பொற்காலம் படம் | அது அருணாச்சலம் படத்தோட வெற்றிவிழா. ரஜினிகாந்த் பேச வந்தார். அப்போ முதலா ஒரு புதுமுக இயக்குநரை பெயரை சொல்லி கூப்பிடுறார். அந்த இயக்குநரும் வர, அவருக்கு தங்க சங்கிலி பரிசா கொடுக்கிறார். கூட்டத்துல இருந்த எல்லோருக்கும் அவ்ளோ ஆச்சர்யம். இது யார்? ஏன் இவருக்கு கொடுக்கிறார்?னு சலசலப்பும் உருவாச்சு. அப்போ ரஜினியே அதுக்கு பதில் சொன்னார், ‘உடல் ஊனமுற்றவர்களுக்கும் வாழ்க்கை கொடுக்கணும் அப்படிங்குற கருத்தை அழகான படமா கொடுத்துருக்கீங்க. இந்த மேடையில உங்களை வாழ்த்த ஆசைப்பட்டேன்’னு சொன்னார். பரிசு வாங்கின அந்த இயக்குநர் சேரன். ரஜினி குறிப்பிட்ட அந்த படம் ‘பொற்காலம்’. 25 வருடங்களை நிறைவு செய்ய காத்திருக்கும் அந்த சினிமா ஜெயிச்சதுக்கான காரணத்தைத்தான் இந்த வீடியோல பார்க்க போறோம்.
பொற்காலம் கதை
வாய் பேச முடியாத தங்கச்சிக்கு கல்யாணம் முடிச்ச பின்னாலதான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு முடிவோட இருக்கிறார், அண்ணன் முரளி. அந்த அண்ணன் விரும்புற பெண் மீனா. அண்ணனை விரும்புற பெண் சங்கவி. தன் தங்கைக்கு கல்யாணம் செஞ்சு வைச்சாரா?, மீனாவோட திருமணம் நடந்ததா? அப்படிங்குறதுதான் மீதிக் கதை.
சேரன்
தமிழ்சினிமாவுல இயக்குநரா மனித வாழ்வியல்களை பேச துணிச்சலோட களமிறங்கினவர், சேரன். தமிழ் சினிமாவில் இயக்குநரா ஜெயிக்கணும்னா காதல் படம் எடுக்கணும். அப்போதான் ஈஸியா டைரக்டரா ஆக முடியும்னு இருந்த காலக்கட்டம். ஆனா, அறிமுகப்படமான பாரதி கண்ணம்மாவில் காதலை வேறு கோணத்தில் காட்டி இயக்குநராக மாறியிருந்தார். அதன் பின்னர் வித்தியாசமான இயக்குநராக தன்னை அடையாளம் காட்ட அவர் எடுத்த படம்தான் பொற்காலம். அதை மிகச் செம்மையாக செய்தார். மாற்றுத் திறனாளியோட பிரச்சினையை எடுத்துச் சொன்னது ‘பொற்காலம்’. மண்சார்ந்து எதார்த்த வாழ்வியலை அச்சு அசலாக பதிவு செய்திருந்தார் சேரன். கொஞ்சம் பிசகினாலும் காயத்தை கொடுக்கும் கத்தி மேல் நடக்கிற கதையை கச்சிதமாக படமாக்கியிருந்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான குரலா ஒலிச்சது பொற்காலம். ஹீரோ பில்டப், பன்ச் டயலாக்னு எதுவும் இல்லாத யதார்த்தமான காட்சிகளால படம் தரமா இருந்தது. இந்த மாதிரியான படத்தைக் கொடுத்த படைப்பாளி சேரனை எவ்ளோ வேணாலும் பாராட்டலாம்.
