தமிழ் சினிமாவின் பீமன்… ராஜ் கிரண் கதை!

1990-ம் வருஷத்துக்கு பின்னால காலக்கட்டம் அது. ஒரு பண்டிகை நாள் நெருங்குது. புதுசா தமிழ் சினிமாக்கள் வெளியீட்டுக்கு தயாரா இருக்கு.  சூப்பர் ஸ்டார் ரஜினி படமும் அந்த லைனப்ல இருக்கு. பிரபு, சத்யராஜ்னு பல நடிகர்களோட படமும் அன்னைக்கு ரிலீசாக காத்திருக்கு. இப்பத்தான் இடையில நடிகர் ராஜ்கிரணோட படம் ரிலீஸ்னு அறிவிப்பு வருது. மத்த நடிகர்கள் வழக்கம்போல தங்கள் வேலைகளைப் பார்க்க போயிட்டாங்க. ஆனா, அன்னைக்கே இடையில வந்த அறிவிப்பால கொஞ்சம் யோசனைல இருந்தார், சூப்பர் ஸ்டார். உடனே ராஜ்கிரணுக்கு போன் பண்ணி, நீங்க கொஞ்சம் பின்னால வர முடியுமா?, இந்தமுறை நான் வந்துக்கிறேன் என வாய்விட்டே கேட்டார், சூப்பர் ஸ்டார். ‘ஓ எஸ், நான் பின்னால வர்றேன்’னு சொல்லிட்டு கொஞ்ச நாள் கழிச்சு படத்தை ரிலீஸ் பண்ணினார், ராஜ்கிரண். ரஜினியே போன் பண்ணி கேட்குற அளவுக்கு ராஜ்கிரண் அப்படி என்ன பண்ணினார்… வாங்க பார்க்கலாம்.

1990-ம் வருஷத்துக்கு முன்னாடி தமிழ் சினிமா எப்படி இருந்துச்சோ தெரியாது. ஆனா, அந்த வருஷத்துக்குப் பின்னாடி, தமிழ்சினிமாவுல ராஜ்கிரண் கொடுத்த எண்ட்ரி மொத்த கோலிவுட் ஹீரோக்களையும் கொஞ்சம் கலங்கடிச்சதுனுகூட சொல்லலாம். எண்ட்ரி கொடுத்த 5 வருஷத்துக்கு உள்ள அன்னைக்கு சூப்பர் ஸ்டாரா இருந்த ரஜினியையே மிஞ்சும் அளவுக்கு பிசினஸ். ரஜினியைவிட அதிக சம்பளம்னு சாதனைகளை அடுக்கிட்டே போனார், அவர். யார் இந்த ராஜ்கிரண்..

Rajkiran
Rajkiran

“சினிமா என்னோட லட்சியம். சினிமாவில் ஏதாவது சாதிக்கணும். இதுக்காகத்தான் ஊர்ல இருந்து சென்னை வந்தேன்” அப்படிங்குற சீன்லாம் ராஜ்கிரண்கிட்ட கிடையாது. சின்ன வயசுல இருந்து ராஜ்கிரணுக்கு நல்லா படிச்சு போலீஸ் ஆகணும்னுதான் ஆசை, ஆனா வீட்ல இருந்த சூழல் சரியில்ல. அதனால 16 வயசுலயே சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தார். சென்னை முழுக்க வேலை தேடி, ஒரு சினிமா கம்பெனியில வேலைக்கு போறார், அப்போ தினமும் 4.50 ரூபாய் சம்பளம். அந்த கம்பெனியில இருந்துகிட்டே சினிமாவுல கொஞ்சம் கொஞ்சமா வியாபாரத்தைக் கத்துக்க ஆரம்பிக்கிறார். தான் வேலை செய்த முதலாளிகளோட உதவியோட தனியா ஆபீஸ் போட்டு, திரைப்பட விநியோகத்தை ஆரம்பிக்கிறார். அப்போ அவரை சினிமா வட்டாரத்துல ‘ஏசியன் காதர்’னு சொன்னாத்தான் எல்லோருக்கும் தெரியும். இவர் ஒரு படத்தை வாங்கி வெளியிட்டால் வெற்றி நிச்சயம்னு கொண்டாடுன காலக்கட்டம் அது. அப்போதெல்லாம் ராஜ்கிரண் சினிமாவில் நடிக்கக் கூட வரவில்லை. ஆனால் இவர் செய்யும் விளம்பரத்துக்கே தமிழ்நாடு முழுக்க ரசிகர்கள் இருந்தனர்.

