நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கும் விக்ரம் படத்தில் இடம்பெற்றிருக்கும் ’Pathala Pathala’ பாடல் வெளியாகியிருக்கிறது. இதில், மெட்ராஸ் பாஷை எனப்படும் சென்னை வழக்குத் தமிழில் பாடலை எழுதியதோடு பாடியும் இருக்கிறார் கமல். நடிகர் கமல் மெட்ராஸ் பாஷை பேசி நடித்த முக்கியமான 6 படங்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம பார்க்கப்போறோம்.
`கமல்ஹாசன் – மெட்ராஸ் பாஷை’ பிணைப்பு
மெட்ராஸ் பாஷை எனப்படும் சென்னை வழக்கு தமிழைப் பேசி நடிப்பதில், அதை லாவகமாக உள்வாங்கிக் கொண்டு தேவையான இடத்தில் பயன்படுத்துவதில் நடிகர் கமல்ஹாசனை ஒரு ஜீனியஸ் என்றே சொல்லலாம். சென்னைத் தமிழ் குறித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கமல் ஒரு விளக்கம் கொடுத்திருப்பார். நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் மெட்ராஸ் பாஷையில் பேமானி’ என்கிற வார்த்தைக்கான பொருள் என்ன என்கிற கேள்வி வரும். அந்தக் கேள்விக்கு நேர்மையற்றவன் என்கிற பதிலைச் சொல்லிவிட்டு மெட்ராஸ் பாஷை குறித்து கமல் கொடுத்திருந்த விளக்கம் அவரின் மொழி அறிவுக்கு மிகச்சிறந்த சான்று என்றே சொல்லலாம். கமல் கூறுகையில்,
பே-இமான் என்கிற உருதுச் சொல்லில் இருந்து வந்ததுதான் பேமானி என்கிற வார்த்தை. மெட்ராஸ்காரங்களுக்கு உருது தெரியும். அதுவும் என்னான்னா, மேல்தட்டு மக்களுக்கு அல்ல; சென்னையின் ரிக்ஷா ஓட்டுபவர்கள் போன்ற எளிய மக்கள்தான். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மொழிகள் பேசுபவர்கள் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். அப்படியான வாடிக்கையாளர்கள் பேசும் மொழி, அவர்கள் காதில் விழுந்து விழுந்து அதை உள்வாங்கிக் கொண்டே இருப்பார்கள்.
இன்னொரு வார்த்தை கூட கேட்டிருக்கலாம். கஸ்மாலம் என்பார்கள். முந்தைய சொல் உருது என்றால், இது சம்ஸ்கிருத மொழி வார்த்தை. அந்த மொழியில் கஸ் மலம் என்றால், குப்பை என்று பொருள். அதேமாதிரி இந்த வுட்டாலக்கடிதானே வேணாங்குறதுனு சொல்வாங்க. சின்னப் பசங்க இல்ல நாயை ஏமாத்துவோமே, எடுடா கம்பைனு சொல்வோமே… அதோட உருதுச் சொல்தான் அது. தமிழர்கள் தமிழைத் தெரிந்து வைத்திருந்தாலும் சேஃப்டிக்கு இன்னொரு மொழியை வைத்திருப்பார்கள். அதுதான் இது’’ என்று விளக்கம் கொடுத்திருப்பார்.
பம்மல் கே.சம்மந்தம்

பக்கா சென்னை ஆளாக பம்மல் கல்யாண சம்மந்தம் கேடர்கர் கமல் கலக்கிய படம் இது. தீவிர ஆஞ்சநேயர் பக்தராக திருமணத்தையே வெறுக்கும் கமல், தனது பெயரில் இருக்கும் கல்யாணம் என்கிற வார்த்தையையே பயன்படுத்தாமல், பெயரைச் சொல்லும் இடமாகட்டும், சிவனாக நடிக்கும்போது இயக்குநர் கஜேந்திரனிடம் பேசும் வசனமாகட்டும் கிளாசிக் காமெடிகளில் ஒன்று.
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

கமல் – கிரேஸி மோகன் காம்பினேஷனில் வசனங்களும் டைமிங் காமெடிகளும் தெறிக்கும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அவரது ரசிகர்களுக்கு என்றுமே ஆதர்ஸமான படம் என்றே சொல்லலாம். மெட்ராஸ் பாஷையில் ஹ்யூமரோடு எமோஷனையும் கலந்துகட்டி அடித்திருப்பார் கமல்.
காதலா காதலா
கமல் – பிரபுதேவா என்ற டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படம் இது. இதில், கமல் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் வேற லெவல்ல இருக்கும். அதுவும் நூர்மஹால் பேலசில் நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொண்ணும் காமெடி அதகளம்தான்.
மைக்கேல் மதன காம ராஜன்

நான்கு கமல்ஹாசன்களில் தீயணைப்பு வீரர் கேரக்டரில் நடித்திருக்கும் கமல் மெட்ராஷ் பாஷை பேசி நடித்திருப்பார். கமல்- கிரேஸி மோகன் காம்போ செஞ்ச தரமான சம்பவங்களில் ஒன்று இந்தப் படம். பணக்கார கமலுக்கு டூப்பாக அவர் செல்லும் இடங்களில் பேசும் வசனங்களாகட்டும், இருவரும் சந்தித்துப் பேசிக்கொள்ளும் இடங்களில் வரும் வசனங்களிலும் மெட்ராஸ் பாஷையில் கமல் அசத்தியிருப்பார்.
மகராசன்

குப்பத்து கறிக்கடைக்காரர் கேரக்டரில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்த படம் மகராசன். கமல் மெட்ராஸ் பாஷை பேசி நடித்த படங்களில் அதிகம் கவனம் பெறாத படம் என்றால் இதுதான் என்று சொல்லலாம்.
அபூர்வ சகோதரர்கள்

குள்ள அப்பு ரிவெஞ்ச் அஸ்திரத்தைக் கையில் எடுக்கையில், மற்றொருபுறம் மெக்கானிக் ராஜா, மெட்ராஸ் பாஷையில் காமெடியில் கலக்கியிருப்பார்.
Also Read – ‘பிடிச்சு வைச்சா சாணியா… பிள்ளையாரா?’ – மணிவண்ணனின் தரமான 5 தக் லைஃப் சம்பவங்கள்!