விபத்தில் சிக்கி சிகிச்சைபெற்று வரும் நடிகை யாஷிகா, தோழியின் மறைவால் உயிரோடு இருப்பதே குற்ற உணர்ச்சியாக இருக்கப் போகிறது என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.
நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த ஜூலை 24-ம் தேதி தோழி பவானி, நண்பர்கள் சையத், அமீர் ஆகியோருடன் மகாபலிபுரம் சென்றிருக்கிறார். அங்கு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு நள்ளிரவு ஒரு மணியளவில் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தபோது, கிழக்குக் கடற்கரை சாலையில் சூளேரிக்காடு என்ற பகுதிக்கு அருகில் அவர்கள் வந்த கார் கோர விபத்தில் சிக்கியது. விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நண்பர்கள் சையத், அமீர் இருவரும் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நடிகை யாஷிகா ஆனந்துக்கு இடுப்புப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், காலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, சென்னையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கும் யாஷிகாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. விபத்து தொடர்பாக யாஷிகா மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிந்திருக்கிறார்கள்.
யாஷிகா வேதனை
விபத்துக்குப் பிறகு முதல்முறையாக இன்ஸ்டாவில் பதிவொன்றை இட்டிருக்கிறார் யாஷிகா. அதில், “இப்போது நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. உயிரோடு இருப்பதற்காக வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியோடு இருக்கப் போகிறேன். அந்த கோர விபத்தில் இருந்து என்னைக் காப்பாற்றியதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்வதா… இல்லை என்னுடைய நெருங்கிய தோழி பவானியை என்னிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்ததற்காக என்னையே குற்றம் சொல்லிக் கொள்வதா என்று தெரியவில்லை.
என்னை மன்னிக்கமாட்டாய் என்று எனக்குத் தெரியும். உனது குடும்பத்தை இப்படியொரு இக்கட்டான சூழலில் நான் கொண்டு நிறுத்திவிட்டேன். உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை ரொம்பவே மிஸ் செய்வேன். உயிரோடு இருப்பதே குற்ற உணர்ச்சியாய் இருக்கப் போகிறது. உனது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். என்னிடம் திரும்ப வந்துவிடுவாய் என்ற நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்கிறேன். ஒரு நாள் உனது குடும்பத்தினர் என்னை மன்னித்துவிடுவார்கள் என்று நம்புகிறேன். நம்முடைய பசுமையான நினைவுகள் எண்ணி எப்போதும் மகிழ்வேன். என்னுடைய பிறந்தநாளை நான் கொண்டாடப்போவதில்லை. ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம். பவானியின் குடும்பத்தினருக்காகப் பிரார்த்தியுங்கள். கடவுளே அவர்களுக்கு மன உறுதியைக் கொடுங்கள். என்னுடைய வாழ்நாளின் மிகப்பெரிய இழப்பு’’ என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.
Also Read – யாஷிகா ஆனந்த்… ஈ.சி.ஆர் விபத்துக்கு முன் என்ன நடந்தது?
0 Comments