டூயட் படம்

பிரபுவைக் கலாய்க்க வைரமுத்து எழுதிய வரி… `டூயட்’ சக்ஸஸ் சீக்ரெட்ஸ்!

தமிழ் சினிமாவுல மியூசிக்கலா கதை சொல்ற ஒரு சில இயக்குனர்கள்ல மிக மிக முக்கியமானவர் கே.பாலச்சந்தர். அப்படிப்பட்ட, கே.பி முதன்முறையா ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து உருவாக்குன ஒரு ஃபுல் & ஃபுல் மியூசிக்கல் ஜானர் படம்தான் ‘டூயட்’. 1994 மே மாச லீவுல ஜெய்ஹிந்த் படத்துக்கு போட்டியா வெளியான இந்தப் படம் ரிலீசுக்கு முன்னாடியே மிகப்பெரிய டாக்கை ஏற்படுத்துன ஒரு படமா இருந்துச்சு. 1989ல வெளியான புதுப்புது அர்த்தங்கள் வெற்றிக்குப் பிறகு கொஞ்சம் டல்லடிச்சிருந்த கே.பி கரியர்ல ஒரு சின்ன கம்பேக்கா இருந்த டூயட் படத்தோட வெற்றிக்கு முக்கியமா இருந்த 5 காரணங்கள் பத்தி இப்போ நாம பாக்கலாம்.

கே.பாலச்சந்தர்

1990-ல ஃப்ரெஞ்ச்ல வெளிவந்த படம்தான்.  Cyrano de Bergerac இசைத்துறையில் இருக்கும் இரு சகோதரர்கள் ஒரே பெண்ணைக் காதலிக்குறாங்க அப்படிங்குற லைனை அடிப்படையாகக் கொண்ட அந்தப் படத்தைப் பார்த்த கே.பி, அந்தப் படத்துலேர்ந்து இன்ஸ்பயர் ஆகி நாமளும் இசையையும் காதலையும் பேசிக்கா வெச்சு தமிழ்ல ஒரு படம் பண்ணணும்னு நினைச்சார். அதுதான் ‘டூயட்’. 1960-கள்ல இயக்குநரா அறிமுகமான கே.பாலச்சந்தர், எம்.எஸ்.வி, இளையராஜா காலகட்டத்தைக் கடந்து, ஏ.ஆர்.ரஹ்மான் காலத்துலயும் இப்படியொரு படத்தை எடுக்கனும்னு நினைச்ச அவரோட எனர்ஜி லெவல்தான் இந்தப் படத்தோட வெற்றிக்கு முக்கிய காரணம். இதுக்கு முன்னாடி கே.பி 96 படங்களை இயக்கியிருந்தாலும், ஏதோ தன்னோட முதல் படம் மாதிரி, டூயட் படத்தோட கேஸ்டிங் தொடங்கி, சிச்சுவேசன்கள், வசனங்கள், பாடல்கள்னு பாத்து பாத்து வேலை செஞ்சு ஒரு அக்மார்க் கே.பி படமாக ‘டூயட்’ படத்தை ப்ரசெண்ட் பண்ணியிருப்பார். குறிப்பா கதையின் மையக்கருவான அண்ணன் – தம்பி உறவையும் அதில் ஏற்படும் உறவு சிக்கல்களையும் ரொம்பவும் ரொமாண்டிசைஸ் பண்ணாம, அழகா யதார்ததமா காட்டியிருந்திருப்பார். தலைமுறைகளைக் கடந்தும் ரசிக்கவைக்கும்படியான கே.பியின் எழுத்தும் இயக்கமும் படத்தோட வெற்றிக்கு முக்கிய காரணமா இருந்துச்சு.

ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ்ல ரொம்ப அரிதா வரக்கூடிய மியூசிக்கல் ஜானர் படங்கள்ல முக்கியமான படமா,  இன்னைக்குவரைக்கும் ‘டூயட்’ நின்னு பேசுறதுக்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மானை ஒரு தயாரிப்பாளரா ‘ரோஜா’ மூலமா அறிமுகப்படுத்துன கே.பாலச்சந்தரே தன்னோட டைரக்சன்ல பண்ற படத்துக்கு கூப்பிடுறாருன்னா அதுக்கு என்ன மாதிரியான வேலைபாடு செஞ்சு கொடுக்கணுமோ அதை சிறப்பாவே செஞ்சிருந்தாரு ஏ.ஆர்.ரஹ்மான். அதுவும் தான் இசையமைப்பாளரா அறிமுகமான மறுவருடமே ஒரு சீனியர் இசையமைப்பாளர்போல இந்தப் படத்தோட மொத்த வெயிட்டேஜையும் அசால்ட்டாக தன் தோளில் தாங்கியிருந்திருப்பாரு. படத்துல மொத்தம் 15 டிராக்ஸ் இருக்கும். அதுல 8 முழுநீள பாட்டு, 3 கவிதைகள் இதுபோக 4 மியூசிக் டிராக்குஸ்னு ஏ.ஆர்.ரஹ்மான் ஃபுல் ஃபார்ம்ல அடிச்சு துவம்சம் செஞ்சிருப்பார். டூயட் படத்துல ஒரு முக்கியமான கேரக்டராகவே சாக்ஸபோன் இசைக்கருவி இருக்கும். படத்துல பிரபு வாசிக்கும் சாக்ஸபோன் இசைக்குறிப்பு எல்லாத்தையுமே பிரபல சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத்தை வைச்சு ஏ.ஆர்.ரஹ்மான் அட்டகாசமா வடிவமைச்சிப்பார். அதுவரை இசை உலகுல மட்டும் கவனம் பெற்றிருந்த கத்ரி கோபால்நாத்துக்கு ‘டூயட்’ படத்துக்குப் பிறகு உலக அளவில் மிகப்பெரிய வெளிச்சம் கிடைச்சுதுனு சொல்லலாம். 

