விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய கதை!

எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் ஆலமரமாக வளர்ந்தவர் விஜயகாந்த். ஹீரோக்கள்னா இப்படித்தான் இருக்கணும் என்கிற ஸ்டீரியோடைப்பை உடைத்த அவர், தேமுதிக என்கிற அரசியல் கட்சியைத் தொடங்க விதை போடப்பட்டது எப்போது தெரியுமா… முதன்முதல்ல விஜயகாந்துக்கு எப்போ ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டுச்சுனு தெரியுமா?… ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியா மாற்றணும்னு அவர் எந்த சூழ்நிலைல முடிவெடுத்தார். தேமுதிக-ங்குற கட்சியோட வரலாறு பெரும்பாலும் நாம எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ஆனால், அந்த கட்சி எந்த மாதிரியான சூழல்ல தொடங்கப்பட்டுச்சு, அதுக்கு முன்னாடி என்னவெல்லாம் நடந்துச்சுன்னுன்றதைப் பத்திதான் நாம இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.

Vijayakanth
Vijayakanth

விஜயகாந்த் ரசிகர் மன்றம்

சினிமா நடிகனாக வேண்டும் என்கிற கனவோடு மதுரையில் இருந்து நண்பர்கள் இம்ராஹிம் ராவுத்தர், லியாகத் அலிகானோடு 1978-ல் சென்னை வந்த விஜயகாந்த், 1979-ல் வெளியான இனிக்கும் இளமை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்ததால், அப்போதே விஜயகாந்த் தென்னிந்திய ரசிகர் மன்றம் என்கிற பெயரில் ரசிகர் மன்றம் அவருக்கு முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. பின்னர், 1980-ல் இது அகில இந்திய விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த ரசிகர் மன்றங்கம்தான் தேமுதிக-வுக்கான விதை. இதுவே, 1982-ல் ‘தமிழன் என்று சொல்லடா… தலை நிமிர்ந்து நில்லடா’ என்கிற முழக்கத்தோடு தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம் என்று புத்துயிர் பெற்றது. அப்போது தொடங்கி விஜயகாந்த், தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடர்ச்சியாகச் செய்யத் தொடங்கினார்.

1990-ல் விஜயகாந்தைத் திருமணம் செய்த பிரேமலதா, முதல்முதலில் மைக் பிடித்து பேசிய நிகழ்ச்சி எது தெரியுமா… அதேபோல், மைத்துனர் ஆவதற்கு முன்பாகவே ரசிகராக விஜயகாந்தை எல்.கே.சுதீஷ் சந்தித்த போராட்டக் களம் பற்றி தெரியுமா… வீடியோவை முழுசா பாருங்க, அதப்பத்தி நானே சொல்றேன்.

கட்சியாக உருவெடுக்கும் முன்னரே, ரசிகர் மன்றம் மூலம் பல்வேறு உதவிகளை விஜயகாந்த் செய்து வந்தார். பல்வேறு பிரச்னைகளுக்காகவும் அவர், ரசிகர் மன்றம் மூலம் போராட்டம் நடத்தவும் செய்திருக்கிறார். 1984-ல் இலங்கைத் தமிழர் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டி ரசிகர் மன்றம் மூலம் மிகப்பெரிய போராட்டத்தை அவர் நடத்தினார். விஜயகாந்த் ரசிகர் மன்றம் நடத்திய முதல் போராட்டம் இதுதான். திரையில் விஜயகாந்த் ஒரு சக்ஸஸ்ஃபுல்லான நடிகராக உருவெடுத்து வந்த நிலையில், தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அவரது ரசிகர் மன்றங்கள் கிளை பரப்பின. ஒவ்வொரு கிராமத்திலும் விஜயகாந்த் உதவிபெற்ற சிலராவது இருந்தனர். குறைந்தபட்சம் சென்னையில் உள்ள விஜயகாந்த் அலுவலகத்தில் மதிய உணவு உண்டவர்களாவது இருந்தனர். விஜயகாந்தின் உதவும் குணம் மக்களிடையே அவருக்கான செல்வாக்கை அதிகரித்தது.

ரசிகர்கள்
ரசிகர்கள்

அன்பு விஜயகாந்த்

சோசியல் மீடியாக்கள் ஆதிக்கம் செலுத்தாத காலகட்டத்தில் நடிகர்களுக்கென தனி இதழ்கள் தமிழகத்தின் வெளிவந்து கொண்டிருந்தன. ரஜினிக்கொரு ‘ரஜினி ரசிகன்’, கமலுக்கு மய்யம் போன்ற இதழ்கள் வெளிவந்தன. அதே காலகட்டத்தில் விஜயகாந்த் ரசிகர்களுக்கென்றே ‘அன்பு விஜயகாந்த்’ இதழ் வெளிவந்தது. முருகப்பன் என்பவர் அதன் ஆசிரியராக இருந்தாலும், இதழின் தயாரிப்பு மற்றும் விநியோகம் என எதிலும் விஜயகாந்தின் பங்கு இல்லை. ஆனால், பேட்டிகள் முதல் அதில் பிரசுரம் ஆகும் செய்திகள் அனைத்தும் அவரது மேற்பார்வையிலேயே வெளியாகிக் கொண்டிருந்தது. குறிப்பாக, முதல் பக்கத்தில் காவிய நாயகன் கடிதம் என்கிற பெயரில் நேரடியாக விஜயகாந்த் ரசிகர்களுக்கு எழுதும் கடிதம் வெளியாகும். விஜயகாந்த் கைப்பட எழுதிய கடிதம் அவை இல்லை என்றாலும், அவர் டிக்டேட் செய்ய அதிலிருந்து அந்தக் கடிதம் ரெடியாகும்.

