லத்தீன் அமெரிக்காவில் நடந்த கம்யூனிசப் புரட்சியின் நம்பிக்கை முகம், கியூபா மண்ணை முதல் பொதுவுடைமை அரசாக மாற்றிய புரட்சிப் போராளி ஃபிடல் காஸ்ட்ரோ. உலகில் கம்யூனிச ஆட்சிகள் வீழ்ந்து கொண்டிருந்த நிலையில், தன் மிகப்பெரிய எதிரியாகக் கருதப்பட்ட அமெரிக்காவின் முன் செந்நிறக் கொடியை பறக்கவிட்டவர். கியூபாவை மக்களிடம் அளித்து அழகுபார்த்த மாபெரும் தலைவராக அவர் அரசியல் விமர்சகர்களால் புகழப்பட்டவர்.
1945 ஆம் ஆண்டு ஹவானா பல்கலைக்கழகச் சட்டப்பள்ளியில் படிக்கும்போது மேடைப்பேச்சாளராக உருவாகி, தன் வாதத் திறன்களை மெல்ல வளர்த்துக்கொண்டார். இங்குதான் ஃபிடலுக்கு காதல் முதல் அரசியல் வரையிலான எதிர்கால வாழ்வின் அடித்தளங்கள் அத்தனையும் தொடங்கப்பட்டன. பின்னர் நடந்ததெல்லாம் நாம் அறியும் உலகப் புரட்சியின் வரலாறு.
ஆனால் ஃபிடலுக்கும், இந்தியாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. உலக அளவில் இயற்கை விவசாயத்தில் முன்னணியில் உள்ள நாடு கியூபாதான். கியூபா சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்க்கச் சொல்லி அறிவித்தது. அதேபோலக் கியூபா மக்களும் முருங்கை மரங்களை வளர்க்க ஆரம்பித்தனர். ஃபிடல் காஸ்ட்ரோவும் தன் வீட்டில் முருங்கை மரத்தைப் பராமரித்து வந்தார். இந்த முருங்கை இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட முருங்கை என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். இந்தியாவிலிருந்து கியூபாவுக்கு முருங்கையைக் கொண்டு போனதற்குப் பின்னால் மிகப்பெரிய சம்பவமே நடந்திருக்கிறது.
கியூபாவின் அருகில் உள்ள ஹைட்டி தீவுப் பகுதியில் 2010-ம் வருஷம் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ஃபிடல் தனது நாட்டிலிருந்த மருத்துவக் குழுவை அனுப்பி உதவி செய்ய வைத்தார். உதவி செய்யச் சென்ற மருத்துவக் குழு ‘பூகம்பத்தால் அதிகமான மக்கள் இறந்திருக்கிறார்கள், இங்குக் காலராவும் பரவிக் கொண்டிருக்கிறது’ என ஃபிடலுக்கு தகவல் அனுப்பியது. இந்தத் தகவல் கேள்விப்பட்டவுடனே கியூபாவின் முக்கிய மருத்துவத்துறைத் தலைவர்களையும், முக்கியமான அதிகாரிகளையும் அழைத்து அவசர கூட்டம் போட்டார். அந்தக் கூட்டத்திலிருந்த பின்லே இன்ஸ்ட்டியூட் என்கிற மருத்துவ ஆராய்ச்சி மைய டாக்டர் கெம்பா ஹெர்கோ ‘ஹைட்டி தீவு மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கக்கூடிய பொருள் இந்தியாவில் இருக்கிறது என்று ஆலோசனை சொன்னார். உடனே கொண்டு வரச் சொல்லி மருத்துவர் கெம்பாவை கையோடு அனுப்பி வைத்துவிட்டார். அவர் முதன்முதலில் இந்தியாவில் வந்து இறங்கியதும் தமிழ்நாட்டில்தான். இங்குதான் டாக்டர் கெம்பா முருங்கையின் மருத்துவ குறிப்புகள், சாகுபடி முறைகள் எனப் பல தகவல்களையும் சேகரித்தார். அதன்பின்னர் கேரளா, ஆந்திரா எனப் பல மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று தகவல்களைச் சேகரித்துக் கொண்டு கியூபா கிளம்பினார். கிளம்பும்போது கையோடு சில முருங்கைச் செடிகளை எடுத்துக் கொண்டு போனார். அதன் பின்னர் கியூபா சார்பில் இந்தியாவிலிருந்து முருங்கைக் கீரைகளை இறக்குமதி செய்து ஹைட்டி தீவு மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. காலரா நோயும் அதன்பின்னர் கட்டுக்குள் வந்திருக்கிறது. அதன்பின்னர் கியூபா அரசும், மக்களுக்கு முருங்கையின் அவசியத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி வளர்க்கச் செய்தது.
அந்த டாக்டர் கெம்பா எடுத்துச் சென்ற முருங்கை மரத்தில் ஒன்றை ஆர்வமாக ஃபிடல் காஸ்ட்ரோ வாங்கி தனது வீட்டுத்தோட்டத்தில் வைத்துப் பராமரித்து வந்தார். தன் வீட்டுக்கு வருபவர்களுக்கு இந்த முருங்கை பற்றி எடுத்துச் சொல்வார். தன் ஆரோக்கியத்துக்கும், சுறுசுறுப்புக்கும் காரணம் இந்த முருங்கைதான் காரணம் என நம்பினார். இதுபோக கியூபா தன்னிறைவு அடைவதற்கும் இயற்கை விவசாயம்தான் என முழுமையாக நம்பினார்.
Also Read : `1991 நெருக்கடி காலத்தை விட ஆபத்தில் இருக்கிறோம்’ – மன்மோகன் சிங் சொல்வது என்ன?