தமிழ் நாட்டின் 16-வது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் யார்? என்பதில், நீடித்த இழுபறி 3 நாட்களுக்குப் பிறகு, முடிவுக்கு வந்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, அந்தப் பதவிக்குத் அ.தி.மு.க சார்பில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
66 எம்.எல்.ஏ-க்களை வென்று தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள அ.தி.மு.க-வின், சட்டமன்றக் குழுத் தலைவர்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற முடியும். அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவராக, அந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களால், தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். இந்தப் பொறுப்பு கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையானது என்பது மூலம், அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். மேலும், கட்சியில் செல்வாக்கு உள்ளவர்களும், கட்சியின் உச்ச அதிகாரத்தைப் பெற்றவர்களும் மட்டுமே சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக வர முடியும் என்பதுதான் தமிழக அரசியல் வரலாற்றின் எழுதப்படாத விதியாக உள்ளது. அந்தவகையில், அ.தி.மு.க-வின் கழக ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் இருந்தாலும், கட்சிக்குள் செல்வாக்கு என்பது இ.பி.எஸ்-ஸிடமே இருக்கிறது என்பதும் உறுதிப்பட்டுள்ளது.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்தபிறகு, அவருடைய தோழி சசிகலா, அந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றதாலும், ஓ.பி.எஸ் தர்மயுத்தம் என்ற பெயரில் கட்சியை விட்டு வெளியேறி தனி அணியாகச் செயல்பட்டதாலும், அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவி கேள்விக்குறியானது.
ஆனால், பிறகு, ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் சமாதானம் செய்யப்பட்டு, இருவரும் இணைந்து கட்சி ஒன்றானாலும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒன்றாகவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் , இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளுக்குள் மோதிக்கொண்டே இருந்தனர். ஆனால், கடந்த ஆட்சியின் முதலமைச்சர் பொறுப்பு இ.பி.எஸ்ஸிடம் இருந்ததால், அவரது கையே ஒவ்வொரு முறையும் ஓங்கி இருந்தது. அதனால், ஆட்சியை இழந்த பிறகாவது தனது செல்வாக்கை கட்சிக்குள் உயர்த்திக் கொள்ள விரும்பிய ஓ.பி.எஸ் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவியைக் குறிவைத்து காய் நகர்த்தினார். அதனால், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடும் போட்டி ஏற்பட்டது.
கடந்த 7-ம் தேதி, ராஜ்பவனில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அதேநாளில், அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஓ.பி.எஸ்ஸூம், இ.பி.எஸ்ஸூம் பலப்பரீட்சை நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால், அந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதையடுத்து, அந்தக் கூட்டம் இன்று(10-ம் தேதிக்கு) ஒத்தி வைக்கப்பட்டது.
3 மணிநேரம் நடந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருந்ததையடுத்து, ஓ.பி.எஸ் கோபித்துக் கொண்டு, கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அவர் வெளியே சென்ற சில நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி, தமிழ் நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற அறிவிப்பு வெளியானது.
ஓ.பி.எஸ் தரப்பு வாதம் என்ன?
கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ், “எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர்தான், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். ஜெயலலிதா காலத்திலும் அதுவே நீடித்தது. தற்போது, கட்சியில் பொதுச் செயலாளர் பதவி இல்லை. மாறாக, கட்சியின் உச்சபட்ச அதிகாரப் பதவியான கழக ஒருங்கிணைப்பாளராக தான் உள்ளதால், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் தன்னையே தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று பேசினார்.
அதையடுத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “முதலமைச்சராகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும் இருந்தவரே சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் இருப்பது பொருத்தம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அதுதான் நடைமுறை, அதனால், தன்னைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றார்.
அதற்குப் பதில் சொன்ன ஓ.பி.எஸ், “ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும், அவர் இறந்தபிறகும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது நான் தான். ஆனால், சசிகலா குடும்பத்தின் அழுத்தத்தினாலும், கட்சியின் முன்னோடிகளான நீங்கள் அனைவரும் கேட்டுக் கொண்டதாலும் அந்த நேரத்தில் என் பதவியை நான் ராஜினாமா செய்தேன். அப்போது, நீங்கள் எல்லாம், என்னிடம் கோரிக்கை வைக்கவில்லை என்றால், கடைசிவரை நானே முதலமைச்சராகவே தொடர்ந்திருப்பேன்.
