அட்லீ

அட்லீயால மட்டுமே இதெல்லாம் முடியும்.. நிஜமாவே மாஸ்யா நீங்க!

அட்லீ என்றாலே மாஸ் தான். ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில்… இந்த நான்குப் படங்களுமே வசூலில் மாஸ் காட்டியவைதான். மாஸ் என்பது வசூல் மட்டுமல்ல… அட்லீயைப் பொறுத்தவரையில் அது ஒரு ‘வாழ்வியல்’ கோட்பாடு. அது எப்படி என்பதையே இந்த வீடியோ ஸ்டோரியில் பார்க்கப் போகிறோம்.

இயக்குநர் ஷங்கரிடம் சினிமாவைக் கற்றுக்கொண்டு இளம் வயதில் இயக்குநராகி, அடுத்தடுத்து உச்ச நடிகரின் படங்களை இயக்கி, அவற்றையும் தொடர் வெற்றிப் படங்களாகக் கொடுத்த அட்லீயின் கரியர் தொடக்கமே மாஸ்தான். அவரோட பர்சனல் லைஃப்லையும், கரியரிலும் நிறைந்திருக்கும் மாஸ்தான் எலிமென்ட்ஸ்தான், பாலிவுட்டில் அவரை ‘ஜவான்’ வரைக்கும் கொண்டு போய் சேர்த்திருக்கு.

80ஸ், 90ஸில் தனக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்புகளை இந்தத் தலைமுறை ரசிக்கத்தக்க திரைமொழிகளில் வழங்கும் கலையில் வித்திகர். இதை எல்லாருமே காப்பி, சுடுறதுன்னு தப்பா புரிஞ்சிட்டு இருக்காங்க. ஆக்சுவல்லி, படைப்பிலக்கியத்திலேயே இதற்கு வேறொரு பெயர் இருக்கு. எடுத்தாளுதல்… யெஸ், பலருக்கும் எடுத்தாளுதல் கலை என்பது எளிதில் வசப்பட்டுவிடாது. அதுவும் மாஸ் ஆடியன்ஸை மகிழ்விக்கும் வகையில் அந்தக் கலையில் நேர்த்தி காட்டுவது என்பது சமகால தமிழ் சினிமாவில் அட்லீ அவர்களால் மட்டுமே சாத்தியப்பட்ட ஒன்று.

ஒரு படைப்பு எடுத்தாளப்படும்போது, அந்த மூலப் படைப்பை உருவாக்கியவரே வியக்கும் அளவுக்கு இருக்க வேண்டும். அதைத்தான் அட்லீ ஆகச் சிறப்பாக செய்துள்ளார். சில உதாரணங்கள் பார்ப்போம்.

மௌனராகம்
மௌனராகம்

மெளன ராகம் ஒரு க்ளாஸ் படம். அதை ஒரு மாஸ் படமா, எல்லா தரப்பு மக்களும் கொண்டாடும் படமா அட்லீ மாத்தினது எல்லாம் வேற லெவல். அதுக்காக, கதையில் பல மாற்றங்களைக் கையாண்டார். மெளன ராகம் படத்தில் ஒரு காதல் தோல்விதான். ராஜா ராணி படத்திலோ ரெண்டு காதல் தோல்விகள். அங்கே ஆண் கதாபாத்திரமான கார்த்திக் மரணம். இங்கே பெண் கதாபாத்திரமான நஸ்ரியா மரணம். அங்கே மோகன் கதாபாத்திரம் ஓர் ஆண். இங்கே அந்தக் கதாபாத்திரம் மேம்படுத்தப்பட்டு நயன்தாரா வடிவமைக்கப்பட்டார். இதையெல்லாம் தாண்டி, மெளன ராகம் படம் முழுக்க சீரியஸ் டோன்ல போகும். ஆனால், ராஜா ராணி முழுக்க முழுக்க காமெடியால் நிறைந்திருக்கும். இப்படி, அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கற்பனை செய்யும் அளவுக்கு பல மாற்றங்களைக் கையாண்டு வெற்றி வாகை சூடியவர் இயக்குநர் அட்லீ.

