த.செ.ஞானவேல்

விஜய் – விக்ரம் மீட்டிங்..ரஜினியுடன் ஷுட்டிங்… ‘ஜெய்பீம்’ ஞானவேல் ஆச்சரியப் பயணம்

இயக்குநர் த.செ.ஞானவேலின் முதல் படமான ‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஃப்ளாப்தான். ஆனா, அட்டகாசமான ஒன்லைன். ரெண்டாவது படமான ‘ஜெய் பீம்’ நங்கூரம் மாதிரி நச்சுனு இருந்துச்சு. இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு ஏன் முக்கியம்? இந்தப் படைப்பு ரியல் லைஃபில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன? ரஜினியை வைத்து ஞானவேல் எடுக்கப்போற படத்தின் மீதான நம் எதிர்பார்ப்புகள் என்னென்ன? – இவற்றை இந்த வீடியோ ஸ்டோரியில் பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் ஓர் இளம் இயக்குநரின் முதல் படம் வர்த்தக ரீதியிலோ அல்லது விமர்சன ரீதியிலோ சரியாக அமையவில்லை என்றால், கோலிவுட் இண்டஸ்ட்ரியில் சர்வைவலே பிரச்னைதான். இந்தப் போக்கை முறியடித்த மிகச் சிலரில் ஒருவர், இயக்குர் த.செ.ஞானவேல். இதற்கு இவருக்குப் பக்க பலமாக இருந்தது இவருடைய வலுவான பின்புலம்தான்.

சூர்யா - த.செ.ஞானவேல்
சூர்யா – த.செ.ஞானவேல்

தமிழ்ப் பத்திரிகைத் துறையில் கவனத்துக்குரிய பத்திரிகையாளராக இருந்தவர். விகடனில் பணிபுரிந்தபோது பல அற்புதமான பேட்டிகளையும், ஹ்யூமன் இன்ட்ரஸ்ட் ஸ்டோரிகளையும் எழுதியவர். பிரகாஷ்ராஜின் ‘சொல்லாததும் உண்மை’ தொடர்தான் இவரை எழுத்துலகில் மிகவும் கவனிக்க வைத்தது. பின்னர், பிரகாஷ்ராஜையே தன் திரைத்துறை குருவாக ஏற்றுக்கொண்டவர், அவர் மூலமாக சினிமாவைக் கற்றுக்கொண்டார். பின்னர், சூர்யாவின் அகரம் மூலம் சில காலம் கல்விப் பணியாற்றினார். இந்த அனுபவங்களை எல்லாம் மூலதனமாக்கி இப்போது மிக முக்கியத் திரைப் படைப்பாளி என்ற அடையாளத்துக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

இவரது முதல் படமான ‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஃப்ளாப்தான். ஆனா, அட்டகாசமான ஒன்லைன். ஸ்கூலோ, காலேஜோ ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடன்ஸ் பத்தி நிறைய தெரியும்; லாஸ்ட் பெஞ்ச்சர்ஸ் பத்தியும் நிறைய தெரியும். ஆன, நடு பெஞ்ச் ஸ்டூடன்ஸ் பத்தி நாம அதிகம் பேசுறது இல்லை. உண்மையில் அவங்களோட நம்பர்தான் அதிகம். அவங்க லைஃப் பத்தி பேச முற்பட்ட படம்தான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. முதல் படம் எப்படியாவது ஜெயிச்சு ஆக வேண்டியது கட்டாயம்ன்ற பிரஷர்ல நிறைய காம்ப்ரமைஸுக்கு ஆளாகப்பட வேண்டியிருந்தது. தான் நினைச்சபடி படத்தை எடுக்க முடியாமல், தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் விஷயங்களை உள்ளே சேர்க்க வேண்டிய நிலைமைனால, எவ்வளவு சின்சியர் எஃபர்ட் போட்டும் எடுபடாம போயிடுச்சு.

ஃபிலிம் மேக்கிங்ல அந்தப் படம் தந்தப் பாடத்தால, துளியும் சமரசம் இல்லாம, தான் யோசிச்சதை அப்படியே சினிமா கொண்டு வரணும்ன்ற உறுதியா இருந்து, அப்படியான ஸ்பேஸ் கிடைச்ச படம்தான் ‘ஜெய் பீம்’. அந்த ஸ்பேஸ்ல தன்னோட திறமையையும் ஆளுமையையும் நிறுவி, இன்று இந்திய அளவில் முக்கியமான இடத்தைப் பிடிச்சிருக்கார் ஞானவேல்.