பல நிர்வாக குளறுபடிகளால் எல்லாவற்றையும் இழந்து மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்து நின்றார். இப்போதும் ராஜ்கிரணின் பழைய முதலாளிகள் உதவி செய்ய, இந்த முறை தீர்க்கமா முடிவு எடுத்தார் ராஜ்கிரண். இனி பட விநியோகம் இல்லை, தயாரிப்புதான் என முடிவெடுக்கிறார். தனது ஏசியன் பிக்சர்ஸ் நிறுவனத்தை ரெட் சன் ஆர்ட் நிறுவனமாக மாற்றினார். தயாரிப்பு செலவைக் குறைக்க இங்குதான் ஒரு யோசனையைக் கையாண்டார், ராஜ்கிரண். அப்போது வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்குப் படம் இயக்க வாய்ப்பு கொடுத்து அவரே ஹீரோவா களமிறங்குறார். அந்த படம்தான் ‘என் ராசாவின் மனசிலே’. இந்த படத்தின் மூலம் காமெடி லெஜெண்ட் வடிவேலுவை அறிமுகம் செய்கிறார். ராஜ்கிரண் தன்னோட படம் மூலமா சமூகம் சார்ந்த எதாவது ஒரு கருத்தை சொல்லிடணும்னு நினைப்பார். அதனாலதான் ‘குடி ஒருவனின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சீரழிக்குது’னு என் ராசாவின் மனசிலே படத்தில் வைத்திருப்பார். இப்படி இவரோட ஒவ்வொரு படத்துலேயும் ஒரு கருத்து சார்ந்த கதை இருக்கும். அதேபோல ராஜ்கிரண் தயாரிப்புல ஒரு படம் தயாராகுதுனா தொழிலாளர்கள் ரொம்ப ஆர்வமா கலந்துக்குவாங்க. அதுக்குக் காரணம், விஜயகாந்த் மாதிரியே இவரும் தொழிலாளர்களுக்கு சாப்பாடு போட்டு கவனிச்சுக்குவார். விநியோகஸ்தராக சினிமா வாழ்க்கையை துவங்கியவர் தயாரிப்பாளராக சில படங்கள், பிறகு நடிகராக படங்கள் நடிக்க ஆரம்பித்தார். அடுத்த நகர்வா, அரண்மனைக் கிளி படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போட்டது.

Rajkiran
Rajkiran

பப்ளிசிட்டி வித்தகன்

இயல்பாவே நல்ல சாப்பாட்டு பிரியர். அதுலயும் கறி சதையா இல்லாம எழும்பைக் கடிச்சு துப்புறது ரொம்பவே பிடிக்கும். மற்றவர்கள் போல ஸ்டைல் இல்லையென்றாலும் கம்பீரமான மேனரிசத்தைக் கூட்ட படத்துல எலும்பைக் கடிக்கிறது மாதிரி ஒரு சீனை வச்சார். கிராமங்கள் மத்தியில நல்லா பேசப்பட்டுச்சு. ஆனா அங்கதான் நல்லி எலும்பை கடிச்சுத் துப்புனா, அந்த ஆள் எவ்ளோ கம்பீரமானவன்னு காட்ட ஒரு விளம்பர யுக்தியை யூஸ் பண்ணினார். அன்னைக்கு ஹோட்டல்கள்ல இவர் நல்லி எலும்பை கடிக்கிற போஸ்டர்கள் அதிகமா ஒட்டியிருந்ததே அந்த விளம்பரத்துக்கு சாட்சி. இதேமாதிரி பாசமுள்ள பாண்டியரே படத்துல யானையோட காலை சுளுக்கு எடுக்குற சீனும் அன்னைக்கு ரொம்பவே பேமஸ். அதே மாதிரி ஒரு ஆளை தூக்கி ரெண்டா ஒடைக்கிறது, தொடை தெரிய நெஞ்சுலயே மிதிக்கிறது மாதிரியான காட்சிகள்னு கம்பீரமான ஒரு பப்ளிசிட்டியை தன் படங்கள் மூலமாவே செய்திருந்தார், ராஜ்கிரண். இதுபோல தன் படங்களில் தனக்கு அம்மாவாக நடிக்கும் ஹீரோயின்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தவர்களையே தேர்வு செய்தார். குறிப்பா பெண் ரசிகர்கள் ஆதரவோட புகழின் உச்சியில இருந்தார் ராஜ்கிரண்.

