லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று வரலாறு படைத்திருக்கிறது. லார்ட்ஸில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்வது 1986, 2014-ம் ஆண்டுகளுக்குப் பிறகு இது மூன்றாவது முறையாகும்.
டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்டில் மழையால் இந்திய அணியின் வெற்றி பறிபோன நிலையில், லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சதத்தோடு 364 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. கேப்டன் ஜோ ரூட் 180 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில், ஐந்தாம் நாள் ஆட்டத்தை ரிஷப் பண்ட் – இஷாந்த் ஷர்மா ஜோடி தொடங்கியது. ரிஷப் பண்ட் 22 ரன்களிலும் இஷாந்த் ஷர்மா 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 209/8. அதன்பிறகு நடந்தது வரலாறு. ஒன்பதாவது விக்கெட்டுக்குக் கைகோர்த்த ஷமி – பும்ரா ஜோடி, இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தது. பும்ரா டிஃபன்ஸ் ஆடிக்கொண்டிருந்த நிலையில், மறுமுனையில் தேர்ந்த பேட்ஸ்மேனைப் போல இங்கிலாந்து பந்துவீச்சை எல்லைகோட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார் ஷமி. குறிப்பாக மொயின் அலி பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து அரைசதத்தைப் பதிவு செய்தார் ஷமி. முக்கியமான கட்டத்தில் இந்திய அணியின் முன்னிலை 200 ரன்களைக் கடக்க உதவியது ஷமி – பும்ராவின் சிறப்பான ஆட்டம். 9-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி. 109.3 ஓவர்களில் 298/9 என்ற ஸ்கோரோடு இந்தியா டிக்ளேர் செய்தது.
மிரட்டிய பௌலிங்!
60 ஓவர்களில் 272 என்ற டார்க்கெட்டோடு களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அடி கொடுத்தது பும்ரா – ஷமி ஜோடி. ஓபனர்கள் இருவரையும் டக் அவுட்டாக்கி வெளியேற்றியது இந்த ஜோடி. ரோரி பர்ன்ஸ் பும்ரா ஓவரிலும் டாம் சிப்லி ஷமி ஓவரிலும் ஆட்டமிழந்தனர். லார்ட்ஸில் இங்கிலாந்து அணியின் இரண்டு ஓபனர்களும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறியது வரலாற்றில் முதல்முறை. அடுத்து பந்துவீச வந்த இஷாந்த் ஷர்மா, தனது பங்குக்கு இங்கிலாந்து பேட்டிங் ஆர்டரை டேமேஜ் செய்தார். ஹசீப் ஹமீத், ஜானி பேரிஸ்டோவ் என இரண்டு பேரை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.
சிறிதுநேரம் நிலைத்து ஆடிய ஜோ ரூட், பும்ரா பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கவே இந்திய அணி ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். மொயின் அலி, சாம் கரண் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி சிராஜ் மிரட்டவே, இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் 90 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 12 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஜோஸ் பட்லர் – ராபின்சன் ஜோடி பும்ரா 51-வது ஓவரில் பிரித்தார். 8.1 ஓவர்களை இங்கிலாந்தின் கடைசி 2 விக்கெட்டுகள் தடுத்தாட வேண்டிய நிலை ஏற்பட்டது. 52-வது ஓவரை வீசவந்த சிராஜ், இரண்டாவது பந்தில் பட்லரையும், ஐந்தாவது பந்தில் ஆண்டர்சனையும் வெளியேற்றினார். 120 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழக்க, இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் லார்ட்ஸில் வெற்றியைப் பதிவு செய்தது.
ஷமியின் அரைசதம்!
முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் பதிவு செய்த சதத்துக்கு இணையானது இரண்டாவது இன்னிங்ஸில் ஷமி பதிவு செய்த அரைசதம். இரண்டாவது இன்னிங்ஸின் 86-வது ஓவரில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தபோது ஷமி களத்துக்குள் வந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர், 194/7. முன்னிலை 167 ரன்கள். பேட்ஸ்மேன்கள் வெளியேறிவிட்ட நிலையில், இந்திய அணியின் முன்னிலை 200 ரன்களைத் தாண்டுவது கடினம் என்ற நிலை இருந்தது. அவர் களமிறங்கிய சிறிதுநேரத்திலேயே இஷாந்த் ஷர்மாவும் நடையைக் கட்டினார். 9-வது விக்கெட்டுக்கு பும்ராவுடன் இணைந்து ஷமி கட்டமைத்த பாட்னர்ஷிப் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் நம்பிக்கையை விதைத்தது. ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கும்போது இந்தப் போட்டியில் நான்குவிதமான முடிவுகளுக்கும் வாய்ப்பிருந்தது. ஆனால், ஷமியின் அதிரடி அரைசதம் இந்தியாவுக்கு புது தெம்பைக் கொடுத்தது. 70 பந்துகளில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ஷமி. மேன் ஆஃப் தி மேட்சாக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டாலும், ஷமியின் லார்ட்ஸ் இன்னிங்ஸ் டெஸ்ட் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டது.
Also Read – கமல் தமிழ் சினிமாவின் பரிசோதனை எலி! #62YearsOfKamalHaasan