ஐபிஎல் கிரவுண்டுகளில் பவுண்டரி லைனுக்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் ஒவ்வொரு சிக்ஸருக்கும், ஃபோருக்கும், தங்களது அணியினர் விக்கெட் எடுக்கும்போதும் அந்த வீரர்களை விட மகிழ்ச்சியாக டான்ஸ் நம்பரில் கலக்கும் Cheerleaders-ஐ கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
அப்படியான சியர் லீடர்ஸ்களின் 120 ஆண்டு வரலாறு எங்கிருந்து தொடங்கியது தெரியுமா… சியர்லீடர்ஸ் பணியின் தந்தை என்றழைக்கப்படுபவரைப் பற்றி தெரியுமா… அமெரிக்காவில் இருந்து இந்திய ரசிகர்களுக்கு சியர்லீடர்ஸ்களை அறிமுகப்படுத்தியது யார்… 2011 ஐபிஎல் தொடரின்போது தென்னாப்பிரிக்க சியர்லீடர் ஒருவரை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பினார்கள்; ஏன்? – இப்படி சியர்லீடர்ஸ்கள் பத்தியும் அவங்களோட Profession எங்க தொடங்கி, எப்படி Evolve ஆகி வந்திருக்குனுன்றதைப் பத்தியும்தான் இந்த வீடியோவுல நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
Cheerleaders
வரலாற்றில் Cheerleaders என்ற வார்த்தை முதன்முதலில் பதிவான ஆண்டு 1877. அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் இருக்கும் பிரின்ஸட்ன் பல்கலைக்கழகத்தில்தான் பிரின்ஸ்டன் சியர் என்கிற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்தப் பல்கலைக்கழக அணி விளையாடும் போட்டிகளில் எல்லாம், கூட்டத்தினரை இவர்கள் உற்சாகப்படுத்தினார்கள். அதன்பிறகு, 1898-ல் மினசோட்டா பல்கலைக்கழக மாணவரான Johnny Campbell, தனியொரு ஆளாகத் தனது அணிக்கு சியர்லீடராக இருந்து போட்டிகளின்போது வீரர்களையும், அணியினரையும் உற்சாகப்படுத்தினார்.
அதன்பின்னர், அமெரிக்காவில் இந்த புரஃபொஷன் மெல்ல பிரபலமாகத் தொடங்கியது. ஆரம்பகாலகட்டங்களில் சியர்லீடர்ஸ் எல்லாருமே ஆண்களாகத்தான் இருந்தார்கள். கூட்டத்தினரை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களைக் கட்டுப்படுத்தவும் சியர்லீடர்ஸ் பயன்படுத்தப்பட்டார்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரை இது ஃபேமஸான வேலை. சியர்லீடர்ஸ் அங்கு ஹீரோக்களைப் போல் பார்கப்பட்டார்கள். அந்நாட்டு முன்னாள் அதிபர்களான பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஜார்ஜ் டபிள்யூ புஷ் போன்றவர்களே சியர்லீடர்களாக இருந்தவர்கள்தான். 1923-க்குப் பிறகுதான் சியர்லீடர்களாக பெண்களும் இருக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டது. அதன்பிறகு, பெண்களைக் கொண்ட சியர்லீடர் டீம்கள் பாப்புலர் ஆகத் தொடங்கின. 1940-களில் அமெரிக்கா முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் சுமார் 30,000 சியர்லீடர் டீம்கள் இருந்தன. 1948-ல் சியர்லீடர்களுக்கென தேசிய அளவிலான National Cheerleaders Association என்ற அமைப்பை Lawrence Herkimer தொடங்கினார்.
