கெவின் கிளாக், 2003-ம் ஆண்டு வெளியான `ஸ்கூல் ஆஃப் ராக்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இசைக்குழுக்களை வைத்திருந்தார். பாடலாசிரியராக இருந்தார். குழந்தைகளுக்கு இசையை கற்றுத்தந்தார். தன்னுடைய 32-வது வயதில் ஒரு புதிய இசைக்குழு ஒன்றைத் தொடங்கினார். கடந்த வார இறுதியில் முதன்முறையாக இந்த இசைக்குழு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது பரவலாக பேசுபொருளானது. ஆனால், கெவின் கிளார்க் இன்று உலகில் இல்லை. சாலை விபத்து ஒன்றில் அவர் உயிரிழந்தார். தனது இசைக்குழுவினரிடம் கெவின் பேசும்போது, “நான் இறுதியாக வாழ விரும்பும் வாழ்க்கை இது. நீங்கள் என்னுடைய இசைக்குடும்பம். எனது குடும்பம்” என்று உருக்கமாக பேசியதாக அவரது தயார் ஆலிசன் கிளார்க் தெரிவித்துள்ளார்.
ஹைலேண்ட் பார்க் பகுதியில் கெவின் கிளார்க் வளர்ந்தார். தன்னுடைய மூன்று வயதில் இருந்து டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கினார்.கெவின் டிரம்ஸ் மட்டுமல்லாது கிட்டார், பியானோ மற்றும் வயலின் ஆகியவற்றையும் வாசிக்க கற்றிருந்தார். `அவர் இசையை மிகவும் நேசித்தார். சிறந்த திறமை உடையவன். தங்கமான மனது உடையவன்” என்று ஆலிசன் தெரிவித்தார். கெவின் தன்னுடைய 12 வயதில் நடிகர் ஜேக் பிளாக்குடன் இணைந்து
ஸ்கூல் ஆஃப் ராக்’ படத்தில் டிரம்மர் கதாபாத்திரத்தில் நடித்தார். நடிப்பில் அவருக்கு அனுபவம் இல்லை என்றாலும் அவருடைய டிரம் வாசிக்கும் திறமை அவருக்கு இந்த வாய்ப்பை பெற்றுத்தந்தது எனலாம். `அவன் ஒரு நடிகர் இல்லை. நடிகராக ஆக வேண்டும் என்பது பற்றி அவன் சிந்திக்கவில்லை” என்று ஆலிசன் தெரிவித்தார்.
கெவின் கிளார்க் தன்னுடைய நடிப்பை தொடரவில்லை என்றாலும் இசையை அவர் ஒருபோதும் விடவில்லை. அவரது ரத்தத்தில் இசை இருந்தது. கிளார்க்கின் ரூம் மேட் ராப்பி கோல்ட்பெர்க், “கெவின் பாடல்களை எழுத விரும்பினார். கிட்டாரை எடுத்து அதில் ஃபன்னியான பாடல்களை இயற்ற விரும்பினார்” என்று தெரிவித்தார். தி டேஸ்ட் ஆஃப் சிகாகோ மற்றும் ஹவுஸ் ஆஃப் ப்ளூஸ் போன்ற பிரபல நிகழ்ச்சிகளில் இவர்கள் இணைந்து இசைக்கருவிகளை வாசித்துள்ளனர். கெவினுடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று குறிப்பிட்ட கோல்ட்பெர்க் தனது ஐந்து ஆண்டுகால ரூம் மேட் இறந்ததை எண்ணி அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். செய்தித்தாளில் வந்த விளம்பரத்தைப் பார்த்து நடிக்கும் வாய்ப்பை தேடிப்போனதாக தனது நேர்காணல்களில் கெவின் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் ஜேக் ப்ளாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கெவின் நம்மை விட்டு சென்றுவிட்டார். மிகவும் அழகான மனம் உடையவர். அவரைப் பற்றி நிறைய நினைவுகள் உள்ளன. மனம் உடைந்துவிட்டது. அவருடைய குடும்பத்தினருக்கும் ஸ்கூல் ஆஃப் ராக் குழுவினருக்கும் எனது அன்பை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார். இசைக்குழுவின் மேலாளராக நடித்த காஸ்க்ரோவ்,
உலகம் அற்புதமான மனிதர் ஒருவரை இழந்துவிட்டது. நீங்கள் எவ்வளவு கனிவான மனிதர் என்பதை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். உங்களுடனான நினைவுகளை ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்று எழுதியுள்ளார். திரைப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரிவ்கா ரெயிஸ், “உங்களது அணைப்புகளையும் முகத்தில் இருக்கும் சிரிப்பையும் ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Also Read : இந்த 7 விஷயங்களை நீங்கள் கூகுளில் தேடக் கூடாது… ஏன்?