இயக்குநர் இமயம் என்று ரசிகர்களால் போற்றப்படும் இயக்குநர் பாரதிராஜா இன்று 79-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
தேனி அல்லிநகரத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் கிராமத்துக் கதைகளுக்கு தனி இலக்கணம் படைத்தவர் பாரதிராஜா. ஆறு முறை தேசிய விருது வென்றிருக்கும் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகள் பட்டியல் கொஞ்சம் நீளமானது. பாரதிராஜா பற்றிய 3 சுவாரஸ்யத் தகவல்கள், அவர் கலக்கிய கேரக்டர்கள், அவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் ஆகியவை பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
பாரதிராஜா – மூன்று தகவல்கள்!
- பாரதிராஜாவின் முதல் படமான `16 வயதினிலே’-வில் இளையராஜாவுடன் இணைந்தார். அந்தப் படத்தில் சிறந்த பாடகிக்கான தேசிய விருது எஸ்.ஜானகிக்குக் கிடைத்தது. இதுதவிர சிறந்த இயக்குநர் உள்பட மாநில அரசின் 4 விருதுகளையும் அந்தப் படம் வென்றது. அப்போது தொடங்கி பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தது பாரதிராஜா – இளையராஜா காம்போ. ஆனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேதம்புதிது படத்துக்கு தேவேந்திரனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார் பாரதிராஜா. அதன்பின்னர், ரஜினியின் கொடிபறக்குது படத்துக்கும் ஹம்சலேகா என்பவரை இசையமைப்பாளராக்கினார். சிறிதுகாலம் சமாதானபின்னர், என்னுயிர் தோழன், புதுநெல்லு பூத்தது மற்றும் நாடோடித் தென்றல் படங்களில் இளையராஜாவுடன் பணியாற்றினார். மீண்டும் கருத்துவேறுபாடு ஏற்படவே கிழக்கு சீமையிலே படத்துக்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆத்தா என்ற படத்தில் மீண்டும் இந்த காம்போ கைகோர்க்க இருக்கிறது.
- தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த கே.பாக்யராஜை நடிகராக அறிமுகப்படுத்தியது பாரதிராஜாதான். அதற்கு அவர் சொன்ன காரணம்.
உதவி இயக்குநராக இருந்தபோது அவர் நடிகர்களுக்கு வசனம் சொல்லிக்கொடுக்கும் முறையை உற்று கவனித்தேன். ஒரு விதமான வித்தியாசமான முறையில் சொல்லிக்கொடுப்பார் பாக்யராஜ். அவரைப் பார்க்கும்போது எனக்கு நடிக்க வைக்க வேண்டும் என்று தோன்றியது. கண்ணாடியை மாட்டி ஒரு ஹீரோவை உருவாக்கினேன். அப்போது சிலர் என்னிடம் கேட்டார்கள்.
உங்களுக்கு என்ன பைத்தியமா? என்று, நான் அவர்களிடம் சொன்ன ஒரே பதில், `என் கண்ணுக்கு கதாநாயகனாகத் தெரிகிறான் பாக்யராஜ்’ என்பதுதான். அதன்பின்னர் தனது தனித்திறமையைக் கொண்டு உயரத்துக்கு சென்றார் பாக்யராஜ்’. - அவர் இயக்கிய முதல் டிவி சீரியல் `தெக்கத்திப் பொண்ணு’. 2008-ல் கலைஞர் டிவியில் அந்தத் தொடர் ஒளிபரப்பானது. அதையடுத்து, அப்பனும் ஆத்தாளும், முதல் மரியாதை ஆகிய சீரியல்களையும் அவர் இயக்கினார். அதன்பின்னர், அவர் டிவி சீரியல்களை இயக்கவில்லை.
இரண்டு கேரக்டர்கள்
இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் பாரதிராஜா ஜொலித்திருக்கிறார். அவர் நடிப்பில் இரண்டு கேரக்டர்களைப் பார்க்கலாம்.
பாண்டிய நாடு
இயக்குநர் சுசீந்திரன் உருவாக்கத்தில் விஷால் நடித்த படம் பாண்டிய நாடு. இதில், விஷாலின் தந்தையாக கனமாக கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பாரதிராஜா. தனது மூத்த மகனைக் கொன்ற வில்லனை ரகசியமாகப் பழிவாங்க முயற்சி எடுக்கும் வயது முதிர்ந்த தந்தை கேரக்டர். அந்த கேரக்டரில் பாரதிராஜாவின் நடிப்புப் பரவலாகப் பாராட்டைப் பெற்றது.
குரங்கு பொம்மை
நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய திரில்லர் படமான குரங்கு பொம்மையில் விசுவாசமான தொழிலாளியாக நடித்திருப்பார். விதார்த் ஹீரோவாகவும் பி.எல்.தேனப்பன் வில்லனாகவும் நடித்திருந்த அந்தப் படத்தில் பாரதிராஜாவின் நடிப்பு கவனம்பெற்றது.
ஒரு சம்பவம்
உதவி இயக்குநராக வாய்ப்புக் கிடைக்காத காலங்களில் தேனாம்பேட்டையில் சினிமா படங்களை வாங்கி விற்கும் கோதண்டபாணி என்பவரிடம் 2 ரூபாய் சம்பளத்துக்கு பாரதிராஜா வேலை பார்த்தார். அப்போது நடிகர் நாகேஷின் `சர்வர் சுந்தரம்’ படத்தை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் விநியோகஸ்தர்களுக்கு கோதண்டபாணி திரையிட்டுக் காட்டியிருக்கிறார். அன்று கோதண்டபாணியுடன் மகிழ்ச்சியோடு ஏ.வி.எம் ஸ்டூடியோ சென்ற பாரதிராஜாவை ஒருவர் இருக்கையில் இருந்து தட்டி எழுப்பியிருக்கிறார்.
அப்போது ஏ.வி.எம். ஸ்டூடியோவின் மேனேஜராக இருந்தவர், யார் நீ... இங்கே ஏன் வந்தாய்?’ என்று கேட்டதோடு, சட்டையைப் பிடித்து கேட் வரை கொண்டுவந்து வெளியே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா,
அப்போது அழுகையே வந்துவிட்டது. அப்போது முடிவு செய்தேன். ஒரு பொழுதாவது இயக்குநராகவோ, நடிகராகவோ இதே இடத்தில் வந்து நிற்க வேண்டும்’ என்று ஏ.வி.எம் வாசலில் நின்று உறுதி எடுத்தேன். நான் இயக்குநராக உருவான பிறகு ஏ.வி.எம் நிறுவனமே என்னைப் படம் இயக்க அழைத்தது’ என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருந்தார்.
Also Read – இயக்குநர் பாரதிராஜா ஃபேனா நீங்க.. உங்களுக்கான குவிஸ்தான் இது!