அறிமுகப் படத்தை ஒரு ரோம்-காம் ஜானரில் எடுத்துவிட்டு, அடுத்த படத்திலேயே உச்ச நடிகரான விஜய்யை கன்வீன்ஸ் செய்யும் வகையில் தெறிக்கத் தெறிக்க ஒரு ஆக்‌ஷன் டிராமா கொடுக்கிறது எல்லாம் மாஸ் இயக்குநரான அட்லீயால் மட்டுமே சாத்தியம்.

தெறி
தெறி

நேர்மையும் திறமையும் மிக்க போலீஸ் அதிகாரி ஒருவரின் வாழ்க்கையில் புரட்டிப் போட்டு பேரிழப்பை ஏற்படுத்துகிறார் ஒரு பயங்கர வில்லன். புலி, பதுங்கி வாழ ஆரம்பிக்கிறது. பதுங்கிய புலியை விடாது துரத்தும் வில்லன் மிருகம். மீண்டும் பாயும் அந்தப் புலி, பழைய பன்னீர்செல்வமாக மாறி வில்லன் மிருகத்தை வேட்டையாடுகிறது.

சத்ரியன், தெறி ரெண்டுமே இப்படி ஒரே கதை மாதிரி தெரியும். ஆனால், சத்ரியன் படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் கே.சுபாஷும் சரி, அந்தப் படத்தோட கதையை எழுதிய மணிரத்னமோ சரி, யாருமே க்ளைம் பண்ண முடியாத அளவுக்கு பல மாற்றங்களை நிகழ்த்தி படம் முழுக்க மாஸ் காட்டியிருப்பார் அட்லீ. சத்ரியன் இன்ட்ன்ஸ் ஆன ஒரு படம். அந்த மாதிரி இன்டன்சிட்டியை இளம் தலைமுறை ரசிகர்களுக்குக் கொடுத்து மனதில் பாரத்தை ஏற்ற விரும்பாத அட்லீ, தெறியை ஆக்‌ஷன் ப்ளஸ் ஃபீல் குட் படமாகவே படைத்திருப்பார்.

அதுமட்டும் அல்ல. இந்தக் கதையில் சீரிய பல மாற்றங்களை செய்திருப்பார். அந்தப் படத்தில் விஜயகாந்துக்கு ரெண்டு குழந்தைகள். இந்தப் படத்திலோ விஜய்க்கு ஒரு குழந்தை மட்டும்தான். இங்கே, மக்கள் தொகை கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தையும் மறைமுகமாக வலியுறுத்தியிருப்பார்.

அதேபோல, தெறி படத்துல விஜய்யை மாஸா காட்டுற பல சீன்கள் வெச்சிருப்பார். ஆக்சுவல்லி, சுறாவால் தாக்கப்பட்ட விஜய்க்கு ஒரு மீட்பராகவே இருந்திருப்பார். சமந்தாவை கண்கங்காம பார்த்துப்பேன்னு பிராமிஸ் பண்ண அடுத்த சீன்லயே சமந்தாவை இவர் கண் முன்னாடியே போட்டுத் தள்ளிடுவாங்க. ஒரு மாஸ் ஹீரோ கையறு நிலைல இருக்கிறதைப் பார்த்துட்டு ஆடியன்ஸ் கலங்கிடுவாங்க. அதை பேலன்ஸ் பண்றதுக்காக, சத்ரியன்ல திலகனை க்ளைமாக்ஸ்ல போட்டுத் தள்ள விஜயகாந்த் ரொம்ப நேரம் எடுத்துப்பார். ஆனால், இதுல வில்லன் மகேந்திரனை பத்து செகண்ட்ல தொங்கவிட்டிருப்பார். செம்ம மாஸ்-ல!

