விமான நிலையங்களில் சோதனை என்ற பெயரில் தனது செயற்கைக் கால் அப்புறப்படுத்தப்பட்டு ஒவ்வொரு முறையும் சோதிப்பது தனக்குப் பெரும் வலியை ஏற்படுத்தியிருப்பதாகவும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகையும் பரத நாட்டியக் கலைஞருமான சுதா சந்திரன் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார்.
சுதா சந்திரன்
திருச்சியை அடுத்த வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் நடிகையும் பரத நாட்டியக் கலைஞருமான சுதா சந்திரன். மயூரி தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் பிரபலமானவர். பல்வேறு பாகங்களாக வெளியான நாகினி தொடர் மூலம் இவர் பரவலாகக் கவனம் பெற்றவர். கடந்த 1981-ல் சென்னையில் இருந்து பெற்றோருடன் காரில் வந்துகொண்டிருந்தபோது திருச்சி அருகே சாலை விபத்தில் சிக்கினார். இதில், அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அந்த காலை அகற்றிவிட்டு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. செயற்கைக் கால் பொருத்தப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பரத நாட்டியத்தில் சாதித்து வருகிறார்.
வீடியோ வெளியிட்டு வருத்தம்
சுதா சந்திரன் பரத நாட்டிய நிகழ்ச்சிகள், படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு, உள்நாட்டில் பல பகுதிகளுக்கு விமானம் மூலம் சென்று வருவது வழக்கம். தனது பயணங்களின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் அவர் வேதனையோடு பகிர்ந்திருந்தார். அதில், விமான நிலையங்களில் பரிசோதனையின்போது தனது செயற்கைக் காலை ஒவ்வொரு முறையும் அகற்றச் செய்து பரிசோதிப்பதாகவும், இதனால் கடுமையான வலியை அனுபவிப்பதாகவும் அவர் பகிர்ந்திருந்தார். மேலும், மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் சலுகையை மாற்றுத்திறனாளிகளுக்கும் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி, மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த விவகாரம் வைரலான நிலையில், சுதா சந்திரனிடமி விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சி.ஐ.எஸ்.எஃப் சார்பில் மன்னிப்புக் கோரப்பட்டிருக்கிறது. “உங்களுக்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். விதிமுறைகளின்படி, செயற்கை கால் போன்றவை அசாதாரண பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் சூழலில் மட்டுமே அகற்றப்பட வேண்டும். பணியில் இருந்த பெண் பாதுகாப்பு அதிகாரி என்ன காரணத்துக்காக சுதா சந்திரனின் செயற்கைக் காலை அகற்றச் சொன்னார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் விதிமுறைகள் எதிர்வரும் காலங்களில் பின்பற்றப்படும் என்று சுதா சந்திரனுக்கு உறுதியளிக்கிறோம்’’ என்று சி.ஐ.எஸ்.எஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Also Read – `கமர்ஷியல் கிங்’ கே.எஸ்.ரவிக்குமார் பற்றி உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்? #Quiz