காலம் செல்லச் செல்ல இந்த புரஃபஷன் மீதான காதல் அமெரிக்காவில் வலுக்கத் தொடங்கியது. 1960-களின் இறுதியில் 4 வயது முதலே இதற்காகப் பிரத்யேக டிரெய்னிங்குகளில் குழந்தைகளைச் சேர்க்கத் தொடங்கினார்கள் அமெரிக்கப் பெற்றோர். 1975 வாக்கில் அமெரிக்காவில் மட்டுமே தோராயமாக 5 லட்சம் பேர் சியர்லீடர்களாக இருந்ததாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. சியர்லீடர்கள் இப்போது அணிந்திருப்பது போன்ற கவர்ச்சியான உடையை அறிமுகம் செய்தது, அமெரிக்க தேசிய கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளும் Dallas Cowboys அணிதான். 1970-களில் அந்த அணி செய்த இந்த மாற்றம், பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த அணியின் சியர்லீடர்கள் சென்ஷேனல் ஹிட்டான நிலையில், உலகம் முழுவதும் போர் நடக்கும் பகுதியில் இருக்கும் அமெரிக்க வீரர்களை உற்சாகப்படுத்த அரசாங்க செலவில் அவர்கள் டூர் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
1978-ல் மற்ற அணிகளும் தங்கள் சியர்லீடர்களுக்கான உடையில் மாற்றம் கொண்டுவரவே, அந்த கலாசாரம் புகழ்பெறத் தொடங்கியது. இந்த சம்பவத்தை அமெரிக்க விளையாட்டு இதழான Sports Illustrated, ‘Great Cheerleading War of 1978’ என்று வர்ணித்தது. 1990-களில் அமெரிக்காவில் நடக்கும் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் சியர்லீடர்கள் முக்கிய கவனம் பெறத் தொடங்கினர். பிரத்யேக பயிற்சியுடன் கூடிய அவர்களின் ஸ்டன்டுகளுக்காகவே தனி ரசிகர் வட்டம் உருவானது. சியர்லீடர்களுக்கான முதல் உலக அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் 2004-ம் ஆண்டு நடத்தப்பட்டன. சியர்லீடர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி, ஒரு தடகள வீரருக்கான தகுதிகளுடன் இருக்க வேண்டும் என்கிற கருத்துரு நிலைப்பெறத் தொடங்கியது. அமெரிக்காவில் உருவான பல படங்களில் சியர்லீடர்கள் பற்றி 2000-த்துக்குப் பிறகு காட்சிப்படுத்தப்பட்டன. அதன்பிறகு, சியர்லீடர்கள் புகழும் பரவத் தொடங்கியது. சியர்லீடிங் என்பதை ஒரு விளையாட்டாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் டிசம்பர் 2016-ல் அங்கீகரித்தது. கடினமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் மட்டுமல்லாது, உயிருக்கே ஆபத்தான சில ஸ்டண்டுகளையும் செய்யக் கூடிய இவர்களது பணி, பல நேரங்களில் அவர்களுக்குக் கடுமையான காயங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய சூழலில் புரஃபஷனல்கள் மட்டுமல்லாது அமெச்சூர்களாகவும் உலக அளவில் சியர்லீடர்களுக்கென லட்சக்கணக்கான குழுக்கள் இயங்கி வருகின்றன.
இந்தியாவில் சியர்லீடர்கள்
உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார கிரிக்கெட் லீக்காக இன்று மாறியிருக்கிறது ஐபிஎல். Franchise பாணி விளையாட்டுப் போட்டிகளை அடிப்படையாக வைத்து 2008-ல் ஐபிஎல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகமானது. அதுவரை ஒரே அணியில் விளையாடி வந்த தங்கள் ஃபேவரைட் வீரர்கள் வேற வேற கலர் ஜெர்ஸியில் எதிரெதிராக விளையாடியது புதிய அனுபவத்தைக் கொடுத்தது. ஹெய்டன், ஹஸ்ஸி, ஸ்டீஃபன் பிளமிங்கையெல்லாம் யெல்லோ ஜெர்ஸியில் தோனியோடு பார்த்த சென்னை ரசிகர்கள் சிலிர்த்துப்போய் சில்லறையெல்லாம் விட்டெறிஞ்சாங்க. இப்படி ஒவ்வொரு டீமில் இருந்த காம்பினேஷனே புதிய அனுபவத்தைக் கொடுத்த நிலையில், ஐபிஎல்-லின் மற்றொரு அட்ராக்ஷனாக இருந்தது சியர்லீடர்கள்.
பவுண்டரி லைனுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த சின்ன மேடையில், தங்கள் அணி வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்த அமெரிக்கா டைப்பிலேயே சியர்லீடர்களையும் ஐபிஎல் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அமெரிக்காவின் புகழ்பெற்ற சியர்லீடர் டீமான `washington redskins’ டீமை ஆர்.சி.பி அணிக்காக இறக்குமதி செய்தார் விஜய் மல்லையா. கிளாமரான உடை, டான்ஸ் மூவ்ஸ்களுக்காகவே அவர்களது அணி உலகம் முழுக்க பாப்புலரானது. அதற்காக ஒரு பெரும் தொகையும் செலவிடப்பட்டது. இந்த விவகாரம் அப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. 2011 வாக்கில் கிட்டத்தட்ட எல்லா டீமுமே சியர்லீடர் கல்ச்சருக்குள் வந்தனர். அதிலும் குறிப்பாக அந்த சீசனில் விளையாடிய கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக உக்ரைனில் இருந்து சியர்லீடர்ஸ் இறக்குமதி செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில், எப்போது மேடையேறி நடனமாட வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்த தனியாக ஒருவர் பணியமர்த்தப்பட்டார்.
