வீடு புகுந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, மிரட்டி பணம், நகை பறிப்பில் ஈடுபடும் நபரை சென்னை போலீஸார் ஓசூரில் கைது செய்தனர். பழைய பாணியில் திருடினால் சிக்கிவிடுவோம் என்ற எண்ணத்தில் பூட்டிய வீடுகளில் திருடியதாக போலீஸாரிடம் அவர் கூறியிருக்கிறார்.
சென்னை வடபழனியைச் சேர்ந்த மோகன் வடிவேல் என்பவர் குடும்பத்துடன் ஊருக்குச் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டில் இருந்த 3 பவுன் நகைகள், ரூ.4,500 பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளைபோயின. இதுகுறித்து அவர் வடபழனி காவல்நிலையத்தில் கடந்த ஜூலை 21-ல் புகாரளித்திருந்தார். அதேபோல், வடபழனி பக்தவச்சலம் காலனி பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் என்பவரது வீட்டில் 3 சவரன் நகை, 8,000 ரூபாய் பணம் திருடப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

புகாரை அடுத்து வழக்குப் பதிந்து வடபழனி தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் இரண்டு கொள்ளை சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளில் பதிவானவர்களை பழைய குற்றவாளிகளின் முகங்களோடு ஒப்பிட்டு விசாரணை நடத்தியதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் அறிவழகன் என்பது தெரியவந்தது.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு, பின்னர் வீடு புகுந்து அவர்களை வன்கொடுமை செய்து மிரட்டி திருட்டில் ஈடுபடுவது அறிவழகனின் வழக்கம் என்கிறார்கள் போலீஸார். இதுவரை 20-க்கும் மேற்பட்ட பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தரப்பில் சொல்லப்படுகிறது. பட்டதாரியான அறிவழகன் மீது சென்னை கிண்டி, சைதாப்பேட்டை காவல்நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

கொள்ளை வழக்குகள் தொடர்பாகக் கடந்த 2019, 2020-ம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் வேலூர் சிறையில் இருந்து 15 நாட்களுக்கு முன்னர் ரிலீஸாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அறிவழகன் ஓசூரில் பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்தனர். ஓசூர் சென்று அறிவழகனைக் கைது செய்து சென்னை அழைத்து வந்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பழைய பாணியில் கொள்ளையடித்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வந்தாக போலீஸாரிடம் அவர் கூறியதாகத் தெரிகிறது. அறிவழகனிடமிருந்து 10 சவரன் நகைகள், ரூ.90,000 பணத்தைக் கைப்பற்றிய போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.