நந்தா மூலம் செகண்ட் இன்னிங்ஸ்!

எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், பாசமுள்ள பாண்டியரே என 90-களில் சில படங்கள் நடித்தவரை, இன்னும் உச்சாணியில் கொண்டு வைத்தது இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா. சொல்லப்போனா ராஜ்கிரண் இங்க இருந்துதான் தன்னோட ரெண்டாவது இன்னிங்சை ஆரம்பிச்சார்னுகூட சொல்லலாம். நந்தாவுல பெரியவர் கதாபாத்திரத்துக்கு பொருத்தமா இருந்தார். ‘அக்கிரமத்தைப் பார்த்து கொதிச்சு எழுற அத்தன பேரும் சாமிதாண்ட’ என சூர்யாகிட்ட இவர் பேசும் வசனம்லாம் அல்டிமேட்டா இருக்கும். அதே 2001ல் மறுபடியும் ஒரு படம். நந்தாவில் மிரட்டிய பெரியவர், அடுத்து பாண்டவர் பூமியில் சாதுவான மனிதராக நடிப்பின் வேறுபரிமாணத்தைக் காட்டியிருந்தார்.

Also Read: மல்லிகைப் பூவே டு மல்லிப்பூ… பாடலாசிரியர் தாமரை பயணம்!

படங்களின் பில்லர்!

ராஜ்கிரண் நடிக்கும் கதாபாத்திரங்களில் ஆபாசம், குடி என முகம் சுளிக்க வைக்கிற மாதிரி எப்பவுமே இருக்காது. அதேபோல 31 வருடங்களில் 35 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். ஒத்த படம் நடிச்சாலும் அது பேசப்படணும்ங்குறது ராஜ்கிரணோட பாலிசி. அப்படித்தான் நந்தா, கோவில், சண்டக்கோழி, வேங்கைனு ஒரு படத்துக்கு பில்லராவே இருந்தார். எல்லா கேரெக்டரும் பெரியவர் மாதிரியே இருந்தாலும், ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வித்தியாசம் காட்டியிருப்பார். அதுலயும் 10 வருஷத்துக்கு அப்புறமா சண்டக்கோழியில முதல் பாதி மட்டும்தான் விஷால் ஹீரோ, ரெண்டாம் பாதியில ராஜ்கிரண்தான் ஹீரோவா நின்னு விளையாடியிருப்பார். “பையன் மேல ஒண்ணும் கை வச்சிரலியே, விஷயம் பெரிசா இருக்குண்ணே, துரை அண்ணே பையன், தேனி சுத்துப்பட்டுலாம் அவக வச்சதுதான் சட்டம்’னு ராஜ்கிரணுக்கு கொடுத்த பில்டப்புக்கு ஏத்த மாதிரி, தாரைதப்பட்டை சத்தம் கேட்க ராஜ்கிரண் ஸ்கிரீன்ல கொடுத்த கம்பீரமான எண்ட்ரி மாதிரி இன்னொரு நடிகர் கொடுக்க முடியுமானா சந்தேகம்தான். சண்டக்கோழி படத்தோட செகண்ட் ஆப் முழுக்கவே ‘ராஜ்கிரண் பார்த்துக்குவார், விஷாலுக்கு ஒண்ணும் ஆக விடமாட்டார்’ங்குற மனநிலையை அந்த எண்ட்ரியிலயே கடத்தியிருப்பார், ராஜ்கிரண். என்னடா இவ்ளோ பில்டப்பா சொல்றேன்னு நினைக்கிறீங்களா?.. அதுக்கு காரணம் இருக்கு அதை வீடியோவோட கடைசியில சொல்றேன்.

