ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அமைச்சரவையில் நிதியமைச்சராக பொறுப்பு வகிப்பவர், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். ஆட்சியமைத்து ஒரு மாதம் முடிவதற்குள் ஜக்கி வாசுதேவ், ஹெச்.ராஜா ஆகியோர் குறித்து பேசியது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது லைம் லைட்டைப் பாய்ச்சியது. இந்தநிலையில், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தங்களது கருத்தைப் பேசவிடாமல் தடுத்ததற்காக கோவா மக்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மௌவின் கோடின்ஹோ கூறியிருக்கிறார்.
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் என்ன நடந்தது?
ஜி.எஸ்.டி வரி விதிப்பில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக மாநிலங்களின் கருத்துகளைக் கேட்பதற்காக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடத்தப்படும். அந்தவகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த 29-ம் தேதி வீடியோ கான்ஃப்ரஸ் வழியாக நடந்தது. இதில், தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.
கூட்டம் குறித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு எம்.எல்.ஏ தேர்வு செய்யப்படுவது கிடையாது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டு, எம்.எல்.ஏக்கள் தேர்வு நடைபெறுகிறது. அதேபோல்தான், மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் வாக்குகள் இருக்க வேண்டும். இல்லயென்றால், உற்பத்தி திறமை அடிப்படையிலாவது வாக்குகளை வைக்க வேண்டும். அதை விடுத்து ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா ஒரு வாக்கு என்றால், இதன் அடிப்படையிலேயே பிழை இருக்கிறது. பொதுமக்களுக்கு நலன் கிடைக்கக் கூடும் என்பதால், கொரோனா பொருட்களுக்கு வரியை விட்டுத் தர தமிழகம் போன்ற பெரிய மாநிலங்கள் தயாராக இருந்தோம். சிறு மாநிலங்களுக்கு அதிக பங்கு கிடைப்பதால், அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு ஓட்டுதான் இருப்பதால், நம்முடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை’’ என்றார்.
இந்தசூழலில், கோவா சார்பில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் மௌவின் கோடின்ஹோ, “ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கும் தமிழக அரசின் பிரதிநிதியிடமிருந்து மிகவும் ஆட்சேபிக்கத்தக்க நடத்தை வெளிப்பட்டதைப் பார்த்தேன். சிறிய மாநிலமாக இருப்பதால் கோவாவின் கருத்துகளைச் சொல்ல விடாமல் தடுக்க முயற்சி நடந்தது. இது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது. இதற்காக கோவா மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கோவா அமைச்சருக்குப் பதிலளிக்கும் வகையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகமும் தமிழக அரசும் கோவா உள்பட எல்லா மாநிலங்களின் உரிமைக்காவும் எப்போதும் குரல் கொடுக்கக் கூடியது. பொதுவாழ்க்கைக்குப் புதியவன் என்பதால், அமித் மிஸ்ரா, மன்ப்ரீத் சிங் பாதல் உள்ளிட்ட அமைச்சர்கள் காட்டிய மதிப்புமிக்க எதிர்ப்பைக் காட்டும் நிலையை ஒரு நாள் நிச்சயம் அடைவேன் என்று நம்புகிறேன். ஆனால், இன்று அப்பட்டமான பொய்களும் பாசாங்குத் தனங்களுக்கும் பதிலளிக்காமல் இருக்க முடியாது’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
Also Read – முரட்டு சிங்கிளா இருப்பதிலும் பாஸிட்டிவ் இருக்கு பாஸ்… என்னன்னு கேக்குறீங்களா?