநாடு படத்திற்கு முன் டாப்சி நடித்த கேம் ஓவர் படத்தில் மேலோட்டமாக இந்த கான்செப்ட்டைத்தான் தொட்டிருப்பார்கள். ஆனால், அதில் கொஞ்சம் கேம் ஃப்ளேவரைச் சேர்த்து டைம் லூப் கான்செப்டைத்தான் எடுத்திருப்பார் அதன் கிரியேட்டர். மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வெளிவந்த டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் படத்திலும் கிளைமாக்ஸ் காட்சியிலும் டோர்மாமூ… டோர்மாமூ என டைம் லூப்பைப் பயன்படுத்தியிருப்பார்கள்.

இந்த கான்செப்டை வைத்து வெளிவந்த பல்வேறு மொழிகளின் படைப்புகளைப் பற்றி பார்க்கலாம்.

Kudi Yedamaithe 2021 (Telugu) :

Kudi Yedamaithe
Kudi Yedamaithe

Aha ஓடிடி தளத்தில் வெளிவந்த இந்த சீரிஸை பார்த்தால் ஓரளவு டைம் லூப் பற்றிய ஐடியா கிடைத்துவிடும். அமலா பால் – ராகுல் விஜய் காம்போவின் நடிப்பில் வெளியான இந்த வெப் சீரிஸில் பல்வேறு முடிச்சுகள் போடப்படும். கதையின் நாயகர்களான இந்த இருவருக்கும் தான் டைம் லூப்பில் சிக்கிக்கொண்டது ஒரு கட்டத்தில் தெரியவந்துவிடும். அதன் பிறகு இதை ஒருவருக்கொருவர் எப்படி தெரியப்படுத்திக்கொள்கிறார்கள், இந்த டைம் லூப் சைக்கிளை உடைக்க இவர்கள் செய்யும் முயற்சிகள், மொத்த கதைக்கான purpose முழுமை பெறுவது என கதை சுவாரஸ்யத்தின் உச்சத்துக்கே செல்கிறது. வெளியில் அதிகம் பேசப்படாத இந்த சீரிஸைக் கட்டாயம் பார்க்கலாம்.

Groundhog day 1993 (Hollywood) :

Groundhog day
Groundhog day

பக்கா டைம் லூப் கான்செப்டில் ஹாலிவுட்டில் 1993-ல் வெளிவந்த படம் இது. கிரவுண்ஹாக் டே என்பது கனடா மற்றும் அமெரிக்காவில் பின்பற்றிவரும் கலாசாரம். இது பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறும். இதை மையமாக வைத்து வெளிவந்த படம்தான் இது. படத்தின் நாயகனான பில் முரேவுக்கு பிப்ரவரி 2-ம் தேதி டைம் லூப் மோடில் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கும். இதை Romcom ஜானரில் எடுத்திருப்பார்கள். அந்த காலத்திலேயே படம் பல கோடி வசூலைப் பெற்றுத் தந்தது.

A day 2017 (Korean) :

A Day
A Day

தனது கண் முன்னே ஒரு கார் விபத்தில் மகளை இழக்கும் அப்பா, அதற்கு பின்னால் இருக்கும் மர்டர் மோட்டிவ். இதைப் பயன்படுத்தி கொரியாவில் வெளிவந்திருக்கும் டைம் லூப் படமே A Day. தான் மகளை பறிகொடுத்தது போலவே இன்னொருவரும் அவரது மனைவியைப் பறிகொடுத்திருப்பார். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார்கள்.

Edge of the tomorrow 2014 (Hollywood) :

Edge of the tomorrow
Edge of the tomorrow

டைம் லூப் கான்செப்டில் டாம் க்ரூஸ் நடித்திருக்கும் படம். `All you need is kill’ என்ற ஜப்பான் நாவலை மையப்படுத்தி எடுத்த படம்தான் இது. பொதுவாக ஜப்பான் நாவல்களில் நிறைய டைம் லூப் கான்செப்டில் படைப்புகளை நம்மால் பார்க்க முடியும். சண்டை பயிற்சி குறைவாக இருக்கும் ஒரு ஆளை ஏலியன்ஸுக்கு எதிராக சண்டையிட அனுப்பும்போது கதையின் நாயகன் டைம் லூப்பில் மாட்டிக்கொள்கிறார். அதைப் பயன்படுத்தி எதிரிகளை எப்படி வீழ்த்தினார் என்பதே படத்தின் கதை.

Palm springs 2021 (Hollywood) :

Palm springs
Palm springs

Palm springs என்ற இடத்தில் படத்தின் நாயகியும், நாயகனும் சந்தித்துக் கொள்கிறார்கள். ஏற்கனவே டைம் லூப்பில் மாட்டிக்கொண்ட நாயகன், நவம்பர் 9 அன்று இரவு ஒருவரால் கொல்லப்பட அப்போது உடன் இருந்த நாயகியும் டைம் லூப்பில் மாட்டிக்கொள்கிறார். இதை காமெடி கலந்த ரொமான்ஸாக உருவாக்கியிருப்பார் படத்தின் இயக்குநர்.

Butterfly effect, Chaos theory, Time travel, Rashomon effect, Time travel, Time loop என குறிப்பிட்ட ஒரு சப்ஜெக்ட் சார்ந்த சினிமாக்கள் ஏராளமாக பல மொழிகளில் வெளிவந்திருக்கின்றன. திரைக்கதை நுணுக்கத்துக்காக இப்படி ஏதேனும் ஒரு சப்ஜெக்டை கிரியேட்டர்கள் கையில் எடுத்திருப்பார்கள். தசாவதாரம் படத்தில் ஆரம்பித்து 24, இன்று நேற்று நாளை, மாயவன், கேம் ஓவர், ஜீவி என வித்தியாசமான சப்ஜெக்ட் கொண்ட படங்கள் சயின்ஸ் சார்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. மாநாடு படமும் அப்படியான வரிசையில் வெளிவர இருக்கும் படம்தான். டைம் லூப் கான்செப்டை மையமாக வைத்து அரசியல், பழி வாங்குதல் என கதையில் பல விஷயங்களை கொண்டு வந்திருக்கலாம். சிம்புவுக்கும் இது மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட் படமாக அமையலாம்.

பொறுத்திருந்து பார்க்கலாம்!

Also Read – சின்னத்திரை டு வெள்ளித்திரை – கோலிவுட்டில் கலக்கும் 5 ஹீரோயின்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top