கோவை அன்னூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் ஒருவரை ஆதிக்க சாதியைச் சேர்ந்த நபர், தனது காலில் விழ வைத்து மன்னிப்புக் கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கோவையை அன்னூரை அடுத்த ஒட்டர்பாளையம் வி.ஏ.ஓ-வாக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார். வி.ஏ.ஓ-வின் உதவியாளராக முத்துசாமி என்பவர் இருந்து வருகிறார். இந்தநிலையில், வி.ஏ.ஓ அலுவலகத்துக்கு அதே ஊராட்சியைச் சேர்ந்த கோப்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் பட்டா, ஆவணம் சரிபார்ப்புக்காக நேற்று வந்திருக்கிறார். பட்டா சரிபார்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு வருமாறு வி.ஏ.ஓ கலைச்செல்வி கோபிநாத்திடம் அறிவுறுத்தியிருக்கிறார். அதை ஏற்காத கோபிநாத், வி.ஏ.ஓ-விடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
வி.ஏ.ஓ அலுவலகத்தில் சத்தம் கேட்டு அங்கு வந்த முத்துசாமி, ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு வாருங்கள் என கோபிநாத்திடம் கூறியிருக்கிறார். வி.ஏ.ஓ கலைச்செல்வியை அச்சுறுத்தும் வகையில் கோபிநாத் பேசியதாகவும் தெரிகிறது. இதனால், ஒரு பெண் அலுவலரிடம் முறையாகப் பேசுங்கள் என்று கூறிய முத்துசாமி, உரிய ஆவணங்களை எடுத்துவரும்படியும் சொல்லியிருக்கிறார். இதனால், முத்துசாமி மீது ஆத்திரமடைந்த கோபிநாத், அவரை சாதியரீதியாக அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. தன்னைப் பகைத்துக் கொண்டு இந்த ஊரில் இருக்க முடியாது என்றும் அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோபிநாத் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. அப்போது, வயது முதிர்ந்த முத்துசாமி, கோபிநாத்தின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அவர் கைகூப்பி மன்னித்துவிடும்படி கண்ணீரோடு கேட்டிருக்கிறார். இந்த சம்பவங்களை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடவே, அந்த வீடியோ வைரலாகியிருக்கிறது. இந்தசூழலில், கோபிநாத் அன்னூர் காவல்நிலையத்தில் முத்துசாமிக்கு எதிராக புகார் கொடுத்திருக்கிறார். அரசு அலுவலகத்திலேயே அரசு ஊழியரை காலில் விழவைத்து மன்னிப்புக் கேட்கவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இது சாதியரீதியிலான பிரச்னை இல்லை எனவும் முத்துசாமி இதுதொடர்பாக புகார் கொடுக்கப்போகிறாரா என்பது குறித்தும் தனக்குத் தெரியாது என வி.ஏ.ஓ கலைச்செல்வி தெரிவித்தார்.