கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட் – இத்தனை வுட்களில் நல்ல தரமான படங்களை அதிகமாகக் கொடுப்பது, கேரளாதான். அந்தக் கதைகளை நாங்களும் படம் எடுக்கிறோம் எனப் பல Furniture-களை உடைத்திருக்கிறார்கள், நம் இயக்குநர்கள். அப்படி உடைந்த சில பர்னிச்சர்களைப் பார்க்கலாம்.
பொறுப்பு துறப்பு: இது யார் மனசையும் புண்படுத்த அல்ல மக்களே… படம் எடுக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை. இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்றுதான் சொல்கிறோம்!
நிமிர்
மலையாள சினிமா தவிர தமிழ், தெலுங்கு என மொத்த தென்னிந்திய திரையுலகமும் கொண்டாடிய ஒரு படம் என்றால் அது மகேஷிண்டே பிரதிகாரம் படம்தான். ஃபகத்துக்கு வேறலெவல் பேர் வாங்கிக் கொடுத்தது. அந்தப் படம் பார்த்ததற்குப் பின்னால் மம்முட்டிகூட ஃபகத்தை மகேஷ் என்றுதான் அழைப்பாராம். செருப்புப் போடமாட்டேன் என்று ஒரு சபதம், காதல், ஃபோட்டோகிராஃபி என படம் முழுக்க வர்ற விஷயங்களை ஃபகத் அவ்வளவு அழகா ஹேண்டில் பண்ணியிருப்பார். பாட்டு, விஷூவல்ஸ் என ஒவ்வொரு பிரேமிலும் ஒரு மெனக்கெடல் இருக்கும். அதை தமிழ் ரீமேக் வெர்சனில் அடித்து நொறுக்கியிருப்பார்கள். உதயநிதி, சமுத்திரக்கனி, சென்ட்ராயன் என யாருக்குமே செட் ஆகாத கேரெக்டர் செலக்ஷன்லயே படம் சொதப்ப ஆரம்பித்திருக்கும்.
அந்தப் படத்தோட ரைட்டர்கிட்ட தயவு செய்து தமிழ் வெர்ஷன பார்க்காதீங்கனு அவங்க ஃப்ரெண்ட்ஸ்லாம் சொல்ற அளவுக்கு படத்தை டேமேஜ் பண்ணிட்டாங்க.
அன்பிற்கினியாள்
2019-ம் வருஷம் வந்து ஹிட் அடித்த ஹெல்னோட ரீமேக்தான் அன்பிற்கினியாள். சிம்பிளான கதை… அன்னா பென் – லால் பண்ண கேரக்டர்களில், நிஜ அப்பா பொண்ணான அருண் பாண்டியன் – கீர்த்தி நடித்திருந்தார்கள். மலையாள வெர்ஷன் பாக்காதவர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தது. ஆனால், பார்த்தவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாம் எனும் ஃபீல் கொடுத்தது.
மீண்டும் ஒரு காதல் கதை
நம்ம ‘Hridayam’ இயக்குநர் Vineeth Srinivasan இயக்கத்தில 2012-ல் வந்த படம், தட்டத்தின் மறையத்து. செமயான காதல் படம். ஒரு இளமைக் காதல் கதையை அப்படி உருகி உருகி எடுத்திருப்பார். .கல்லூரி வளாகத்தில நடந்து வரும்போது வரும் வசனங்கள், ஸ்ரீசாந்த் வசனங்கள், முதன்முதலாக ஹீரோயினைப் பார்க்கும்போது நிவின் பாலி சொல்லும் வசனம் என எல்லா இடங்களிலும் காதல் ரசம் மழையாக பொழிந்திருக்கும். அதில், எதார்த்தமான காதல் நிறைந்திருந்தது. அதைப் பார்க்கும்போது நாமும் அந்த காதல் மழையில் நனைவது போன்ற உணர்வை அந்தப் படம் கொடுத்தது. அதுதான் மலையாளத்தில் ஹிட்டாகிவிட்டதே… தட்டித் தூக்கு என்ற ரேஞ்சுக்கு, தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை என ரீமேக் செய்யப்பட்டது. மற்ற ரீமேக் படங்களை ஒப்பிடும்போது பரவாயில்லை என தோன்ற வைத்தது. தட்டத்தின் மறையத்து ஒரிஜினல் பேக்ரவுண்ட் மியூசிக் வெர்சனை தமிழ் ரீமேக்கில் பயன்படுத்தியதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், படத்தின் நிஜ காதல் உயிர்ப்பு இதில் மிஸ் ஆகியிருக்கும். வசனம் முதல் நடிப்பு வரைக்கும் எதுவுமே கதைக்கு ஒன்றிப்போகாத ஃபீல் கொடுத்தது. ஆறுதலான ஒன்று ஜி.வி பிரகாஷ் பாட்டு.