நீதிபதி சந்துரு 90-களில் வழக்கறிஞராக இருந்த நேரத்தில், விழுப்புரத்தில் உள்ள ஒரு மலைக் கிராமத்தில் வசிக்கும் பார்வதி எனும் பெண்ணுக்காக நடத்திய சட்டப்போராட்டம்தான் கதை. ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள் மீதான பிற சமூகத்தினரின் பார்வை, தொடர் புறக்கணிப்புகள், லாக்கப் டெத்… இப்படி பல விஷயங்களை உண்மைக்கு நெருக்கமாக நம்மளை பதைபதைக்க வைக்கிற திரைக்கதையில் மிரட்டியிருப்பார் இயக்குநர் த.செ.ஞானவேல்.

எலி வலைகள் தொடங்கி நீதிமன்ற செட் வரையிலான கலை இயக்கம் தொடங்கி, எந்த மாஸ் சீனும் இல்லாம ஒரு சப்போர்ட்டிங் ஆக்டராக முன்னணி ஸ்டாரா சூர்யா நடிச்சது வரைக்கும் படத்தைப் பத்தி சொல்ல எவ்வளவோ இருக்கிறது. இப்படம் குறித்து நிறைய பேசிவிட்டதால், இப்போதைக்கு ஜெய் பீம் ஏற்படுத்திய தாக்கம், அது அரசு நிர்வாக ரீதியா ஏற்படுத்திய பாசிட்டிவ் விளைவுகள் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்.

காலண்டர் இஷ்யூ, நீதிமன்ற வழக்குகள்னு பல சர்ச்சைகளை எல்லாம் கடந்தாலும், இருளர் உள்ளிட்ட பழங்குடியின சமூகத்துக்கு நிகழ்த்தப்படும் கொடூரத்தை பொது சமூகம் முழுமையாக தெரிந்துகொண்டு ரியாக்ட் செய்ததும், இதுபற்றிய உரையாடல்கள் பொது வெளியில் தூண்டப்பட்டதும் ‘ஜெய் பீம்’ ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம்னு சொல்லலாம்.

த.செ.ஞானவேல்
த.செ.ஞானவேல்

இந்தப் படத்தோட ப்ரிவ்யூ ஷோவை முதல்வர் ஸ்டாலின் பார்க்கிறார். படம் முடிஞ்சதும் கண்கலங்கியபடியே வெளியே வர்றார். இயக்குநரை ஜஸ்ட் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு கிளம்பிடுறார். அன்று இரவு இரண்டு பக்கத்துக்கு எமோஷனலா கடிதம் எழுதி படக்குழுவிடம் கொடுத்திருக்கார். அடுத்து, இருளர் உள்ளிட்ட பழங்குடி சமூகத்தினர் நலனுக்கான பல நடவடிக்கைகளை முடுக்கிவிடுறார்.

ஒரு நேர்மையான திரைப் படைப்புக்கு இதைவிட வேறு என்ன இம்பாக்ட் தேவை? பல ஆண்டு காலமாக மறுக்கப்பட்ட சாதிச் சான்றிதழ்களை உரியவர்களுக்கு தரும் நடவடிக்கை எல்லாம் தீவிரமாக நடந்தது. இந்தப் படம் ரிலீஸ் ஆனப்புறம் ஒரு நிகழ்வுக்காக பொள்ளாச்சிக்குப் போறார் இயக்குநர் ஞானவேல். அங்க மூணு மணி நேரமாக இவருக்காக 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் காத்திருக்காங்க. அவர் கையப் பிடிச்சி, “பட்டாவுக்காக இருபது வருஷமா போராடினோங்க. உங்க படம் வந்தப்புறம் மூணே நாள்ல அதிகாரிங்க மூலமா எங்களுக்கு பட்டா கிடைச்சுதுங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை” என்று எமோஷனலா பேசியிருக்காங்க.

இது ஒரு சாம்பிள்தான். இந்த மாதிரி தமிழகம் முழுவதுமே மலைகிராம மக்கள் பல விதங்களில் தங்களோட அடிப்படை உரிமைகளைப் பெற்று பயனடைஞ்சிருக்காங்க. அந்த அளவுக்கு அரசு இயந்திரத்தையே புரட்டிப் போட்டுச்சு ‘ஜெய் பீம்’.

