சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த பராக் அக்ராவல் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த அவர், உடனடியாக இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். யார் இந்த பராக் அக்ராவல்?
ஐஐடி மும்பை
மும்பை ஐஐடி-யில் கணினி அறிவியலில் பி.டெக் படிப்பை முடித்த பராக், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஐஐடி நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வில் அகில இந்திய அளவில் 77-வது இடம் பிடித்தவர். கடந்த 2001-ல் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த பிசிக்ஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
ட்விட்டரில் இணைவதற்கு முன்னர் மைக்ரோசாஃப்ட், யாஹூ, ஏடி&டி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் மென்பொறியாளராகப் பணியாற்றியிருக்கிறார். அவரது தாய் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை மற்றும் தந்தை மத்திய அரசின் அணு ஆராய்சிப் பிரிவில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றியவர். பராக்கின் மனைவி வினீதா. அவரும் அமெரிக்காவில் சுகாதாரத்துறையில் தனியார் முதலீட்டாளராக இருக்கிறார். பாடகி ஸ்ரேயா கோஷலின் பள்ளி கால தோழர் பராக் அக்ராவால்.
பத்தாண்டு பயணம்
ட்விட்டர் நிறுவனத்தில் கடந்த 2011-ல் மென்பொறியாளராக பராக் இணைந்தார். அந்த நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த அவர், கடந்த 2017 டிசம்பரில் தொழில்நுட்பப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ட்விட்டரின் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் மிஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாஃப்ட்வேர் டெவலப்மண்டை அவர் கவனித்து வந்தார்.
புராஜக்ட் ப்ளூ ஸ்கை
ட்விட்டரில் அவதூறு, பொய்யான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட புராஜக்ட் ப்ளூ ஸ்கை (Project Blue Sky) என்ற திட்டத்தில் பராக், கடந்த 2019-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். சுயாதீன மென்பொறியாளர்கள் கொண்ட குழுவுடன் அவர் முன்னெடுத்து வந்த இந்தத் திட்டம் ட்விட்டரின் முக்கியமான திட்டமாகும். ட்விட்டர் உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள், தங்கள் வலைதளங்களின் தரநிலையை மேம்படுத்த ப்ளூ ஸ்கையின் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என்று ட்விட்டரின் முன்னாள் சி.இ.ஓ ஜாக் டோர்ஸி ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.
சர்ச்சையான 2010 ட்வீட்
ட்விட்டர் சி.இ.ஓ-வாக பராக் அறிவிக்கப்பட்டவுடன், அவர் கடந்த 2010-ல் பதிவிட்டிருந்த ஒரு ட்வீட் வைரலாகத் தொடங்கி சர்ச்சையானது. `இஸ்லாமியர்களுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்கள் உணரவில்லை என்றால், வெள்ளையின மக்களுக்கும் இனவெறி பிடித்தவர்களையும் நான் ஏன் வித்தியாசப்படுத்த வேண்டும்’ என்று பராக் பதிவிட்டிருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல பிரிட்டீஷ் நடிகரும் காமெடியனுமான ஆசிஃப் மாண்ட்வி ஒரு நிகழ்ச்சியில் சொன்னதாக இந்தத் தகவலை பராக் பகிர்ந்திருந்தார்.
Also Read – Time loop: டைம் லூப் என்றால் என்ன… படங்களில் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள்?