ஹாஸ்டல்
இன்னும் என்ன மலையாள படம் வரும் வச்சு செய்யலாம் என காத்திருந்த தமிழ் சினிமாவுக்கு, ‘அடி கப்யாரே கூடாமணி’னு ஒரு மலையாளப் படம் கிடைத்தது. ஹாஸ்டலுக்குள் ஒரு பொண்ணை ஹீரோ அழைத்து வந்து, அவளை எப்படி வெளியே அழைத்துச் செல்கிறான் என்பதுதான் கதை. படம் முழுக்க காமெடி பட்டாசா இருக்கும். அவ்வளவும் எதார்த்தமான காமெடிகள் என்பது அந்தப் படத்தின் கூடுதல் ஸ்பெஷல். காலேஜ் மாணவர்கள் என்ன நினைப்பார்களோ, அந்த நேரத்தில் பெண்ணை வெளியே அழைத்துக் கொண்டு போக குறுக்கு வழியைப் பயன்படுத்துவார்கள். படத்தின் சிம்பிளான கதை பார்மேட் கிடைத்திருக்கும். இதுபோதுமே எங்களுக்கு எடுடா அந்த கேமராவை, வைடா தலைப்பை என ஹாஸ்டல் என்ற பெயரில் படமாக்கினார்கள். மலையாள வெர்சனில் ‘நாகரிகம்’ கருதி என்னவெல்லாம் தவிர்த்தார்களோ, அதை எல்லாமே உடைத்து எறிந்தது, ஹாஸ்டல். டபுள் மீனிங் காமெடிகள், மலையாளத்தில வரும் காமெடியை அப்படியே எடுக்கிறேன் என செய்த சொதப்பல்கள் அதிகம். ஹாஸ்டல் படத்தைப் பார்த்தாலே கடுப்பாகும் அளவுக்கு இருந்தது. அதைப் பார்த்தால் ஏன் இப்படியெல்லாம் செய்ய வேண்டும் எனக் கேட்கத் தோன்றுகிறது.
அய்யப்பனும் கோஷியும்
மலையாளத்துல பயங்கர ஹிட் அடிச்ச அய்யப்பனும் கோஷியும் படத்தை ரீமேக் செய்ய தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் போட்டி நடந்தது. தமிழில் டிஸ்கஸன் போய்க் கொண்டிருக்கும்போதே தெலுங்கில் பீம்லா நாயக் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டுவிட்டார்கள். மலையாளத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் என 2 ஹீரோக்கள். ஆனா கதை மட்டும்தான் உங்களுடையது, படம் ஆந்திராவில் எடுக்கிறோம் என முடிவு செய்து களத்தில் இறங்கியது, பீம்லா நாயக் சினிமா குழு. அய்யப்பனும் கோஷியும் படத்தில் இரண்டு ஹீரோக்களுக்குமானஅறிமுகக் காட்சி சாதாரணமாக இருக்கும். ஆனால், பீம்லா நாயக் படத்தில் பவன் கல்யாணின் இன்ட்ரோ அப்படி சாதாரணமாக வைத்தால் எப்படி?… அறிமுகக் காட்சியில் இறங்கி ஒரு 20 பேரையாவது பந்தாடியிருப்பார். எல்லோரின் எலும்புகளை நொறுக்கித் தள்ளியிருப்பார்.
பிஜுமேனன், பிரித்விராஜ் இருவருக்குமான அந்த ஈகோ மலையாள வெர்சனில் எதார்த்தமாக இருக்கும். ஆனால், தெலுங்கு வெர்சனில் பவன் கல்யாணுக்கும்-ராணாவுக்கும் இருக்கும் பகை நாடகத்தன்மை நெடியையே கொடுத்தது. க்ளைமேக்ஸ் மலையாளத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்டிருந்தது. அய்யப்பனும் கோஷியும் ரன்னிங் டைம் அதிகம் என்றாலும் நேரம் போனது தெரியாது. ஆனால் இதில் முதல் பாதி ‘அய்யா என்னை விட்ருங்க’ என்ற ஃபீல் கொடுக்கும். தமிழில் என்ன செய்யப் போகிறார்கள் என பயத்துடன் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது.
