இதுதான் இந்த வாரம் இணையதளத்தை கலக்கிட்டு இருக்குற பஞ்சாயத்து. கோழி முதல்ல வந்துச்சா முட்டை முதல்ல வந்துச்சாங்குற மாதிரி உலகத்துல கதவுதாங்க நிறைய இருக்கு என்று ஒரு குரூப்பும், இல்லைங்க சக்கரம்தாங்க நிறைய என்று இன்னொரு குரூப்பும் பிரிஞ்சு சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க.
எங்கிருந்து தொடங்கியது… எப்படி வைரலானது?
நியூசிலாந்தை சேர்ந்த ரியான் நிக்ஷன்ங்குறவர் அவங்க ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து ரக்பி மேட்ச் பார்த்திட்டு இருந்தப்போ திடீர்னு ஒரு விவாதம் வருது. கதவா.. சக்கரமா.. உலகத்துல எது நிறைய இருக்கு என்ற விநோமான ஒரு டவுட் வர, விவாதிக்கத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் விவாதம் நீண்டு கொண்டே போக இதை ட்விட்டரில் ஒரு Poll-ஆக பதிவிட்டார் ரியான். அவருடைய டிவிட்டர் அக்கவுண்டில் ஃபாலோயர்ஸ் 1500-க்கும் குறைவு. சனிக்கிழமை இரவு இந்தக் கேள்வியை பதிவிட்டபோது வெறும் 100 பேர் வாக்களித்திருந்தார்கள். ஞாயிறு மதியம் பார்த்தால் 14,000 வாக்குகள் வந்திருந்தது.

கொஞ்சம் கொஞ்சமா ஷேர் ஆக இதெல்லாம் ஒரு கேள்வியாங்க என்று எல்லாருக்குமே தோன்றினாலும் ஆமா நிஜமா எது நிறைய இருக்கும் என்று ஆர்வம் வரவே எல்லாரும் அந்த Poll-ல் வாக்களித்தார்கள். கிட்டத்த 2 லட்சத்தி 23 ஆயிரம் பேர் வாக்களித்திருந்தனர். அந்த Poll-ல் கதவு என்று 46% மக்களும் சக்கரம் என்று 54% மக்களும் வாக்களித்திருந்தனர். அப்பறம் என்னப்பா சக்கரம்தான் வின்னர் என்று அதோடு முடிந்துவிடும் என்று பார்த்தால் இணையம் முழுக்க பற்றிக்கொண்டது பஞ்சாயத்து. ஆளாளுக்கு விவாதிக்கத் தொடங்க இந்தக் கேள்வி வைரலானது. அமெரிக்க ஊடகங்களில் தொலைக்காட்சி விவாதமாகவே மாறி நீயா நானா என்று சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னமும் தொடர்கிறது இந்த விவாதம்.
ஏன் இத்தனை விவாதமானது இந்தக் கேள்வி?
உதாரணத்துக்கு நீங்க வீடுகளை விட கார்தானே அதிகமா இருக்கு அப்போ சக்கரம்தான் அதிகம் என்று நினைக்கலாம். ஒவ்வொரு காரிலும் 4 கதவு இருக்குமே என்று நினைத்தால் மொத்த பெர்ஸ்பெக்டிவும் மாறும். அதேபோல, வீட்டு கதவு மட்டுமில்லாமல் ஜன்னல் கதவு, அலமாரிகளின் கதவு, ஆபிஸ் கதவு, லிஃப்ட் கதவு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். லிஃப்ட் கதவை கணக்குவைத்தால் லிஃப்ட் மேலே கீழே போய்வர நிச்சயம் ஒரு சக்கரம் இருக்கும் என்று எதிர்வாதம் வரும்.

அட, ஆபிஸ் ரோலிங் சேர்களில் கூட 4 சக்கரம் இருக்கும். நிஜ கார்களின் அளவுக்கு பொம்மைக்கார்களும் உலகில் அதிகம் எல்லாப் பொம்மைக் காரிலும் 4 சக்கரம் இருக்கும். ஆனால் அதிகமான பொம்மைக் கார்களில் கதவு இருக்காது. இப்படி ஒவ்வொரு எதிர்கேள்விகளும் உங்கள் பெர்ஸ்பெக்டிவை மாற்றிக்கொண்டே இருக்கும் என்பதால். இதுதான் அதிகம் என்று நிரூபிக்கவே முடியாமல் இந்த விவாதம் நீண்டுகொண்டே போகிறது.
இப்போ நீங்க சொல்லுங்க.. உங்களுக்கு என்ன தோணுது.. கதவு அதிகமா இருக்குமா? சக்கரம் அதிகமா இருக்குமா?
0 Comments