கோவையில் கொரோனா மாரியம்மன் என்ற பெயரில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 48 நாட்கள் கோயில் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வரும் நிலையில், கோவை இருகூர் அருகே காமாட்சிபுரம் ஆதீனம் சக்தி பீடத்தில் கொரோனா மாரியம்மன் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக் கோரி வழிபாடுகளும் தொடர்ச்சியாக 48 நாட்கள் பூஜையும் செய்யப்படும் என காமாட்சிபுரம் ஆதீனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் கவனம் பெற்றிருக்கிறது.
இதேபோல் தமிழகத்தில் இருக்கும் வித்தியாசமான கோயில்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா….
எம்.ஜி.ஆர் கோயில்

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்கள் சென்னை திருநின்றவூர் அருகிலுள்ள நத்தமேடு கிராமத்தில் கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள். அப்பகுதியைச் சேர்ந்த தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான கலைவண்ணன் என்பவரால், கடந்த 2011ம் ஆண்டு இந்தக் கோயில் கட்டப்பட்டது. சொந்தப் பணம் மூலமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடைகள் மூலமாகவும் கோயிலைக் கட்டியிருக்கிறார் கலைவண்ணன்.
கருணாநிதி கோயில்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தி.மு.க மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த 2010ம் ஆண்டு கோயில் கட்டினார். சுமார் இரண்டரை லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட அந்த கோயிலில் கருணாநிதியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டு தினமும் மூன்று வேளை பூஜை செய்யப்பட்டது. அதன்பின்னர், அனுமதியின்றி கோயில் கட்டியதாக அந்தக் கோயில் அதிகாரிகளால் அகற்றப்பட்டது.
குஷ்பு
ஒரு காலத்தில் தமிழின் முன்னணி நடிகையாக விளங்கிய குஷ்புவுக்கு திருச்சி அருகில் ரசிகர்கள் கோயிலொன்று கட்டியதாகத் தகவல் வெளியானது. அவருக்கு கோயில் மட்டுமல்லாது குஷ்பு இட்லி என்ற பெயரில் இட்லியும் செம பேமஸ். குஷ்புவுக்கு கோயில் கட்டியதாக எந்தவொரு புகைப்படமும் இதுவரை வெளியாகவில்லை. நடிகை ஹன்சிகாவுக்குக் கோயில் கட்டுவதாக ரசிகர்கள் அவரிடம் கேட்டபோது அதை அவர் மறுத்துவிட்டார். `நடிகைகளுக்குக் கோயில் கட்டுவது தவறு. நடிகைகளை அந்த அளவுக்கெல்லாம் கொண்டு சென்றுவிடாதீர்கள்’ என ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார் ஹன்சிகா.
நமீதா
நடிகை நமீதாவின் தீவிர ரசிகர்கள் அவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் கோயில் கட்டியிருப்பதாக ஒரு தகவல் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. நெல்லை அருகே ஜோனி என்ற ரசிகர் கட்டிய அந்தக் கோயிலை நமீதாவை வைத்தே திறக்க 2008ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. பின்னர், திறப்புவிழா காணாமலேயே அது முடங்கியது.
நிதி அகர்வால்

நடிகைகளுக்கான சிலை வைக்கப்பட்ட வரிசையில் சமீபத்திய வரவு நித்தி அகர்வால். சிம்புவுடன் ஈஸ்வரன், ஜெயம் ரவியுடன் பூமி ஆகிய படங்களில் நடித்த நிதி அகர்வாலுக்கு சென்னை காட்டுப்பாக்கம் பகுதி ரசிகர்கள் சிலை வைத்து கோயிலொன்றைக் கட்டினர். அந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்யும் போட்டோக்களும் இண்டர்நெட்டின் சமீபத்திய சென்சேஷன்.
இது தவிர நடிகர் ரஜினிக்கு கர்நாடகாவிலும் அமிதாப் – சல்மான் கானுக்கு மகாராஷ்டிராவிலும், சச்சின் டெண்டுல்கருக்கு பீகாரிலும் ரசிகர்கள் கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். உ.பி முதல்வர் மாயாவதிக்கும் பகுஜன் சமாஜ் தொண்டர்கள் அம்மாநிலத்தில் கோயிலொன்றைக் கட்டியிருக்கிறார்கள்.