வைரமுத்து

மியூசிக்கல் மூவின்னா  கண்டிப்பா அங்க பாடல்வரிகளுக்கும் முக்கிய பங்கு இருக்கணும். அதை சரியா புரிஞ்சுகிட்ட வைரமுத்து இந்தப் படத்துக்காக தன்னோட தமிழை வாரி வழங்கியிருப்பார். ரோஜாவுக்கு முன்பு, இன்னும் சரியா சொல்லனும்னா இளையராஜாவை விட்டு வைரமுத்து பிரிஞ்சிருந்தப்போ அவரோட மார்க்கெட் ரொம்பவே சுனங்கியிருந்துச்சு. அப்போதைய வைரமுத்துவின் மார்க்கெட்டை முன்வைச்சு, இனி அவர் அவ்வளவுதான் என பேச்சு பரவ ஆரம்பிச்சுது. அந்த பேச்சுக்கெல்லாம் பதிலடி தர்ற மாதிரி டூயட் பட ‘மெட்டுப்போடு’ பாட்டுல வைரமுத்து, ‘என் தாய் கொடுத்த தமிழுக்கு இல்லை தட்டுப்பாடு.. சரக்கு இருக்குது, முறுக்கு இருக்குது மெட்டுப்போடு’ என  யார் எத்தனை மெட்டுக்கள் போட்டாலும் தன்னால பாடல்களை எழுதிக் குவிக்க முடியும் என தன் தமிழாலேயே பதில் சொல்லியிருந்திருப்பார் வைரமுத்து. பாடல்கள்னு இல்லாம படத்துல நிறைய அழகான குட்டி குட்டி கவிதைகள் அங்கங்க வரும். அது எல்லாத்தையும் எழுதுனது வைரமுத்துதான். ஒரு சிச்சுவேசன்ல ஹீரோயின்கிட்ட பிரபு தன் காதலை வெளிப்படுத்துற மாதிரி ‘சத்தத்தினால் வந்த யுத்தத்தினால்’ னு ஒரு கவிதை வரும் அதெல்லாம் வைரமுத்துவோட வேற லெவல் சம்பவம். அந்த கவிதையை பிரபுவே தன்னோட குரல்ல அவ்வளவு ஆக்ரோஷமா சொல்லியிருப்பாரு. அதெல்லாம் Pure bliss ப்ரோ.

பிரபு

இந்தப் படத்தில நடிக்க சம்மதிச்சதுக்கே முதல்ல பிரபுவைப் பாராட்டணும். ஏன்னா எந்த ஒரு ஹீரோவும் தன் கனவுலகூட நினைச்சுபாக்க தயங்குற ஒரு விஷயத்தை பிரபு இந்தப் படத்துல செஞ்சிருப்பார். இந்தப் படம் முழுக்க வர்ற தன்னோட பருமனான உடல் தோற்றத்தைக் கிண்டலடிக்கிற விசயத்தை ஜஸ்ட் லைக் தட்டாக எடுத்துக்கிட்டு நடிச்சுக் கொடுத்திருப்பார் பிரபு. கே.பியும் அதை பிரபு ரசிகர்களும் ஏன், சிவாஜி ரசிகர்களே ரசிக்குறமாதிரி செம்ம ஜாலியாதான் காட்சிப்படுத்தியிருப்பார். படத்துல பிரபுவை ஹீரோயின் மீனாட்சி பார்க்குறப்போலாம் கிண்டலாகக் கேட்கும் ‘எந்த கடையில அரிசி வாங்குறீங்க’ங்கிறதெல்லாம் அந்த டைம்ல ரொம்ப ஃபேமஸா இருந்துச்சு. போதாக்குறைக்கு ‘கத்தரிக்கா.. குண்டு கத்தரிக்கா’ன்னு ஒரு முழு பாட்டையே பிரபுவை ஹீரோயின் டீஸ் செய்றமாதிரி வைத்திருப்பார் கே.பி. இந்தப் பாட்டை செம்ம ரகளையா எழுதியிருந்த வைரமுத்து, ஒரு இடத்துல பிரபுவோட நிஜ வாழ்க்கையில நடந்த ஒரு சம்பவத்தையே குறும்பான வரிகளாக எழுதியிருப்பார். பிரபுவின் உடல் எடை அதிகமாக ஆரம்பிச்ச டைம்ல, நண்பர்களின் அட்வைஸ்படி தினமும் தீவிரமாக ஹார்ஸ் ரைடிங் செய்ய ஆரம்பிச்சிருக்காரு பிரபு. அந்த டைம்ல சிவாஜியை பாக்க வீட்டுக்கு வந்த நண்பர் ஒருத்தர் சிவாஜிக்கிட்ட, ‘என்னங்க உங்க பையன் தினமும் ஹார்ஸ் ரைடிங் போறாராமே. உடம்பு இளைச்சிருக்கா..?’ எனக் கேட்க, சலிப்புடன் சிவாஜி, ‘குதிரைதான் இளைச்சிருக்கு’ என கமெண்ட் அடித்திருக்கிறார்.