அதன்பிறகு, முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை, தேர்தல் ஆணையம் என்னிடம்தான் ஒப்படைத்தது. உங்களுக்கு அதிக எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அந்த நேரத்தில் இருந்தாலும், அவைத் தலைவர் என் அணியில் இருந்ததால், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, இரட்டை இலையும், கட்சியின் அங்கிகாரமும் எனக்குத்தான் கிடைத்தது. அதையடுத்து, என்னுடன் வந்து நீங்கள் இணைந்து கொண்டீர்கள். ஆனால், அதை நான் உங்களோடு வந்து சேர்ந்ததாகப் பிரசாரம் செய்தீர்கள். மேலும், ஒன்றாக இணைந்தபோது, முதலமைச்சர் பதவியை, ஆளுக்கு தலா இரண்டு ஆண்டுகள் என்ற கணக்கில் ஏற்று நடத்துவது என்றுதான் பேசப்பட்டது. ஆனால், சொன்னபடி இரண்டு ஆண்டுகள் கழித்து முதலமைச்சர் பதவியை என்னிடம் தரவில்லை. கட்சியின் ஒற்றுமைக்காக நானும் அதை பெரிதுபடுத்தவில்லை.
சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும்போது, முதலமைச்சர் வேட்பாளர் என உங்கள் பெயரை அறிவித்தபோதும், என்னால், கட்சியின் தேர்தல் வெற்றிக்கு குந்தகம் வரக்கூடாது என்று நினைத்து, பொறுமையாக இருந்தேன். எனது விட்டுக் கொடுக்கும் குணத்தை மதிக்காமல், தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர் நியமனத்தை தன்னிச்சையாக செய்தீர்கள். நீங்களும் (எடப்பாடி பழனிசாமி), உங்கள் மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களும்(தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன்) எல்லா தொகுதிக்கும் வேட்பாளர்களை நியமனம் செய்தீர்கள்.
கொங்கு மண்டலத்தையும், வட தமிழ்நாட்டையும் நீங்கள் எடுத்துக் கொண்டு, காவிரி டெல்டா மாவட்டங்களையும், தென் தமிழ்நாட்டையும் எனது பொறுப்பில் கொடுத்திருந்தால், இன்னும் அதிக இடங்களில் ஜெயித்திருக்கலாம். அதையும் நீங்கள் செய்துதரவில்லை.
உங்களையும், உங்கள் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தீர்கள். அதையே பிரதான பிரசாரமாகச் செய்து, தெற்கிலும், டெல்டாவிலும் தி.மு.க அதிக இடங்களைப் பிடித்தது. நாம், அதிக இடங்களில் தோற்றோம். அதைவிட பிரதானம், வன்னியர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களிலும் நமக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இப்படி தோல்விக்கும் காரணமாகிவிட்டு, எல்லா பதவிகளையும் நீங்களே எடுத்துக் கொள்வீர்கள் என்றால், பிறகு, நாங்கள் எப்படி அரசியல் செய்வது? இப்போது இந்தப் பதவியையும் விட்டுக் கொடுத்தால், எதிர்காலத்தில் அரசியலில் நாங்கள் முழுமையாகக் கெட்டுத்தான் போவோம்’’ என்று கொந்தளித்துவிட்டார் ஓ.பி.எஸ்.
ஆனால், இருக்கிற 66 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில், கொங்கு மண்டலத்திலும், வட தமிழ்நாட்டிலும் வெற்றி பெற்ற சுமார் 40 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள். அதனால், அவர்கள் ஓ.பி.எஸ் வாதங்களை காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, கட்சியை கடந்த 4 வருடங்களில் சசிகலா குடும்பத் தொல்லைகளில் இருந்து காப்பாற்றி, ஆட்சியையும் சிறப்பாக நடத்திய காரணத்தால், அவரையே தேர்வு செய்யப் போவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, வெறுப்படைந்த ஓ.பி.எஸ் கூட்டரங்கைவிட்டு, கோபித்துக் கொண்டு வெளியேறினார். அவர் வெளியே சென்ற சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இதன்மூலம், தற்போதைக்கு கட்சியிலும் தனது கொடிதான் பறக்கிறது என்று நிரூபித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இனி ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து வரும் அறிக்கையைப் பொறுத்துத்தான், அ.தி.மு.க-வின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியும்.
Also Read – 1952 முதல் 2016 வரை… தமிழகத்தின் 15 சட்டப்பேரவைத் தேர்தல்களில் என்ன நடந்தது? #ரீவைண்ட்