தமிழ் சினிமா பாடகிகளில் தவிர்க்கமுடியாதவர்களில் ஒருவரான ஹரிணி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்.
14 வயதில் இருந்து தமிழ் சினிமாவில் பாடிவரும் ஹரிணிக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தது ஏ.ஆர்.ரஹ்மான். சுஹாசினி மணிரத்னம் இயக்கிய ‘இந்திரா’ படத்தில் `நிலா காய்கிறது…’ பாடல்தான் ஹரிணியின் முதல் பாடல். ஹரிணியின் திறமையை ஏ.ஆர்.ரஹ்மான் அடையாளம் கண்டது, மாநில அளவிலான பாட்டு போட்டியில்தான். அந்தப் போட்டியில் வெற்றிப்பெற்ற ஹரிணிக்கு பரிசு கொடுப்பதற்கு சிறப்பு விருந்தினராக வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, ஹரிணியின் குரல் பிடித்துப்போக 6 மாதங்கள் கழித்து இந்திரா பட வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.
ஹரிணிக்கு அவரது குரல் மிகப்பெரிய ப்ளஸ் என்றால், அவரது ஞாபகசக்தி மற்றொரு பெரிய ப்ளஸ். இதுவரைக்கும் அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களின் வரிகளும் அவருக்கு மனப்பாடமாய் இருக்கிறதாம். எந்தப் பாடலை பாடச் சொன்னாலும் வரி மாறாமல் பாடக்கூடியவர்.
ஹரிணியின் கணவரான திப்புவும் பிரபலமான பாடகர் என்பதால் தனது குழந்தைகளுக்கும் இசையை கற்றுக்கொடுக்கிறார்கள். இவர்களின் மகனுக்கு பியானோவும் கர்னாடக சங்கீதமும் மகளுக்கு பியானோவும் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.
பாடகிகளாக இருப்பவர்கள் ஐஸ் க்ரீம் சாப்பிடாமல் அவர்களது குரலைப் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், ஹரிணி அப்படி கிடையாது. நன்றாக ஐஸ்க்ரீம் சாப்பிட்டு உடனே சுடு தண்ணீரை குடித்துவிடுவாராம். ஆனால், குரல்வளம் நன்றாக இருக்கவேண்டும் என்று தனது உணவில் காரமும் புளிப்பும் மட்டும் குறைவாக சேர்த்துக்கொள்வார் என்கிறார்கள்.
[zombify_post]