Also Read – ரமணா படத்தை பிளாக்பஸ்டராக்கிய 4 காரணங்கள்!

இந்த விசயத்தை எப்படியோ தெரிஞ்சுகிட்ட வைரமுத்து, அதை அப்படியே அந்தப் பாட்டுல ‘குண்டான உடல் இழைக்க குதிரை சவாரி செஞ்சா.. குதிரைதான் இளைச்சுப்போச்சாம் சொன்னாங்க வீட்டில்’னு எழுதியிருப்பார். இதெல்லாம் ஒரு பக்கம்னா படத்துல பிரபுவோட நடிப்பும் வேற லெவல்ல இருக்கும். தம்பியான ரமேஷ் அரவிந்த் ஒரு மாதிரி புரிஞ்சுக்காம நடந்துக்கிறப்பலாம் ஒரு அண்ணனா நிதானமா நடந்துக்கிற குணாங்கிற அந்த கேரக்டர்ல ரொம்ப பக்குவமான நடிப்பை பிரபு கொடுத்திருப்பாரு. இந்த அளவுக்கு படத்துக்காகவும் கதைக்காகவும் தன்னோட இமேஜைப் பத்திலாம் துளியும் கவலைப்படாம தன்னோட பங்கை சிறப்பா செஞ்சுக்கொடுத்த பிரபு, டூயட் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்னு சொல்லலாம்.  

கேஸ்டிங்

இந்தப் படத்துக்கு கே.பி அமைச்ச கேஸ்டிங்கும் ஸ்பெஷலாதான் இருந்துச்சு. பாலிவுட் ஹீரோயின் மீனாட்சி சேஷாத்ரி தொடங்கி ரமேஷ் அரவிந்த், சுதா, சரத்பாபு, செந்தில், சார்லினு  நிறைய திறமையான நடிகர்கள் பட்டாளத்தை இந்தப் படத்துல பாக்கமுடியும். இவங்க எல்லாரையும்விட இந்தப் படம் மூலமாதான் நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் கிடைச்சுது. டூயட் படத்துலதான் பிரகாஷ் ராஜ் அறிமுகமானார். முதல் படத்துலேயே தன்னோட வித்தியாசமான நடிப்பால தமிழ் ரசிகர்களின் செல்லமும் ஆனார் பிரகாஷ்  ராஜ். அந்த நன்றியிலதான் பிரகாஷ் ராஜ் தன்னோட தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘டூயட் மூவிஸ்’னு பேர் வெச்சு இப்போவரை படங்களைத் தயாரிச்சுக்கிட்டிருக்கார்.

இப்படியான பல பெருமைகளைக்கொண்ட ‘டூயட்’ படம் வெளிவந்து இதுவரை 28 ஆண்டுகள் ஆகியிருச்சு. ஆனாலும் இன்னைய தேதிக்கு மியூசிக்கல் ஜானர்ல ஒரு படம் வந்தாலும் அந்தப் படத்துக்கு சரியான டஃப் கொடுக்குற படமா டூயட் இன்னும் ஃப்ரெஷ்ஷாதான் இருக்கு. அதுமட்டுமில்ல இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் இசை ரசிகர்கள் மனசுல ‘டூயட்’ படத்துக்கு ஒரு தனி இடமிருக்குங்கிறதுல எந்த சந்தேகமும் இல்லை. 

5 thoughts on “பிரபுவைக் கலாய்க்க வைரமுத்து எழுதிய வரி… `டூயட்’ சக்ஸஸ் சீக்ரெட்ஸ்!”

  1. Wow! This could be one particular of the most helpful blogs We’ve ever arrive across on this subject. Basically Wonderful. I am also an expert in this topic so I can understand your effort.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top