இவரோட படங்கள்ல  கிராஃப்ல ஒன்னு ரெண்டு படங்கள் தவிர, எல்லா படங்களுமே, ஹிட் ரகம் தான். ஒன்னு படு சீரியஸான கேரக்டராக இருக்கும், இல்லைனா ரொம்ப சாதுவான ஒரு கதாபாத்திரமா இருக்கும். இப்படி இரண்டு விதத்தில் நடித்தவரை சிரிப்பு பட்டாசாக ரசிக்க வைத்த படம் ரஜினிமுருகன். ரஜினிமுருகனும், அய்யங்காளையும் செய்த சேட்டைகள் இன்னும் மறக்க முடியாது. ராஜ்கிரணை காமெடி செய்து இதுக்கு முன்னர் தமிழ்மக்கள் பார்த்ததில்லை. என்னடா காமெடி மட்டுமே பண்ணிடுவாரோனு பார்த்தா, க்ளைமேக்ஸ்ல அடியாள் ராஜ்கிரண் நெஞ்சுல ஒதைக்கிறப்போ, ஒரு அடிகூட பின்னால நகராம நிற்கிற இடமும், அடியாள் நெஞ்சுலயே மிதிக்கிற சீனும், என்ன கம்பீரம்ப்பானு 2கே கிட்சையும் ரஜினிமுருகன் மூலமா பிடிச்சார். அதேபோல ரஜினிமுருகன்ல சிவகார்த்திகேயன் பைட் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறமா, ராஜ்கிரண் பைட் பண்ண வருவார். அப்பவே இனி யாருக்கும் ஒண்ணும் ஆகாது, ராஜ்கிரண் பார்த்துக்குவார்னு ஒரு வைப் கிரியேட் ஆகிடும். இதுதான் ராஜ்கிரணோட பலம்னு சொல்லலாம்.

Rajkiran
Rajkiran

நடிப்பின் வேறு பரிமாணம்!

ராஜ்கிரணுக்கு கிடைத்த அற்புத படம்னா அது பா.பாண்டி படம் தான். தன் தந்தை கஸ்தூரி ராஜா ராஜ்கிரண் மூலமாக இயக்குநரா அறிமுகமானதால, அதுக்கு கைமாறா, தான் இயக்குன முதல் படத்துல ராஜ்கிரணை ஹீரோவா ஆக்கினார், தனுஷ். ரொம்ப நாளா குணச்சித்திர கதாபாத்திரத்துல் நடிச்சவர், சுமார் 20 வருஷங்களுக்குப் பின்னால ஹீரோவா நடிக்க வைக்குறார், தனுஷ். 60 வயசுல வயசானவர் ஹீரோவா?, அதெல்லாம் எப்படி சாத்தியம் ஆகும்னு கேள்விகளை அடுக்கினவங்களுக்கு மத்தியில தன் நடிப்பின் மூலமா சர்ப்ரைஸ் கொடுத்தார் ராஜ்கிரண். 60 வயசுலயும் காதல், ஆக்சன்,  சென்டிமெண்ட்னு ஒட்டுமொத்த படமும் பார்க்க ரொம்பவே அழகா இருந்தது. அதுலயும் ரொம்ப வருஷத்துக்கு அப்புறமா பழைய காதலியைப் பார்க்குறப்போ காட்டுற ரியாக்சன் மூலமா நெகட்டிவ் விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்தார், ராஜ்கிரண்.

சண்டக்கோழி படத்துக்காக ஒரு பில்டப் கொடுத்துட்டு கடைசில காரணம் சொல்றேன்னு சொல்லிருந்தேன்ல அது என்னன்னா…. சண்டக்கோழி 2-ம் பாகம் சில வருஷங்களுக்கு முன்னால வெளியானது. அதுல முதல் பாதிவரைக்கும் ராஜ்கிரண் கம்பீரமா இருப்பார். அதுவரைக்கும் படமும் நல்லா போகும். ஆனா, கழுத்துல வெட்டுவாங்கி படுக்கையில கிடக்குற காட்சியில இருந்து படமும் பெட்ல அட்மிட் ஆகிடும். ராஜ்கிரண் இல்லைனா சண்டக்கோழி இல்லைங்குற அளவுக்கு தன்னோட ஸ்கிரீன் பிரசன்சஸை வச்சிருந்தார், ராஜ்கிரண்.

எனக்கு இவர் நடிப்புல பிடிச்சது சண்டக்கோழி துரை கேரெக்டர்தான்.. உங்களுக்கு எந்த கேரெக்டர் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

1 thought on “தமிழ் சினிமாவின் பீமன்… ராஜ் கிரண் கதை!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top