IPFS தொழில்நுட்பம், கிளவுட் ஸ்டோரேஜ்களின் அடுத்த கட்டமாகப் பார்க்கப்படுகிறது. அது என்ன IPFS? எப்படி இயங்குகிறது? சுருக்கமாகப் பார்ப்போம்.
தொழிற்புரட்சி காலகட்டத்திலிருந்து இயந்திரங்களின் காலம் வரைக்கும் மனிதர்கள் சந்தித்த/சந்திக்கும் முக்கியமான பிரச்னை “Energy Sources”. நீராவி, நிலக்கரி, பெட்ரோல், டீசல், அணுசக்தி என ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி முடித்துவிட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.
அந்த உலகம் அப்படி என்றால், கணினித் தொழில்நுட்ப உலகம் சந்தித்துக்கொண்டிருக்கும் தலையாய பிரச்னைகளில் முக்கியமானது “Storage”. தகவல்களை சேமித்து வைக்க கணினிகளில் தொழில்நுட்பம் சில ஆண்டுகளில் அசுரப் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. HDD(Hard Disk Drive)-கள் அறிமுகமான புதிதில் அதற்கு முந்தைய தொழில்நுட்பங்களை விட திறன்மிக்கதாகவும், அளவில் சிறியதாகவும் இருந்தன.
ஆனால், மனிதர்களின் தேடல் அத்துடன் நிற்கவில்லை. SSD(Solid State Drive)-களின் அறிமுகம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. முந்தைய ஹார்ட் டிஸ்குகளை விட அதி வேகத்துடனும், மிக சிறிய அளவிலுமாக இன்னும் சில ஆண்டுகளுக்கு நான்தான் இங்கு ராஜா என காலரைத் தூக்கிவிட்டது.
HDD-யிலிருந்து SDD-யின் இந்தப் பயணத்தின் இடையில் இன்னுமொரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அது Cloud Storage. பெரும்பாலான இந்த கிளவுட் ஸ்டோரேஜ்களே திறன்மிகு லினக்ஸ் சர்வர்களின் வழி இயங்குவதுதான் என்பது தனிக்கதை.
Also Read : ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் ஒருவரால் ஜெயிக்கவே முடியாது… ஏன்?
Drop Box சேவைதான் முதன்முதலில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு கிளவுட் ஸ்டோரேஜ். அது மட்டுமல்லாமல் Google Drive, Apple icloud, microsoft one drive என கிளவுட் ஸ்டோரேஜ் சேவை வழங்கும் நிறுவனங்கள் அதிகளவில் வரத் துவங்கின.
Blockchain தொழில்நுட்பத்தின் அறிமுகத்துக்குப் பிறகு இணையமும் தொழில்நுட்பமும் பல விதங்களில் தொடர்ந்து மாற்றமடைந்துகொண்டே வருகிறது. இந்த மாற்றங்களை Web3 Technology என அழைக்கிறார்கள். இந்த web3-ன் தாக்கத்தில் கிளவுட் ஸ்டோரேஜில் ஏற்படுத்தி இருக்கும் ஒரு மாற்றம் தான் IPFS (InterPlanetary File System).
அது என்ன IPFS?
Blockchain தொழில்நுட்பத்தின் அடிப்படையில், Peer to Peer வகையில் மல்டிமீடியா தகவல்களைப் பகிர்ந்துகொள்ள உதவும் ஒரு புரோட்டோகால் தான் IPFS. நாம் பிரவுசரில் இணையத்தை உலாவ உதவும் https புரோட்டோகாலைப் போன்றதுதான் IPFS.
IPFS எப்படி இயங்குகிறது?
இந்த தொழில்நுட்பம் இயங்கும் விதம் நம்மில் பலரும் முன்பே அறிந்ததுதான். Torrent-களில் பயன்பட்ட Peer – to – peer network போலத்தான் இதுவும் இயங்குகிறது. கிளவுட் ஸ்டோரேஜில் நாம் ஒரு பைலை அப்லோட் செய்யும் போது அது ஒரு இடத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. அதை எத்தனை இடங்களில் இருந்து வேண்டுமானாலும் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், இந்தப் புதிய தொழில் நுட்பத்தில் நாம் அப்லோட் செய்யும் ஒரு பைல் மேலே சொன்ன Peer to peer முறையில் துண்டு துண்டாக பல இடங்களில், அதாவது Nodeகளில் சேமித்து வைக்கப்படுகிறது. தேவைப்படும் சமயங்களில் இவை ஒருங்கிணைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதனால், இது வேகமாகவும் செயல்படுகிறது. அதாவது Data Transfer வேகமாக இருக்கும்.
எப்படி பயன்படுத்தலாம்?
இதைப் பயன்படுத்த உங்கள் கணினியில் IPFS செயலியை நிறுவிக்கொள்ளலாம். அல்லது க்ரோம் மற்றும் ஃபயர்பாக்ஸ் பிரவுசர்களில் extension ஆகவும் பயன்படுத்தி IPFS:// ப்ரோட்டோகாலை பயன்படுத்தலாம். இந்த முகவரியில் இருந்து செயலியை நிறுவிக்கொள்ளலாம்.