மெர்சல்
மெர்சல்

முந்தைய ரெண்டு படங்களைக் கூட எந்தப் படத்தோட சாயல்னு சாமானிய ரசிகர்களும் ஈஸியா கண்டுப்பிடிச்சிட முடியும். ஆனால், ‘மெர்சல்’ படத்தை எதுவா இருக்கும்னு கன்ஃப்யூஸ் பண்ண வெச்சாரு இயக்குநர் அட்லீ. அதுவே அந்தப் படத்தோட முதல் வெற்றி. என்னதான் ‘அபூர்வ சகோதர்கள்’ நினைவுக்கு வந்தாலும் படம் முழுக்க ஃப்ரெஷ் ஃபீலிங் கிடைக்க அட்லீக்கு சப்போர்ட் பண்ணியிருப்பாரு கோ-ரைட்டரான ராஜமவுலியின் தந்தையும், லெஜண்டரி கதாசிரியருமான விஜேந்தர் பிரசாத்.

முந்தைய ரெண்டு படங்களைப் பார்த்துட்டு, இவர் மணிரத்னம் கிட்ட வேலையை கத்துக்கிட்டாரான்னு டவுட் வரும். ஆனா, ஷங்கர் கிட்டதான் தொழில் கத்துகிட்டாருன்றது மெர்சல்ல நிரூபித்திருப்பார் அட்லீ. ஷங்கர்கிட்ட ரெண்டு விஷயம் அவர் கத்துகிட்டார். ஒண்ணு… பாடல்களை பிரமாண்டமா படம்பிடிக்கும் கலை. அதுல அச்சு அசலா தன் குருநாதரைப் பின்பற்றி மாஸ் ஆடியன்ஸுக்கு விருந்து படைத்திருப்பார் அட்லீ. இன்னொண்ணு என்னன்னு கேட்கிறீங்களா… அவசரம் வேணாம், கடைசில சொல்றேன்.

தெறி படம் ஹிட் என்றாலும் எல்லாம் போக கையில மிஞ்சுன லாபம் கம்மிதான்னு ஒரு டாக் இருந்துச்சு. என்னடா மாஸுக்கு வந்த சோதனைன்னு பார்த்தா, ‘மெர்சல்’ வசூல் மூலமா மிரட்டி, தான் ஒரு மாஸ் இயக்குநர்தான்னு அழுத்தமாக பதிவு செய்தார் அட்லீ. யெஸ்… கிட்டத்தட்ட 120 கோடி ரூபாய் அளவுக்கு பட்ஜெட் கொண்ட இந்தப் படம் ரெண்டு மடங்குக்கும் மேல வசூலை ஈட்டியது வரலாறு. இந்தப் படத்துல ஹீரோ விஜய்யை செம்ம க்ளாஸாவும் மாஸாவும் காட்டின அட்லீ, எஸ்.ஜே.சூர்யா மூலமான வில்லனுக்கு மாஸ் எலிமெண்ட்ஸை கூட்டியிருப்பாரு. இப்படி படத்துல டீகோட் பண்ண நிறைய நிறைய இருக்கு.

இந்த ரெண்டு படத்துல மட்டும் அல்ல, தன் அண்ணன் விஜய்க்கு தம்பி அட்லீ நிறையவே செஞ்ச படம்தான் ‘பிகில்’. ஒரு ஒரிஜினல் படைப்பாளிக்கு இன்ஸ்பிரேஷன்தான் முக்கியம். தன்னோட முந்தையப் படங்கள் எல்லாத்துலயும் தனக்குத் தாக்கம் தந்த படங்களை மட்டும்தான் இன்ஸ்பையர் ஆகி பண்ணியிருப்பார். ஆனா, இந்தப் படத்துல ஸ்போர்ட்ஸ் ரியல் க்ளிப்களில் இன்ஸ்பயர் ஆகி, அவற்றை மாஸ் ஆடியன்ஸுக்கு பெரிய ஸ்க்ரீன்ல விஷூவல் ட்ரீட்டாக கொண்டு வந்தது அட்லீயின் ஆகச் சிறந்த படைப்பூக்கம்னே சொல்லலாம்.

