சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை டீம், அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பிய அ.தி.மு.க… என்ன காரணம்?

பா.இரஞ்சித் இயக்கி, தயாரித்த சார்பட்டா பரம்பரை படத்தில் உண்மைக்குப் புறம்பான சித்திரிப்புகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி அ.தி.மு.க, படக்குழு மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. என்ன காரணம்?

வடசென்னை குத்துச்சண்டை பரம்பரைகளுக்கு இடையே நடக்கும் போட்டி குறித்து 1975 எமெர்ஜென்ஸி காலத்தை ஒட்டி நடப்பது போன்ற கதையம்சத்துடன் பா.இரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் வெளியானபோது, `தி.மு.க-வின் பிரசார படமாக அமைந்திருக்கிறது. வரலாற்றைத் திரித்துச் சொல்லியிருக்கிறார்கள்’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர்.

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை

இந்தநிலையில், சார்பட்டா பரம்பரை படத்தில் இடம்பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட செய்திகள் திரைப்படத்துக்காக எடுக்கப்பட்டது என்பதை ஊடகங்கள் வாயிலாகவும் படத்தில் டிஸ்க்ளெய்மராகவும் வெளியிட வேண்டும் என்று கூறி அ.தி.மு.க சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. சார்பட்டா படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான பா.இரஞ்சித், படத்தை வெளியிட்ட ஓடிடி தளமான அமேசான் பிரைம் ஆகியவற்றுக்கு அ.தி.மு.க சார்பில் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் இந்த நோட்டீஸை அனுப்பியிருக்கிறார்.

அந்த நோட்டீஸில், “1970 ஆம் ஆண்டு கால கட்டங்களில் நடைபெறக்கூடிய கதையாக அந்தப் படம் எடுக்கப்பட்டு இருக்கின்றபோது அப்போது முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். அந்த படத்தின் ஒரு மணி 45 நிமிடம் 17ஆவது நொடியிலே முதலமைச்சர் மகன் கூட மிசாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று ஒரு வசனம் வருகிறது. இந்த வசனத்தின் அடிப்படையில் அது தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆக சித்தரிக்கப்படுகிறது. ஸ்டாலின் 1971ஆம் ஆண்டு மிசா காலங்களிலேயே அவர் கைது செய்யப்பட்டாரே ஒழிய, மிசாவில் அவர் கைது செய்யப்படவில்லை. எனவே இந்த செய்தியானது அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலினை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக உண்மைக்கு மாறான தகவலை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

பாபு முருகவேல்
பாபு முருகவேல்

இந்த செய்தியின் மூலம் உண்மையாக மிசாவின் மூலமாக கைது செய்யப்பட்டவர்களில் மனதில் ஒரு பெரிய வருத்தத்தையும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தை பற்றி அறியாதவர்கள் மனநிலையும் வரலாற்றின் பக்கங்களை படித்தவர்கள் மனதில் எழும் ஒரு தவறான செய்தியை கொண்டு சேர்த்து இருப்பதாக நான் அறிகிறேன். மேலும், மிசாவைப் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷனின் அறிக்கைகளையும் அந்த அறிக்கையின் 575 பக்கங்களிலும் ஸ்டாலினுடைய பெயர் எந்த இடத்திலும் பதிவாகவில்லை.

நீதியரசர் ஷா கமிஷனின் அறிக்கையின்படி ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று பட்டவர்த்தனமாக புலப்படுகிறது. இது சம்பந்தமாக பல விவாதங்களிலேயும், பல அரசியல் தலைவர்களின் கேள்விகளுக்கும் இதுநாள் வரை அதை நிரூபிக்கும் விதமாக அல்லது அதை மறுத்து கூறுகின்ற விதமாக ஸ்டாலின் அவர்களோ அவருடன் சார்ந்தவர்களோ எந்தவிதமான அறிக்கையோ சான்றுகளையோ இதுவரை தெரியப்படுத்தவில்லை….

பா.இரஞ்சித் - ஆர்யா
பா.இரஞ்சித் – ஆர்யா

இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்து தண்டிக்கப்படக் கூடிய குற்றமாக நான் கருதுகிறேன் எனவே இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்திற்குள்ளாக நீங்கள் சொன்ன அந்த செய்திகள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் எந்தவித அடிப்படையும் இல்லாமல் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டது என்பதை அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் நாளேடுகளில் பிரசுரித்து வெளியிட வேண்டும் அல்லது அந்த திரைப்படத்தில் வரக்கூடிய குறிப்பிட்ட அந்த வசனத்தை உடனடியாக நீக்கி மறுவெளியீடு செய்ய வேண்டும். தவறுகின்ற பட்சத்தில் உங்களின் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பை நீங்களே வழங்கி விட்டீர்கள் என்பதாக எடுத்துக்கொண்டு அதற்கான அனைத்து விளைவுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டும் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.

Also Read – கமல் தமிழ் சினிமாவின் பரிசோதனை எலி! #62YearsOfKamalHaasan

1 thought on “சார்பட்டா பரம்பரை டீம், அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பிய அ.தி.மு.க… என்ன காரணம்?”

  1. Hi there! Do you know if they make any plugins to help with Search Engine Optimization? I’m trying to get
    my site to rank for some targeted keywords but I’m not seeing very good success.
    If you know of any please share. Thank you! I saw similar text
    here: Wool product

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top