“இதுதான் இயற்கை விவசாயம்…” நம்மாழ்வார் சொன்னது என்ன? #RememberingNammalvar

இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் கோ.நம்மாழ்வார் இயற்கையோடு கலந்து இன்றுடன் (டிசம்பர் 30) 8 வருடங்கள் கடந்திருக்கிறது. இன்றைக்கு ஊருக்கு ஊர் முளைத்திருக்கும் விவசாயம் சார்ந்த கடைகளின் விளம்பரப் பலகைகளில் நம்மாழ்வாரின் படங்கள்தான். இன்று பெரும்பாலும் எல்லோருக்கும் நம்மாழ்வாரைத் தெரிந்திருக்கிறது. ஆனால், இன்றைய 2கே கிட்ஸ்க்கு நம்மாழ்வாரை அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விவசாயிகள் கொண்டாடும் அளவுக்கு அவர் என்னதான் செய்தார்… வாருங்கள் பார்ப்போம்!

நம்மாழ்வார் – இளமைக்காலம்

தஞ்சை மண்ணில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை படிப்பைக் கற்றவர்.1960-ம் ஆண்டு பட்டம் முடித்த கையோடு கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். பசுமைப் புரட்சியால் ஏற்படும் மாற்றங்களைக் கண்டவர் அரசு வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு வெளியேறினார். ஜப்பானியச் சிந்தனையாளர் மசானபு புகோகாவின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர். பல கிராமங்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு இயற்கை விவசாயத்தின் அவசியத்தை  உணர்த்தியவர். இப்படி விவசாயத்திற்காகத் தொடங்கிய பயணம் அவரது இறுதி மூச்சு நிற்கும் வரை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அவரிடமிருந்து விவசாய ஆலோசனைகளைப் பெற்ற விவசாயிகளும், அவருடன் பயணித்த இயற்கை முன்னோடி விவசாயிகளும் பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். 

நம்மாழ்வாருக்கென ஒரு தனித்தன்மை இருந்தது. கற்றதை எளிய விவசாயிகளுக்குப் புரியும் மொழியில் சொல்லிக் கொடுத்தார். அவரின் சிந்தனையும் செயல்பாடும் படித்த இளைஞர்களை இயற்கை வேளாண்மை பக்கம் திருப்பியது. இன்று பாரம்பர்ய ரகங்கள், தானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதற்குப் பின்னால் நம்மாழ்வாரின் முப்பதாண்டுக் கால பயணம் இருக்கிறது. 

நம்மாழ்வார் பார்வையில் எது இயற்கை விவசாயம்?

2008-ம் ஆண்டு திருவாரூரில் நடந்த ஒரு விழாவில், “இயற்கை விவசாயம்ங்குறது ரசாயனம் கலக்காம பண்றது மட்டும் இல்லை. நிலம் முழுக்க ஒற்றை பணப்பயிர் நடுறது இயற்கை விவசாயம் இல்லை. நிலத்தில் ஒரு பயிர் மட்டும் நடாமல், பல்வேறு காலக்கட்டங்களைல் அறுவடைக்கு வரும் மரங்களை நடணும். அஞ்சு அடுக்கு முறை, ஏழு அடுக்கு முறையில் விவசாயம் செய்யுங்க.  தேக்கு, தென்னை, வாழை, பாக்குனு கலவையா மரங்களை நடணும. ஊடுபயிரா காய்கறிகளையோ, கடலை மாதிரியான பயிர்களையோ விவசாயம் செய்யணும். இப்படி செய்தால் காற்றடிக்கும் போது ஒரு மரம் மற்றதற்கு அரணா இருக்கும். சுழற்சியில அறுவடைக்கு வரும்போதே, பொருளாதார ரீதியாவும் பலன் கொடுக்கும்” இப்படி எதைச் சொன்னாலும் எளிமையான முறையில் விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். அதை ஆழமாகப் பிடித்துக் கொண்டனர் விவசாயிகள். 

நம்மாழ்வார்

பசுமைப் புரட்சியும் நம்மாழ்வாரும்

இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை போக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அத்தனை செயல்களையும் தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக அடித்து நொறுக்கினார். சொன்னவர் சொன்னதோடு நின்றுவிடவில்லை. நேரடியாகக் களத்தில் இறங்கி கிராமந்தோறும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். 

வீரிய ரக விதைகளின் வருகையால் அழிவு நிலையிலிருந்த நம்முடைய பாரம்பர்ய விதைநெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, குடவாழை, குழியடிச்சான், கவுனி என நூற்றுக்கணக்கான விதை நெல் ரகங்களை மீட்டு மீண்டும் விவசாயிகளிடம் சேர்த்த பெருமை நம்மாழ்வாரைத்தான் சேரும். நம் நாட்டு வேப்ப மரத்துக்கான காப்புரிமையைப் பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு வந்தவர். இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250-க்கும் மேலான கூட்டுப் பண்ணைகளை உருவாக்கியவர். இயற்கை மீது ஆர்வமுள்ள இளைஞர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பினர் இவரின் பின்னால் நடந்தனர். இன்று இயற்கை விவசாயம் வேரூன்றிட முக்கியமான காரணகர்த்தாவாகத் திகழ்ந்தவர்.

Also Read : நூற்றாண்டின் மிகப்பெரிய சூழலியல் சீர்கேடு – மெல்லச் சாகும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்!

இவர் இல்லாமல் இன்றைக்கு இயற்கை விவசாயம் மீண்டும் உயிர் பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். இறுதி மூச்சுவரைக்கும் விவசாயத்துக்காக ஒருவர் வாழ்வை முழுவதுமாக அர்ப்பணிக்க முடியும் என நிரூபித்தவர், நம்மாழ்வார். வாழ்நாளெல்லாம் இயற்கைக்காகப் போராடிய, இயற்கையைக் காத்த, இயற்கை ஜோதியின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. 

மண்ணை மறப்பவன் தன் வரலாற்றை மறக்கிறான். வரலாற்றை மறப்பவன் தன் அடையாளத்தை இழக்கிறான். நமது அடையாளம் மண். இந்த மண்ணின் அடையாளம் நம்மாழ்வார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top