இப்படி ரசிகர்களோட நேரடித் தொடர்பில் இருந்த நடிகர்களில் விஜயகாந்த் முக்கியமானவர். மின்மினித் தொடர் என்கிற பெயரில் தலைவர்கள், ஆளுமைகள் பற்றி விஜயகாந்த் எழுதிய தொடர், அவரது ரசிகர் மன்றங்கள் செய்த நற்பணிகள் பற்றிய போட்டோக்கள் போன்றவை அந்த இதழில் இடம்பெற்றிருந்தன. இப்படியான புகைப்படங்கள் மாதம்தோறும் குவிந்துவிடுமாம். அதனால், அவற்றை பகுதி, பகுதியாகப் பிரித்து வெளியிடுவார்களாம். அப்படியும் சில கடிதங்கள் பிரசுரமாகும் வாய்ப்புக் கிடைக்காமல் போகும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு நடிகருக்காக நீண்ட நாட்கள் வெளியான இதழ் என்கிற பெருமை அன்பு விஜயகாந்துக்குத்தான் உண்டு என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். டிஜிட்டலின் எழுச்சி முதலில் காவு வாங்கியது இதுபோன்ற இதழ்களைத்தான்.  

எல்.கே.சுதீஷ்

கொடி அறிமுகம்

விஜயகாந்த், பல்வேறு விதங்களில் மக்களுக்குத் தொடர்ச்சியாக உதவிகள் செய்து வந்தார். 1989-ல் ஈரோடு, அதையடுத்து சென்னை சாலிகிராமத்தில் விஜயகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் இலவச மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. அதேபோல், யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்கிற நோக்கில் அவரது அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இலவசமாக தையல் இயந்திரங்கள், தேய்ப்புப் பெட்டி, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவிகள் என பல்வேறு தரப்பினருக்கும் ரசிகர்கள் மன்றங்கள் மூலமும் தனிப்பட்ட முறையிலும் உதவிக் கொண்டிருந்தார். தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பார்கள். அப்படி, அடுத்து எந்த பிரபலம் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற விவாதம் எழுந்தது. 1996 தேர்தலில் ரஜினி கொடுத்த வாய்ஸ், அவரது அரசியல் பிரவேசம் பற்றி பேசவைத்தது. மற்றொருபுறம், விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள், 1996, 2001 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிவாகை சூடியிருந்தனர்.

தேமுதிக கொடி
தேமுதிக கொடி

இந்த சூழலில் கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரியில் புரட்சி தீபம் தாங்கிய மூன்று வர்ணங்களைக் கொண்ட கொடியை ரசிகர் மன்றத்துக்காக அறிமுகப்படுத்தினார் விஜயகாந்த். கொடி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கொடி கலரில் மோதிரம் அணிந்துகொண்ட அவர், தனது பல படங்களிலும் கொடியைப் பயன்படுத்தத் தொடங்கினார். இப்படியாக, நேரடி அரசியலில் ஈடுபட விஜயகாந்த், கொஞ்சம் கொஞ்சமாகத் தயாராகி வந்தார் என்றே பார்க்க முடிகிறது. அவருடைய நலம் விரும்பிகளும் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அவருக்கு ஆலோசனை வழங்கி வந்தனர் என்றே சொல்லலாம்.

ஒரு கட்டத்தில், 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2005 செப்டம்பர் 14-ம் தேதி மதுரையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தி தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தேமுதிக என்று அவர் தொடங்கிய கட்சிக்கு, அவரின் ரசிகர்களே தொண்டர்களாகினர். அதன்பிறகு, தேமுதிக எதிர்க்கொண்ட தேர்தல்கள், அதன் தற்போதைய நிலை ஆகியவை பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை.

Vijayakanth - Premalatha
Vijayakanth – Premalatha

1990-ல் விஜயகாந்த் – பிரேமலதா திருமணம் நடந்திருந்தாலும், 2004-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில்தான் பிரேமலதா முதன்முதலில் மைக் பிடித்து பேசத் தொடங்கினார். அதன்பிறகு, அரசியலில் ஆர்வம் கொண்டு தீவிரமாக பணியாற்றினார். அதேபோல், 1987-ல் இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக விஜயகாந்த், இரண்டாவது முறையாக தனது ரசிகர் மன்றம் மூலம் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். அப்போது, பச்சையப்பா கல்லூரியின் மாணவர் அமைப்பு பிரதிநிதியாக எல்.கே.சுதீஷ் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவரே விஜயகாந்தின் மைத்துனரானார். பின்னர், தேமுதிக-விலும் முக்கியமான தலைவராக உருவெடுத்தார்.  

இன்றைய தமிழக அரசியல் களத்தில் தேமுதிக எந்த இடத்துல இருக்குனு நீங்க நினைக்கிறீங்க.. அதோட முக்கியத்துவம் எப்படி இருக்குன்றதைப் பத்தின உங்க கருத்துகளை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.  

Also Read – குருதிப்புனல்… இப்படி ஒரு ஆக்‌ஷன் படம் எடுத்துட்டா லைஃப் டைம் செட்டில்மென்ட்றா!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top