அடுத்து ‘பிகில்’. உமன் எம்பவர்மென்ட்-ஐ ஒரு மாஸ் ஹீரோ மூலமா மாஸ் ஆடியன்ஸுக்கு கடத்திய படைப்பு. தமிழ்ல ஸ்போர்ட்ஸ் ஜானர் படங்கள் மிக அரிது. அதிலும் ஃபுட்பால் அரிதிலும் அரிது. அதிலும் பெண்களை மையமாக வைத்து ஃபுட்பால் ஸ்போர்ட்ஸ் சினிமான்றது புத்தம் புதிது. இந்த ஐடியாவே ஒரு மாஸ்தான். எத்தனையோ ஸ்போர்ட்ஸ் படங்கள் பார்த்திருப்போம். அதெல்லாம் ஸ்போர்ட்ஸை மட்டும் ஃபோகஸ் பண்ணி மெய் சிலிர்க்க வைப்பவை. ஆனா, பிகில் அப்படியானது மட்டுமல்ல, அங்கதான் ராயப்பன் விஜய், இந்த ஸ்போர்ட் ஜானர் படத்தை மற்றொரு தளத்துக்கு கொண்டு போறதை கவனிக்கலாம்.

Also Read – நிஜத்திலும் சண்டக்கோழி.. நடிகர் லால் மெர்சல் பின்னணி!

‘நாயக் கண்டா கல்லைக் காணோம்… கல்லைக் கண்டால் நாயக் காணோம்’னு ஒரு சொலவடை உண்டு. அது இயக்குநர் அட்லீயின் திரைப் படைப்புகளின் ஜானர்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். அதாவது, ஒரு நாய் சிலை இருக்கு. அது அப்படியே அச்சு அசலா உயிரோட இருக்குற நாய் மாதிரியே இருக்கும். அதை நீங்க நாய்னு நினைச்சா, அது நாய்… நீங்க அதை வெறும் கல்லுன்னு நினைச்சா, அது வெறும் கல். அப்படிதான் அட்லீ பட ஜானர்கள். ரோம்-காம்-னு நினைச்சுப் பார்த்து அது ரோம்-காமா இருக்கு. ஆக்‌ஷன் த்ரில்லர்னு நினைச்சுப் பார்த்தா, அது ஆக்‌ஷன் – த்ரில்லரா இருக்கும். ஆக்‌ஷன் டிராமாவா நினைச்சுப் பார்த்தா அது ஆக்‌ஷன் டிராமாவா இருக்கும். அப்படித்தான் பிகில் படமும். அதை நீங்க ஆக்‌ஷன் டிராமாவா பார்த்தா, ஆக்‌ஷன் டிராமா. ஸ்போர்ட்ஸ் டிராமாவா பாத்தா ஸ்போர்ட்ஸ் டிராமா.

வசூலில் மாஸ் காட்டியது மட்டுமின்றி, முற்போக்காளர்களால் அட்லீ அதிகம் தாக்கப்பட்டதும் இந்தப் படத்தில்தான். பெண்களை முன்னேத்துறேன்னு சொல்லி படம் எடுத்துட்டு, அதுல விஜய் ‘குண்டம்மா’, ‘குண்டம்மா’-ன்னு பாடி ஷேமிங் பண்றது எவ்ளோ கேவலமான ஹிப்பாக்ரஸின்னு பலரும் கொந்தளிச்சாங்க. ஆனா, அவங்க கண்ணுக்கு ஒரு துளி விஷம்தான் தெரிஞ்சிதே தவிர, ‘பெண்களால் எதையும் சாதிக்க முடியும்’ன்றதை கால்பந்தாட்ட வெற்றி மூலமா மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவே ஹீரோ பாடுபட்டாருன்ற லிட்ட கணக்கிலான பால், அவங்க கண்ணுக்குத் தெரியலை.

