ஐ.பி.எல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ஆர்.சி.பி அணிக்காக விளையாட இருக்கிறார் சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட். ஐபிஎல் தொடரில் விளையாடும் முதல் சிங்கப்பூர் வீரரான டிம் டேவிட்டின் அதிரடி பின்னணி தெரியுமா?
ஆஸ்திரேலியா டு சிங்கப்பூர்
டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான டிம் டேவிட் பிறந்தது சிங்கப்பூரில்; ஆனால், இளம் வயதிலேயே பெற்றோருடன் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த அவர், அங்கு சிறுவயது முதலே கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்தார். அதிரடி ஆட்டத்தால் கவனம் பெற்ற இவர் இளம் வயதிலேயே பெரிய அணிகளுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். ஆஸ்திரேலியாவின் பிரபல டி20 லீக்கான பிக்பேஷ் லீக்கில் ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மைதானங்களில் இவர் அடிக்கும் சிக்ஸர்களுக்குத் தனி ரசிகர் வட்டமே இருக்கிறதாம்.
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட்டில் தடம்பதித்த டிம் டேவிஸ், சிங்கப்பூருக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்ததால், பெரிய அணிகளுக்காக விளையாடும் வாய்ப்புக் கிடைத்தும் சர்வதேச போட்டிகளில் சிங்கப்பூர் அணிக்காக விளையாடுவதே தனது விருப்பம் என்கிறார் டிம் டேவிட்.
`டி20 ஸ்பெஷலிஸ்ட்’ டிம் டேவிஸ்
சிங்கப்பூருக்காக 14 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் இவரின் பேட்டிங் சராசரி 46.50. ஸ்டிரைக் ரேட் – 158.52. ஆஃப் ஸ்பின்னிலும் அசத்தும் டிம், இங்கிலாந்து உள்ளூர் டி20 தொடரான விட்டாலிட்டி பிளாஸ்டில் புகழ்பெற்ற சர்ரே அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர். அதேபோல், பாகிஸ்தானின் பி.எஸ்.எல் தொடரிலும் லாகூர் அணியில் இவர் இருக்கிறார். சமீபத்தில் முடிந்த பிக்பேஷ் லீக்கில் 388 ரன்கள் எடுத்திருக்கும் இவரின் ஸ்டிரைக் ரேட் 148.09. பி.எஸ்.எல் லீக்கில் 6 போட்டிகளில் இவர் குவித்த ரன்கள் 180. நெதர்லாந்து உள்ளூர் லீக் தொடரில் Quick Haag அணிக்காக அறிமுகப்போட்டியில் இவர் குவித்த ரன்கள் 152. 35/3 என்ற சூழலில் பேட் செய்ய வந்த டிம், 10 பவுண்டரிகள், 13 சிக்ஸர்களுடன் 95 பந்துகளில் 152 குவித்தார். கரீபியன் பிரீமியர் லீக்கில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார்.
உலக அளவில் பல்வேறு டி20 லீக்குகளில் விளையாடிய அனுபவம் மிக்க டிம் டேவிட்டோடு, சமீபத்திய இந்தியா – இங்கிலாந்து டி20 தொடரில் ஜொலித்த சமீரா, ஹசரங்கா ஆகியோரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதிக்காக ஆர்.சி.பி ஒப்பந்தம் செய்திருக்கிறது.
Also Read – விராட் கோலி ரசிகர்களே… உங்களுக்கான சின்ன டெஸ்ட்! #13YearsOfViratKohli