அமெரிக்காவின் முன்னணி கார் நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சென்னை, குஜராத்தின் சனந்த் பகுதிகளில் இருக்கும் இரண்டு தொழிற்சாலைகளையும் மூடப்போவதாக அறிவித்திருக்கிறது. என்ன காரணம்?
ஃபோர்டு நிறுவனம்
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு சென்னையில் கடந்த 1995-ல் தொழிற்சாலையை நிறுவியது. சென்னை புறநகர்ப் பகுதியான மறைமலை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஃபோர்டு கார் இன்ஜின் மற்றும் கார் அசெம்ப்ளி யூனிட் ஆண்டுக்கு 2 லட்சம் வாகனங்கள், 3.40 லட்சம் இன்ஜின்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்தது. ஃபோர்டு நிறுவனத்தின் எக்கோ ஸ்போர்ட், எண்டேவர் வாகனங்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. 350 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்திருக்கும் இந்தத் தொழிற்சாலையில் சுமார் 2,600 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் சென்னை தொழிற்சாலையில் ஃபோர்டு நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. ஒரு கட்டத்தில் சென்னை தொழிற்சாலையில் இருந்து மட்டும் 37 நாடுகளுக்கு வாகனங்களை அந்த நிறுவனம் ஏற்றுமதி செய்தது.
அதேபோல், குஜராத்தின் சதானந்த் பகுதியில் 460 பரப்பளவில் அமைந்திருக்கும் ஃபோர்டு நிறுவனத்தின் மற்றொரு தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2.40 லட்சம் வாகனங்கள், 2.70 லட்சம் இன்ஜின்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இங்கு ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ, அஸ்பையர் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த இரண்டு தொழிற்சாலைகளிலும் சேர்த்து சுமார் 4,000 தொழிலாளர்களும், ஆலை சார்ந்து 40,000 டீலர்களும் இருக்கிறார்கள்.
இந்தியாவிலிருந்து வெளியேற்றம்!
இந்தநிலையில், தொடர் நஷ்டம், மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ஆகும் கூடுதலான செலவு ஆகியவற்றைக் காரணமாகக் காட்டி இந்தியாவில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக ஃபோர்டு நிறுவனம் கடந்த வாரம் அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. சதானந்த் ஆலையில் உடனடியாக உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவித்திருக்கும் ஃபோர்டு நிறுவனம், 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை தொழிற்சாலையை மூடத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. இதனால், 4,000 தொழிலாளர்கள், தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாகக் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தொழிற்சங்கங்களுடன் இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், ஆலை முன்பாகத் தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. அதேநேரம், ஃபோர்டு நிறுவனம் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களைத் தயாரித்துக் கொடுப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தமிழகத் தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ஃபோர்டு நிறுவனத்தின் தரப்பில் இருந்து ஓலா மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை ஏற்கனவே நடந்து வந்ததாகவும், அவை தற்போது நடந்து வருகிறதா என்பது பற்றி தெரியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
என்ன காரணம்?
இந்திய ஆட்டோமொபைல் சந்தைகளில் கொரியா, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம் அதிகரித்ததே ஃபோர்டு நிறுவனம் வெளியேற முக்கியமான காரணமாக சொல்கிறார்கள். அதேபோல், கொரோனா தாக்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 50% வாகனங்களையே உற்பத்தி செய்ய முடிந்ததையும் மற்றொரு காரணமாகச் சொல்கிறார்கள் வல்லுநர்கள்.
இந்திய கார் சந்தையில் கார்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே சென்றாலும், ஃபோர்டு நிறுவனத்தின் கார்கள் விற்பனை குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2019 – 2020 ஏப்ரல் – ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் விற்பனையான கார்களின் எண்ணிக்கை 10.91 லட்சம். அதேபோல், 2020 – 21 ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான கார்களின் எண்ணிக்கையோ 11.42 லட்சம். தரவுகள் இப்படியிருக்க, இந்திய சந்தையில் கொரியா, ஜப்பான் நிறுவனங்களின் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெளியேறும் முடிவை ஃபோர்டு நிறுவனம் எடுத்திருப்பதாகவும் கருதப்படுகிறது.
BOJARSKI AUTO DETAILING
Junaków 4, 82-300 Elbląg
668 084 647