காஸ்டிங்
ஹீரோயிசம் இல்லாத கிராமத்து இளைஞனா ஒரு மாற்று திறனாளி பெண்ணோட ணின் அண்ணனுமாக முரளி ‘மாணிக்கம்’ என்னும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். ‘இந்த ஊமைப்பொண்ணை யாருப்பா கல்யாணம் செஞ்சிக்குவாங்க?’னு கேட்குற ஊர்மக்கள்கிட்ட முரளி பேசுற வசனங்கள் நெத்தியடி. முரளி சோலோ ஹீரோவா குடுத்த கடைசி ஹிட் படமும் பொற்காலம்தான். முரளியோட கொள்கைக்காக காதலை தியாகம் செய்ற மீனாவும், முரளியை ஒருதலையாக காதலிக்கும் சங்கவியும் இயல்பா தன்னோட நடிப்பை கொடுத்திருப்பாங்க. அநேகமா சங்கவிக்கு நடிப்பு வரும்னு அந்த படத்துலதான் சேரன் கண்டுபிடிச்சார்னுகூட சொல்லலாம். அதுவும் முரளியோட சங்கவி செய்ற குறும்புகள் ரொம்பவே யதார்த்தமா இருக்கும். அதேபோல மீனா நடிலச்சதுலேயே பத்து படங்கள் பட்டியல் அதுல பொற்காலத்துக்கு முக்கியமான இடம் இருக்கும். வாய்பேச முடியாத தங்கை கதாபாத்திரத்துல நடிச்சிருந்த ராஜேஸ்வரி, நிஜத்துலயும் வாய்பேச வராதுனு நம்புற அளவுக்கு அற்புதமான முகபாவங்கள் கொடுத்து கதையை தாங்கியிருந்தார். அதுவும், ‘அண்ணே… நீ மரகதத்தை விரும்பற விஷயத்தை என்கிட்டே சொல்லாம மறைச்சிட்டே, பாத்தியா’ங்குற டயலாக்கை வாய் பேச முடியாம ராஜேஸ்வரி கண்கள், புருவம், மூக்கு, உதடுகள்னு முகபாவனைகள்ல பேசியிருப்பார். நடிகனாக வடிவேலுவுக்கு இந்தப் படம் மிகப்பெரிய மைல்கல். முரளிகிட்ட வடிவேல் பேசுற அந்த ஒரு டயலாக் ‘நான் கருப்பா இருக்கேன்னுதானே என்னிடம் கல்யாணம் செஞ்சுக்கிறியா?ன்னு கேட்கலை?’ங்குற அந்த இடம் மொத்த தியேட்டரையும் கண்கலங்க வைச்சார். தேவர் மகனுக்குப் பின்னால மறுபடியும் நடிப்பை நிருபிச்சார், வடிவேலு.
Also Read – இவங்க சிரிப்பு போலீஸ் இல்லை.. சின்சியரான எமோஷனல் போலீஸ்!
தேவா
இந்தப் படத்துக்காக தேவா தன் முழு உழைப்பையும் கொட்டி வேலை செய்திருந்தார். இதுபோக சபேஷ்-முரளியோட இசை உதவியும் படத்துக்கு மிகப்பெரிய பலம். பாடல்கள் எல்லாமே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பின. சிங்குச்சா பாட்டு இளம்பெண்களின் ஆதர்சனமான பாட்டா மாற, தஞ்சாவூரு மண்ணு எடுத்து தமிழின் பெருமைகளை பேசுற பாடலாவும், இளைஞர்களோட காதல் பாடலாவும் அமைந்தது. ஊனம் பற்றிய வடிவேலு பாடும் பாடல் விழிப்புஉணர்வு பாடலானது. படம் முழுக்க மண்மணம் வீச வைத்து கானாவுக்கு மட்டும் நான் பேமஸ் இல்ல, கிராம இசையும் வரும் என காட்டியிருந்தார், தேவா. அதுலயும் ‘தஞ்சாவூரு மண்ணுயெடுத்து’ பாட்டு சிங்கப்பூர் ஜனாதிபதியா பதவி வகிச்ச தமிழர் எஸ்.ஆர். நாதனை அடக்கம் செய்யும் முன்னால இந்த பாட்டைத்தான் இசையமைச்சு தன்னோட அஞ்சலியை செலுத்தினது சிங்கப்பூர் அரசு நிர்வாகம்.
மனித உணர்வுக்கான சாம்பிள்!
ஊர் மக்கள் எல்லாரும் சரஸ்வதி சபதம் பார்த்துக்கிட்டிருப்பாங்க. அப்போ சிவாஜிக்கு வரம் கிடைச்சு பேசுற சீன் ஓடும். இதை எல்லோரும் அமைதியா பார்க்குறப்போ முரளியோட தங்கச்சி மட்டும் கையை தட்டுவார். உடனே எல்லோரும் ஊமை பேசின உடனே சந்தோஷத்தைப் பாருனு கரிசனத்தோட சொல்வாங்க. ஆனா படத்துல காட்டுனதுக்கு கை தட்டியிருக்க மாட்டாங்க. இந்த ஒரு காட்சியிலயே மனித உணர்வுகளை எதார்த்தமா பதிவு பண்ணியிருப்பார் சேரன். இது ஒரு சாம்பிள்தான். இது மாதிரி பல காட்சிகளை சொல்லிக்கிட்டே போகலாம்.
பொற்காலம் தமிழ்நாடு முழுக்க 175 நாட்களுக்கும் மேல ஓடி வெள்ளிவிழா கண்டது. இந்த வெற்றியால பல மொழிகள்ல ரீமேக் ஆச்சு. சேரனுக்கும், மீனாவுக்கும் தமிழக அரசோட மாநில விருதும் கிடைச்சது. கிராமங்களை இயல்பு கெடாம காட்டுன விஷயம்தான் மக்கள் ஈஸியா கனெக்ட் ஆகி படத்தை கொண்டாட காரணமா இருந்தது. பொற்காலம் பத்தின உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.
Very interesting topic, thanks for posting.Money from blog