ஆர்.சி.பிக்கு எதிரான போட்டியில் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்று டிபார்ட்மெண்டுகளிலும் ஜொலித்த ஜடேஜா, சி.எஸ்.கேவின் 69 ரன் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார். ஐபிஎல் 2021 சீசனில் தொடர்ந்து 4 போட்டிகளில் வெற்றிபெற்று வீறுநடைபோட்ட விராட் கோலியின் ஆர்.சி.பியின் வின்னிங் ஸ்டிரைக்குக்கு எண்ட் கார்டு போட்டிருக்கிறது தோனியின் சி.எஸ்.கே.
பேட்டிங்
ஆர்.சி.பி போட்டியில் ஜடேஜா களம்கண்ட போது சி.எஸ்.கேவின் ஸ்கோர் 13.5 ஓவர்களில் 111/3. டூப்ளசி, ரெய்னா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்திருந்த சி.எஸ்.கே 20 ஓவர்களை 191/4 என்று முடித்தது. ஜடேஜாவின் ஸ்கோர் 28 பந்துகளில் 62 ரன்கள். ஸ்டிரைக் ரேட் 221-க்கும் மேல்.
லாஸ்ட் ஓவர் 37!
19 ஓவர்கள் முடிந்த நிலையில், சி.எஸ்.கே-வின் ஸ்கோர் 151/4 என்றிருந்தது. பர்ப்பிள் கேப் ஹோல்டரான ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் ஜடேஜா நிகழ்த்தியது வரலாற்றுச் சம்பவம். முதல் நான்கு பந்துகளை லெக்சைடில் சிக்ஸராக விளாசிய ஜடேஜா, அந்த ஓவரில் மட்டும் எடுத்த ரன்கள் 36. ஒரு ரன் எக்ஸ்ட்ராவாக சேரவே, மொத்தம் 37 ரன்கள் சேர்க்கப்பட்டது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் 37 ரன்கள் எடுக்கப்பட்டதே அதிகபட்சம். கடந்த 2011 சீசனில் கிறிஸ் கெய்லேவுக்குப் பின்னர் அந்த மேஜிக்கை இரண்டாவது முறையாக ஜடேஜா நிகழ்த்தினார். 19ஒவது ஓவருக்கு முன்பாக 3/14 என்றிருந்த ஹர்ஷல் படேலின் பவுலிங் ஃபிகர், அந்த ஓவர் முடிந்தபோது 3/51 என்று மாறியது.
மேட்சை மாற்றிய தருணம்
192 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய ஆர்.சி.பி, பவர்பிளே முடிவில் 65/2 என்று வலுவான நிலையில் இருந்தது. ஏழாவது ஓவரில் வாஷிங்டன் சுந்தரை வீழ்த்திய ஜடேஜா, ஆர்.சி.பி பேட்டிங் ஆர்டரின் முக்கிய தூண்களான டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல் இரண்டு பேரையும் கிளீன் போல்டாக்கினார். இது போட்டியை சி.எஸ்.கேவுக்கு சாதகமாகத் திருப்பியது.
ஃபீல்டிங்
`இன்றைய நாள் என்னுடையதாக இல்லை’ போஸ்ட் மேட்ச் பிரசண்டேஷனில் கேட்ச் பற்றிய கேள்விக்கு ஜடேஜா விளையாட்டாகச் சொன்ன பதில் இது. இந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர், இதுவரை 7 கேட்சுகளைப் பிடித்திருக்கிறார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் முக்கியமான தருணத்தில் கே.எல்.ராகுல், இவரது துல்லிய த்ரோவில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதேபோல், ஆர்.சி.பிக்கு எதிரான போட்டியில் டிவிலியர்ஸ் – டேனியல் கிறிஸ்டியன் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடவே, கீப்பர் எண்டில் இவரின் த்ரோவால் வெளியேறினார் டேனியல் கிறிஸ்டியன்.
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..!
ஆஸ்திரேலியத் தொடரில் விரல் முறிவு காயத்தால் கிரிக்கெட்டில் இருந்து சின்ன பிரேக் எடுத்துக் கொண்ட ஜடேஜா, இங்கிலாந்து தொடர் முழுவதும் விளையாடவில்லை. ஏறக்குறைய 3 மாதங்களுக்குப் பின்னர் கிரிக்கெட் களத்துக்குத் திரும்பிய ஜடேஜா, தனது ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். இந்த சீசனில் அவரின் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 192.4. இந்த ஐபிஎல் சீசனில் ஒரு போட்டிக்கு மேல் பேட்டிங் செய்திருப்பவர்களில் இது இரண்டாவது பெஸ்ட் இதுதான். நான்கு போட்டிகளில் 18 ஓவர்கள் பந்துவீசியிருக்கும் இவரின் பௌலிங் எகானமி 6.05. இது நடப்பு தொடரில் இரண்டாவது சிறந்த பந்துவீச்சாகும்.
சி.எஸ்.கே வென்றது எப்படி – 5 பாயிண்ட் மேட்ச் ரிப்போர்ட்
Photo Credits – BCCI