`மெட்ராஸ்’ படம் வெளியாகும் முன்பே, இயக்குநர் ரஞ்சித்தின் திறமையை கணித்துவிட்ட கார்த்தி, அவரைப் பற்றி தன் அண்ணன் சூர்யாவிடம் பெருமையாக சொல்லியிருக்கிறார். அப்போதே சூர்யா அழைத்து ரஞ்சித்திடம் தனக்கேற்ற ஒரு கதை தயார் செய்துவரும்படி சொல்ல, அப்போது சூர்யாவுக்காக அவரை மனதில் வைத்து ரஞ்சித் எழுதிய கதைதான் இப்போது நாம் பார்க்கும் ‘சார்பட்டா’. இடையில் என்ன ஆனது, சூர்யா இடத்தில் ஆர்யா எப்படி வந்தார் ? பார்க்கலாம்.
`மெட்ராஸ்’ படம் ஹிட்டடித்ததும் சூர்யாவை சந்தித்து, வடசென்னை பாக்ஸிங்கை பின்புலமாகக் கொண்டு தான் உருவாக்கிய ‘சார்பட்டா’ கதையை சொல்லியிருக்கிறார் ரஞ்சித். கதைக் கேட்டு மிகவும் பிடித்துபோனது சூர்யாவுக்கு. அந்தப் படத்தை ‘ஸ்டூடியோ கிரீன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பதாகவும் சூர்யாவின் அப்போதைய கமிட்மெண்ட்கள் முடிவடைந்ததும் உடனடியாக படத்தைத் தொடங்கிவிடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. ரஞ்சித் ஒருபக்கம் இதன் திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, சூர்யாவோ பாக்ஸர் கேரக்டருக்கான ரெஃபரன்ஸ்களையும் ஹோம் ஒர்க் பற்றிய தகவல்களையும் திரட்ட ஆரம்பித்தார்.
அந்த நேரத்தில்தான் ரஜினியின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்திடமிருந்து ரஞ்சித்துக்கு வந்தது அழைப்பு. அவர் தயாரித்த கோவா’ படத்தில் ரஞ்சித் துணை இயக்குநராக பணியாற்றியபோதே இருவருக்கும் நன்கு பரிச்சயம் உண்டு. அந்தப் பரிச்சயத்தின் அடிப்படையில்தான் இந்த சந்திப்பும் நிகழ்ந்தது. சந்திப்பின்போது சௌந்தர்யா, ரஞ்சித்திடம் தனது தந்தை ரஜினிக்கேற்ற கதை இருந்தால் சொல்லும்படி கேட்கவே, ஒரு அவுட்லைனை சொல்லியிருக்கிறார். ரஞ்சித் சொன்ன ஒன்லைனை சௌந்தர்யா மூலம் அறிந்துகொண்ட ரஜினி உடனே அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதுதான் `கபாலி’.
இதற்கிடையில் ரஞ்சித், சூர்யா படத்தின் கமிட்மெண்ட் பற்றி ரஜினியிடம் தயக்கமாக சொல்ல, ரஜினி அவரை ஆசுவாசப்படுத்தி, தான் அதைப் பார்த்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி ரஜினி, சூர்யாவிடமும் ஞானவேல்ராஜாவிடமும் போனில் பேசி சம்மதம் வாங்க, `கபாலி’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தார் சூர்யா.
கபாலி’ வெளியாகி முழுமையான வெற்றியை அடையவில்லையென்றாலும் அதன் பிஸினஸ் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருந்தது. இதையொட்டி ரஜினி – ரஞ்சித் காம்போ மீண்டும் இணைந்து தனுஷ் தயாரிப்பில்காலா’ படத்தை உருவாக்கினார்கள். `காலா’ படம் தோல்வியைத் தழுவியதுடன் வசூலும் பாதிப்படைந்தது. இந்நிலையில் மீண்டும் சூர்யா நடிப்பில் ‘சார்பட்டா’ படத்தைத் தொடங்க முயற்சித்தார் ரஞ்சித். ஆனால் சூர்யாவோ தொடர்ச்சியாக பல கமிட்மெண்ட்களை கைவசம் வைத்திருந்ததால் உடனடியாக அந்தப் படத்தில் நடிக்கமுடியாமல் இருந்தது.
இதைத்தொடர்ந்து வட இந்திய பழங்குடி இனத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரான பிர்சா முண்டா வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியில் படமாக்கத் திட்டமிட்டார் ரஞ்சித். ஆனால் அதற்கான முயற்சிகளும் தோல்வியில் முடிய கோலிவுட்டுக்கேத் திரும்பினார் ரஞ்சித். இதனால் ஏறத்தாழ இரண்டு வருட காலம் வீணாகிப்போயிருந்தது ரஞ்சித்துக்கு. இதைத்தொடர்ந்து உடனே ஒரு படத்தைத் தொடங்கவேண்டும் என்ற சூழல் ஏற்படவே, ஆர்யாவை அணுகி, அவரை ஒப்பந்தம் செய்து, தானே தயாரித்து இயக்குவதென்றும் முடிவெடுத்தார் ரஞ்சித். அதைத்தொடர்ந்து உருவானதுதான் தற்போது நாம் பார்க்கும் `சார்பட்டா பரம்பரை’.
Also Read – சார்பட்டா பரம்பரை ரோஷமான குத்துச் சண்டைதானா… படம் பார்க்கலாமா, வேண்டாமா?!