தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வந்திருக்கு. ஆனால், சில படங்கள் மட்டும்தான் எவ்வளவு நாள் ஆனாலும் மனசுல நிக்கிற மாதிரி அமைஞ்சிருக்கு. குறிப்பாக அதில் சில படங்கள் நம்மளும் வாழ்க்கைல எதையாவது சாதிக்கனும்னு மோட்டிவேஷன் தரக்கூடிய படங்களாக வந்திருக்கு. `எல்லாரும் மூனு நிமிஷப் பாட்டுல முன்னுக்கு வந்துட்டா எப்படி இருக்கும்?’ – இப்படி கனவு காணாத ஆள்களே இருக்க முடியாதுனு சொல்லலாம். இந்த கனவுக்கு விதைப் போட்டது சில திரைப்படங்கள். அப்படி முன்னுக்கு வரனும்னு மோட்டிவேஷன் கொடுத்த சில திரைப்படங்கள் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப் போறோம்.
அண்ணாமலை

ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளியான திரைப்படம், அண்ணாமலை. “அசோக்… நீ இதுவரைக்கும் இந்த அண்ணாமலையை நண்பனாதான் பார்த்திருக்க.. இனிமேல் நீ இந்த அண்ணாமலையை விரோதியா பார்க்கப்போற.. இந்த நாள் உன்னுடைய காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோ.. இன்னைல இருந்தே உன்னுடைய அழிவுகாலம் ஆரம்பமாயிடுச்சு.. எனக்கும் உனக்கும் தர்மயுத்தம் தொடங்கிடுச்சு. இந்த யுத்தத்துல நான் உன்னைவிட பணம், பேர், புகழ், அந்தஸ்தை சம்பாதிச்சு.. பல அடுக்குமாடி ஹோட்டல்களைக் கட்டி.. உன்னுடைய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி.. உன்னுடைய பண வெறியை ஒழிச்சு கட்டி.. நீ எப்டி என் வீட்டை இடிச்சு என் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தியோ.. அதேமாதிரி நானும் உன் வீட்டை இடிச்சு உன் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வரல… என் பேரு அண்ணாமலை இல்லடா” – ப்பா… என்ன ஒரு பவர்ஃபுல்லான டயலாக்ல. ஒவ்வொரு தடவையும் இந்த டயலாக்கை அந்த பி.ஜி.எம்மோட கேட்கும்போது அப்படியே புல்லரிக்கும். அப்படியே அந்த `வெற்றி நிச்சயம்’ பாட்டும் வேற லெவல்ல எனர்ஜியா இருக்கும். மாஸ்ல!
சூர்யவம்சம்

சரத்குமார், ராதிகா மற்றும் தேவயானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் சூர்யவம்சம். இந்தப் படத்துல வர்ற `நட்சத்திர ஜன்னலில்’ பாட்டு பலருக்கும் ஃபேவரைட். அந்தப் பாட்டுல சரத்குமாரும் பெரிய பிஸினஸ் மேனா மாறிடுவாரு.. தேவயானியும் கலெக்டரா மாறிடுவாங்க.. இந்தப் பாட்டு முடிஞ்சதும் நாமளும் தீவிரமா படிக்கிறோம் இல்லைனா உழைக்கிறோம் முன்னுக்கு வர்றோம்னு நினைச்சவங்க நிறைய பேர் கண்டிப்பா இருப்பாங்க. அவ்வளவு தூரம் இந்தப் படம் தாக்கத்தை ஏற்படுத்துச்சுனு சொல்லலாம். `உளி விழும்போது வலினு அழுத எந்த கல்லும் சிலையாக முடியாது. ஏர் விழும்போது கஷ்டம்னு நினைக்கிற எந்த நிலமும் விளைஞ்சு நிக்காது’ – இந்த டயலாக் இன்னைக்கு பேசினாலும் அப்படி ஒரு பாஸிட்டிவ் வைப்ஸ் வரும். குறிப்பா 90’ஸ் கிட்ஸ்களுக்கு.
படையப்பா

ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `படையப்பா’. அப்போவே… பேர கேட்டாலே சும்மா அதிரும்னா பாத்துக்கோங்க. செம மாஸான படம். ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தப் படத்தில் வரும் `வெற்றிக் கொடி கட்டு’ பாடல் வேற லெவல் ஹிட். இந்தப் பாட்டு தொடங்கி முடியும்போது ரஜினி பெரிய பணக்காரரா மாறியிருப்பாரு. `வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா.. தடைக்கல்லும் உனக்கொடு படிக்கல்லப்பா’னு வர்ற வரிகள் எல்லாம் 90’ஸ் கிட்ஸ் எவ்வளவு லோ எனர்ஜில இருந்தாலும் அப்படியே அவங்கள தூக்கி நிறுத்தும். மோட்டிவேஷன் படம் லிஸ்ட்ல தவிர்க்க முடியாத படங்களில் படையப்பா மிகவும் முக்கியமானது.
புன்னகை தேசம்

தருண் குமார், சினேகா, குணால் சிங், தாமு, ப்ரீத்தா என பல நட்சத்திரங்கள் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் புன்னகை தேசம். தங்களின் கனவுகளை நிறைவேற்ற உழைக்கும் நண்பர்கள் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் மற்றோரு நண்பன். இவர்களைச் சுற்றி நடக்கும் கதைதான் புன்னகை தேசம். “நல்ல நண்பன் கிடைத்ததால் இன்று சிரிக்கிறோம். இசையின் பயணத்தில் தடைகள் இல்லை. இனி எங்கெங்கிலும் எங்கள் கான மழை” என இசைத்துறையில் சாதிக்கும் இரண்டு நண்பர்கள்… ஐ.ஏ.எஸ் ஆகும் மற்றொரு நண்பன்… இவர்களுக்காக வாழ்க்கையையே அற்ப்பணித்த மற்றொரு நண்பன்.. என சென்டிமென்கள் நிறைந்த படம் முடியும் போது செம இன்ஸ்பிரேஷனா இருக்கும்.
இதுல உங்க ஃபேவரைட் படம் அல்லது மிஸ்ஸான படங்களை கமென்ட்ல சொல்லுங்க!
Also Read : ஜகமே தந்திரம் படம் பற்றிய சிம்பிள் க்விஸ்!