இன்னொரு பக்கம் சட்ட ரீதியிலாகவும் இருளர் மக்களுக்கு நீதி கிடைக்க ஆரம்பிச்சுது. சந்தேக வழக்குகளில் சிறையில் வாடிய பல இருளர் இன கைதிகளுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலேயே ஜாமீன் கிடைச்சுது. சந்தேக வழக்குகளில் பழங்குடி இன மக்களை பிடித்துக் கொண்டு போவது வெகுவாக குறைந்தது. ஆங்காங்கே இன்னமும் அப்படி சம்பாங்கள் நடந்தாலும், லாக்கப்பில் வைத்து வதை செய்வது நின்று போயிருக்கிறது. அப்படியே அதுபோன்ற சம்பவங்கள் சில இடங்களில் நடந்தாலும், ‘ஜெய் பீம்’ பாணியில் துன்புறுத்தல்னு செய்திகள் வெளியே வரத் தொடங்குற அளவுக்கு எக்ஸ்போஸ் பண்ணி வெச்சிருக்கு ‘ஜெய் பீம்’ எனும் மகத்தான சினிமா.

இப்படி ‘ஜெய் பீம்’ படம் ஏற்படுத்திய தாக்கங்கள், அந்தப் படத்தால ஏற்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்ட விதம் பற்றி பல பேட்டிகளில், பேச்சுகளில் இயக்குநர் ஞானவேல் பகிர்ந்ததில் முக்கியமான சில விஷயங்களை மட்டும் பார்ப்போம்.

ஆக்சுவல்லி, தமிழகத்தை விட வட இந்தியாவில் இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம்தான் அதிகம். இப்படம் ரிலீசான பிறகு, இந்தப் படத்தோட பிரதிநிதியாக, நாடு முழுவதும் பல மாநிலங்களில் நடந்த நிகழ்வுகளுக்கு நீதியரசர் சந்துரு போய் வந்திருக்கார். குறிப்பாக, ஒரு மாநிலத்துல நடந்த காவல் துறை மாநாட்டில் ‘எளிய மக்களை காவல் துறை அணுகுவது எப்படி?’ன்றதை பத்தி காவலர்களிடையே பேச அழைக்கப்பட்டார்னா பாத்துக்கோங்க.

‘ஜெய் பீம்’ படத்தோட நோக்கம் சரியா நிறைவேறினாலும்கூட, தனக்கு சில ஏமாற்றங்களையும் கொடுத்ததா சொல்றார் ஞானவேல். இந்தப் படத்தோட நோக்கமே உரையாடலுக்கு எல்லா தரப்பையும் அழைக்கிறதுதான். ஆனா, இந்தப் படத்துக்கு எதிரா குரல் எழுப்புறது நடந்துச்சு. அவங்க நாங்க பேசுறது கேட்குற நிலைல கூட இல்லை. நம் சமூகத்தில் சாதி – அடக்குமுறை – அதிகாரம் பற்றிய வெளிப்படையான உரையாடல் சாத்தியமில்லைன்ற யதார்த்த சூழல் ரொம்பவே ஏமாற்றம் தந்துச்சு. எனவேதான் இந்தப் படம் சார்ந்த எல்லா பிரச்சினைகளுக்கும் எங்களோட பதில்.. வெறும் மவுனமாதான் இருந்துச்சுனு சொல்றார்.

அதேநேரத்துல, இந்தி பேசுறது சம்பந்தப்பட்ட காட்சி என்பது எந்த உள்நோக்கமும் இல்லாம கேஷுவலாக வைக்கப்பட்டதாகவும், படம் ரிலீஸான பிறகே அதில் உள்ள தவறு உணரப்பட்டதாகவும், அதையும் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டதாகவும் மிக நேர்மையாகச் சொன்னதையும் இங்கே குறிப்பிட்டே ஆகணும்.

இது எல்லாத்தையும் தாண்டி, ஒரு மக்களின் படைப்பாக ஜெய் பீம் காலத்தால் அழியாமல் முன்னுதாரணமாகத் திகழும் என்பதற்கு இயக்குநருக்கு நடந்த ஒரு சம்பவமே சாட்சி.