Also Read – நிஜத்திலும் சண்டக்கோழி.. நடிகர் லால் மெர்சல் பின்னணி!

ஒவ்வொரு ஆடியன்ஸுக்கு ஒவ்வொரு விதமான புரிதலை ஏற்படுத்த வைக்கிறதுதான் மாஸ் வெற்றிக்கு வழி வகுக்கும்னு சொல்வாங்க. அதுலயும் அட்லீ எக்ஸ்பர்ட். பிகில் படத்துல மகளிர் கால்பந்தாட்ட அணியோட சாதனைதான் நார்மல் ஆடியன்ஸுக்கு தெரியும். ஆனா, படம் முழுக்க விஜய்களின் வீரமும் விவேகமும் நிலைநாட்டப்பட்டது அவரது ரசிகர்களால்தான் ரிசீவ் பண்ண முடியும்ன்ற அளவுக்கு அண்ணனுக்கு செஞ்சியிருப்பார் தம்பி அட்லீ.

இதை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். ஒரு படைப்பாளியாக தன்னுடைய நல்ல சிந்தனைகளை மட்டுமின்றி கெட்ட சிந்தனைகளையும் பகிரங்கப்படுத்த தயங்காத தைரியமான மாஸ் இயக்குநர் என்பதை சொல்லும் விதமாகவேதான் “சாதிக்க முகமோ தோற்றமோ முக்கியமில்லை” என்று க்ளாஸ் எடுத்த அடுத்தவரும் காட்சிகளிலேயே குண்டம்மா என்று உருவக்கேலி செய்தாரோ என்ற எண்ணமும் எழாமல் இல்லை.

சரி, ஷங்கர் கிட்ட இருந்து அட்லீ ஃபாலோ பண்ற இன்னொரு மேட்டர் சொல்றேன்னு சொன்னேனே… இப்ப அதுக்கு வர்றேன். ஷங்கரின் ஒவ்வொரு படமும் சோஷியல் மெசேஜ் கொண்டாதா இருக்கும். அதேபோல அட்லீயின் ஒவ்வொரு படத்துலயும் சோஷியல் மெசேஜும் சமூக அவலங்களும் இருக்கும்.

இயக்குநர் அட்லீ
இயக்குநர் அட்லீ

ராஜா ராணியை எடுத்துடா, காதல் தோல்விகளுக்குப் பின்னாலும் காதல் உண்டு-ன்ற மெசேஜ். நிர்பயா சம்பவத்தின் தாக்கத்தால் உருவான ‘தெறி’யை எடுத்துகிட்டா ‘நல்ல தந்தை இருந்தால் நல்ல சமூகம் உருவாகும்’. மருத்துவக் குற்றங்களை அம்பலப்படுத்திய ‘மெர்சல்’ தமிழர்கள் இழந்த பாரம்பரிய அடையாளங்களும் அதை மீட்டெடுக்கும் முனைப்பும்’ பற்றி பேசியது. ‘பொண்ணுன்றது ரொம்ப முக்கியமான விஷயம்’ன்றதை நிறுவியது பிகில்.

இந்த நாலு படத்துலயும் இப்படியெல்லாம் மெசேஜ் இருக்குன்றதை ரொம்ப ஆழமா போய் கவனிச்சியிருக்கீங்களேனு நீங்க என்கிட்ட கேட்கலாம். ஆனால், இதையெல்லாம் மாஸ் ஆடியன்ஸ் மண்டைய பிச்சிகிட்டு கண்டுபிடிக்க வேண்டாம்ன்ற நம்ம மேல இருக்கிற அக்கறையால அட்லீ அவர்களே சொன்ன மேட்டர்கள்தான் இவை. இந்த மாதிரி தன்னோட மாஸ் ஆடியன்ஸை அப்ரோச் பண்ற மாஸ் படைப்பாளி ஒருத்தரை காட்டுங்க பார்ப்போம்…

அதாங்க நம்ம அட்லீ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top