பெங்களூர் நாட்கள்
ஃபகத் ஃபாஸில், நிவின் பாலி, துல்கர், நஸ்ரியா, பார்வதி… என நமக்குப் பிடித்த மளையாள நடிகர்கள் சேர்ந்து நடித்தப் படம். காதல், கனவு, வாழ்க்கை, நட்பு ஆகியவற்றுடன் ஒரு ட்ரெண்ட் இருக்கும். ஆனால், தமிழில் அந்தப் படத்தைப் பார்த்தால் ஏன் இந்தப் படத்தை மறுபடி எடுக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றியது. தமிழில் அந்த கேரெக்டர்களை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தமிழ் ரீமேக்கில நடித்திருந்த அனைவரும் தன் திறமையை நிரூபித்த திறமையான நடிகர்கள்தான். தமிழில் அந்த ரீமேக் சரியாக செட் ஆகவில்லை. மலையாள வெர்சனில் பாட்டுகள் அனைத்தும் ஹிட். தமிழில் பாட்டுக்கூட கேட்க முடியாத அளவுக்கு இருக்கும். மலையாளத்தில் வரும் நல்ல படங்களையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்து விடுகிறார்கள். பிறகு எதற்கு அதை ரீமேக் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.
இனிமே அப்படி செய்ய வேண்டாம் இயக்குநர்களே… நமது நடிகர்கள் மிக திறமையானவர்கள், அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை வைத்து நாமும் உலக் அரங்கில் ஜொலிக்கும்படியான கதைகளை படமாக்கலாம்.
பிரேமம்: நோ கமெண்ட்ஸ்
மற்ற படங்களைப் பார்த்தால்தான் ரீமேக் சரியாக இல்லை என்று தெரியும். இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷன் ட்ரெய்லரைப் பார்த்தாலே போதும். இனிமேல் அந்த பர்னிச்சரை யாராவது தொட்டால் அவ்வளவுதான் என பிரேமம் ரசிகர்கள் வெகுண்டு எழும் அளவுக்கு ரீமேக் செய்யப்பட்டிருந்தது. அந்த தெலுங்கு வெர்சனில் பெயர் எழுதுற காட்சி அபத்தத்தின் உச்சம். பிரேமம் தென்னிந்தியா முழுக்கவே 100 நாட்களுக்கு மேலேயே ஓடியது. சொல்லப்போனால் ஒரிஜினல் வெர்ஷன் முழுக்கவே எதார்த்தம் நிறைந்திருக்கும். மலர் டீச்சர் என ஒரு பிராண்டு உருவான பின்னரும், குறுக்க இந்த கெளசிக் வந்தாங்குற ரேஞ்சுக்குத்தான் தெலுங்கு பிரேமத்துல ஸ்ருதிஹாசன் கேரக்டர் இருந்தது. மலையாள பிரேமத்தோட மேஜிக் சுத்தமாவே தெலுங்கு பிரேமத்துல மிஸ்ஸிங்.
இப்போ புதுசா சேர்ந்து இருக்கிறது விசித்திரன், அடுத்ததா அய்யப்பனும் கோஷியும்னு லைன்அப்பில் இருக்கிறது. பிரேமம் ரைட்ஸ் வாங்கி கிடப்பில் இருக்கிறது (தமிழ் பிரேமத்துக்கு ரீமேக் செய்ய டைரக்டர்களும், ஹீரோக்களும் கிடைக்கவில்லை என்பது கூடுதல் தகவல் ஆறுதல் கொடுத்தாலும், எந்நேரமும் அது உயிர்பெற்றுவிடும் என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த வரிசைல கன்னட ரீமேக்குகள் செய்த அலப்பறைகளும் கொஞ்சம் நஞ்சம் கிடையாது.
இந்த மாதிரி ரிமேக் செய்யப்பட்ட மலையாள படங்களில் உங்களை ரொம்ப சோதித்த படம் எது என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Also Read – டி.ஆருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இருக்குற ஒற்றுமை என்னன்னா..!?