ஜெய் பீம் படம் பார்த்துட்டு, இயக்குநர் ஞானவேலை கன்னியாகுமரின் மலை கிராமங்களைச் சேர்ந்த கானி பழங்குடியினர் தங்கள் ஊருக்கு கூப்பிட்டிருக்காங்க. தங்களோட கஷ்டங்களை காட்டி, இதை படமா எடுங்க அய்யான்னு கேட்டுருக்காங்க.

குரலற்றவர்களின் குரலாக குரல் கொடுங்கள் என்று குரலற்றவளே முன்வந்து கேட்டச் செய்த வகையில், ஒரு படைப்பாளிக்கு இதைவிட மிகச் சிறந்த இம்பாக்ட் வேறென்ன?

அடுத்தப் படம் சூர்யாவை வைத்து செய்வதாகச் சொல்லி வந்த நிலையில், ரஜினியின் 170-வது படத்தை லைகா தயாரிப்பில் இயக்குகிறார் த.செ.ஞானவேல் என்ற அறிவிப்பு, எதிர்பார்ப்புகளை தாறுமாறாக எகிற வைத்திருக்கிறது.

ரஜினி - ஞானவேல்
ரஜினி – ஞானவேல்

‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்துக்குப் பிறகு, இனி தன்னோட படைப்புகளில் வர்த்தக நோக்கத்துக்காக எந்த காம்ப்ரமைஸும் பண்ண மாட்டேன்; நான் யோசிச்ச படம் எப்படி திரைல வரணும்னு நினைச்சனோ அது மாதிரியே கொண்டு வருவேன்னு உறுதியா இருக்கார் ஞானவேல். இந்த உறுதியின் வெளிப்பாடுதான் ‘ஜெய் பீம்’ படத்தில் செங்கேனி கேரக்டருக்கு நிறைய மாஸ் சீன் இருந்துச்சு; சூர்யாவுக்கு அப்படி ஒரு மாஸ் சீன் கூட இல்லை.

அப்படி இருக்கும்போது, ரஜினிக்காகவும் காம்ப்ரமைஸ் ஆகாமல் அசல் சினிமாவா வரும்னு நம்பலாம். அதேபோல, ஜெய் பீம் மாதிரி ஸ்கிரிப்ட் இருக்குமான்னு கேட்டா, அப்படி இருக்கவும் வாய்ப்பு இல்லைன்னு உறுதியா சொல்லலாம். ஞானவேலை பொறுத்தவரைக்கும் டெம்ப்ளேட் – ஒரே பேட்டர்ன் மேல துளியும் ஈடுபாடு இல்லாதவர். கதைக்குத் தேவையான வெவ்வேறு பேட்டர்னில் படம் எடுப்பதுதான் அவர் ஸ்டைல்.

Also Read – அட்லீயால மட்டுமே இதெல்லாம் முடியும்.. நிஜமாவே மாஸ்யா நீங்க!

அதேவேளையில், சமூக – அரசியல் சார்ந்த பிரச்சினைகளை மையமாக வைத்தே, தெறிக்கத் தெறிக்க பரபரப்பான திரைக்கதை கொண்ட மாஸ் படமாகத்தான் நிச்சயம் இருக்கும். அடிப்படையில் பத்திரிகையாளர் என்பதால், தன்னோட ஒவ்வொரு படத்திலும் அதன் தாக்கம் இருக்கும் வகையில்தான் சுவாரஸ்யமான சினிமாவை படைப்பார். அந்த அப்ரோச், ரஜினி மாதிரியான சூப்பர் ஸ்டாரோடு சேரும்போது, அது இன்னும் உச்ச லெவலை எட்டும் என்று நம்பலாம்.

பா.ரஞ்சித் ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கியதற்குப் பிறகு, அவர் மூலமாக ‘கபாலி’, ‘காலா’ மாதிரி முன்னெப்போதும் பார்க்க முடியாத ரஜினியை பார்க்கும் வாய்ப்பு கிடைச்ச மாதிரி… ‘ஜெய் பீம்’ படத்துக்குப் பிறகு ரஜினியை இயக்கும் ஞானவேல் நாம் இதுவரை பார்த்திடாத உண்மைக்கு நெருக்கமான கதைக்களத்தில் ரஜினியை முற்றிலும் வேறொரு வகையில் காட்டுவார் என்று எதிர்பார்ப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top