அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்குக் கடந்த 2018-ல் கர்நாடகாவைச் சேர்ந்த பேராசிரியர் சூரப்பா துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். கர்நாடகாவைச் சேர்ந்தவர் அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் துணை வேந்தராக நியமிக்கப்பட்டது பல்வேறு தரப்பிலும் சலசலப்புகளை ஏற்படுத்தியது. 2021 ஏப்ரல் மாதத்தோடு சூரப்பாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில்,
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்த ஜெகதீஷ் குமார் தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டது. தகுதியானவரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து, இறுதி பட்டியலை ஆளுநரிடம் அந்தக் குழு சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 1992-ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பேராசிரியர் ஆர்.வேல்ராஜை பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டிருக்கிறார்.
பேராசியர் ஆர்.வேல்ராஜ்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை 1986ம் ஆண்டு முடித்த பேராசிரியர் முனைவர் ஆர்.வேல்ராஜ், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைப் பூர்வீகமாகக் கொண்டவர். அதன்பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எனர்ஜி இன்ஜினீயரிங் பிரிவில் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் எரிசக்தித் துறையில் 1999-ல் முனைவர் பட்டம் பெற்றார். 1987 முதல் 1992 வரை ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றிய வேல்ராஜ், 1992-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் இணைந்தார்.
1992-ம் ஆண்டு முதல் ஏறக்குறைய 29 ஆண்டுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இவர், பல்கலைக்கழகத்தின் எரிசக்தி படிப்புகள் கல்வி மைய இயக்குநராக 2013-2018 ஐந்து ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளுக்கான மையத்தின் துணை இயக்குநராக 2004-2010 வரையிலான காலகட்டத்தில் பணியாற்றியிருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி படிப்புகள் கல்வி மையத்தில் மூத்த பேராசிரியராகப் பணியாற்றி வந்த நிலையில், துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்“33 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவமிக்க பேராசிரியர் ஆர்.வேல்ராஜ், சர்வதேச அளவில் பல்வேறு ஆய்வு தொடர்பான இதழ்களிலும் எழுதியிருக்கிறார். இதுவரை 193 ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச ஆய்வு இதழ்களில் வெளியிட்டிருக்கிறார். தேசிய அளவிலான ஆய்வுக் கருத்தரங்கங்களில் 31 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கும் இவர், 3 புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். இவர் வழிகாட்டுதலின் கீழ் 33 பேர் இதுவரை முனைவர் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் 3 படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கும் பேராசிரியர் ஆர்.வேல்ராஜ், முதுகலைப் பொறியியல் பட்டப்படிப்பில் 9 புதிய பாடத்திட்டங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். 14 ஆண்டுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகளில் பங்கெடுத்த அனுபவமிக்க பேராசிரியர் ஆர்.வேல்ராஜ், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மூன்று ஆண்டுகள் பணியில் இருப்பார்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.