ரசிகர்களிடையே இதற்கு வரவேற்பு குவிந்தாலும், ஒரு தரப்பினர் இது நமது கலாசாரத்துக்கே எதிரானது என்று கொதித்தார்கள். ஒருகட்டத்தில் அப்போதைய ஐபிஎல் சேர்மன் லலித் மோடியிடம், `கிரிக்கெட்டோட வளர்ச்சிக்கு சியர்லீடர்கள் எப்படி உதவுவார்கள்’ என நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டது. அதேபோல், மேட்சுகள் முடிந்தபிறகு நடக்கும் After Party-கள் பற்றிய சர்ச்சைகளும் அவ்வப்போது எழுந்து, அடங்கின. ஒரு கட்டத்தில் வெளிநாட்டுப் பெண்களுக்குப் பதிலாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பாரம்பரிய உடையில் சியர்லீடர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களின் யூனிஃபார்ம்கள் பெரும்பாலும் அந்தந்த அணிகளின் ஜெர்ஸிகளை ஒட்டியே வடிவமைக்கப்பட்டிருக்கும். சி.எஸ்.கே அணி, ஆண்கள் – பெண்கள் கலந்த ஒரு டீமை சியர்லீடர்களாக நியமித்திருந்தது. இதைத் தொடர்ந்து இந்தியப் பள்ளிகள், கல்லூரிகள் பலவற்றிலும் சியர்லீடர் அணிகள் உருவாக்கப்பட்டன.
ஊதியம் எவ்வளவு?
2008 ஐபிஎல் தொடரின்போது சியர்லீடர் டீம்களுக்கு மேட்ச் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் அளவில் ஊதியம் தரப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடும், இதற்காக மொத்தம் 42 லட்ச ரூபாய் 12 பேர் கொண்ட சியர்லீடர்கள் டீமுக்குப் பேசப்பட்டது. இதன்மூலம், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3.5 லட்சம் ஊதியமாகக் கிடைத்திருக்கும்.
2011 சர்ச்சை
2011 ஐபிஎல் தொடரின்போது மும்பை அணியின் சியர்லீடர்ஸ் குழுவில் இருந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த Gabriella Pasqualotto, பாதியிலேயே நாட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டார். ஐபிஎல் தொடரின்போது சியர்லீடர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை வேறொரு புனைப் பெயரில் பிளாக்காக அவர் எழுதி வந்திருக்கிறார். அப்போது, ஐபிஎல் After Party ஒன்றில் வீரர்கள் சிலர் தங்களிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாக அவர் எழுதிய பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் புயலைக்கிளப்பிய நிலையில், அவர் சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டார். சொந்த நாடு திரும்பிய அவர், எல்லா வீரர்களையும் நான் குறைசொல்லவில்லை. ஆனால், ஒரு சிலர் எங்களைப் போகப்பொருளாகத்தான் பார்த்தார்கள் என்று ட்விட்டரில் வெடித்தார். இந்த விவகாரம் பற்றி பிசிசிஐ அப்போது விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை.
ஐபிஎல் மூலம் இந்தியாவில் அறிமுகமான சியர்லீடர்களை ரசிகர்கள் பார்க்கும் பார்வை வித்தியாசமானது என்பதே, அதை ஒரு புரஃபஷனாகக் கொண்டு செயல்படும் பெண்கள் சொல்லும் கருத்தாக இருக்கிறது. கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சியர்லீடர்கள் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா குறைந்திருக்கும் நிலையில், சியர்லீடர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது என்றே கருதப்படுகிறது.
உங்களோட ஃபேவரைட் சியர்லீடர் எந்த டீமோடது..ஏன் – அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க..
Also Read – உலகத்துல கதவுகள் அதிகமா இருக்கா… சக்கரங்கள் அதிகமா இருக்கா?