நடிகர் மம்மூட்டி திரைத்துறையில் ஐம்பதாண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். 1971-ம் ஆண்டு தொடங்கிய அவரது திரைப்பயணம் 50 ஆண்டுகளைக் கடந்து நீண்டுகொண்டிருக்கிறது. எழுபது வயதிலும் துடிப்போடு அடுத்த படங்களுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மம்மூட்டி பற்றிய 7 சுவாரஸ்ய தகவல்கள்…
நம்பர் 369 ராசி
நடிகர் மம்மூட்டியின் மனதுக்கு நெருக்கமான எண் – 369. அவருடைய எல்லா கார்களின் பதிவு எண்களிலும் தவறாமல் 369 இடம்பெற்றிருக்கும். அதற்குக் காரணம், தனது கரியரின் தொடக்க காலத்தில் அவர் வாங்கிய லாக்கர் வசதி கொண்ட சூட்கேஸின் லாக் நம்பர் 369. திரைத்துறையில் வளர்ச்சி கண்டபிறகு மூன்றின் அடுக்கு எண்ணான அதை சென்டிமென்டாகவே பார்க்கத் தொடங்கிவிட்டார்.

முதல் படம்
1971 ஆகஸ்ட் 6-ல் வெளியான அனுபவம் பாலிச்சகல்’ படம்தான் மம்மூட்டி பெரிய திரையில் தோன்றிய முதல்படம். மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான சத்யன் நடித்திருந்த அந்தப் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக கிரெடிட் இல்லாத ரோலில் மம்மூட்டி நடித்திருந்தார்.
சத்யன் போன்ற பெரிய மாஸ்டர் நடித்த படத்தின் மூலம் எனது திரைப் பயணம் தொடங்கியது நான் செய்த அதிர்ஷ்டம்’ என்று ஒருமுறை மனம் திறந்திருந்தார் மம்மூட்டி. 1980-ம் ஆண்டு வெளியான `விக்காணுண்டு சொப்பனங்கள்’ படத்தில்தான் அவருக்கு கிரெடிட் கொடுக்கப்பட்டது.
வழக்கறிஞர்
எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி முடித்த மம்மூட்டி, மஞ்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அதன்பிறகு, சினிமா மீதான காதலால் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

ஆறு மொழிகள்
ஐம்பது ஆண்டுகளில் மலையாளத்தில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்மூட்டி நடித்திருக்கிறார். இதுதவிர, தமிழில் தளபதி, அழகன், மக்களாட்சி, மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட 15 படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார்.
டபுள் ரோல்
திரையுலகில் 39 படங்களில் இரட்டை வேடத்தில் நடித்தவர் என்ற சாதனையைத் தன்வசம் வைத்திருப்பவர் மலையாள நடிகர் நசீர். அதற்கடுத்த இடத்தில் இருப்பவர் மம்மூட்டி. இவர் 15 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். நடிகை சீமா 38 படங்களிலும், நடிகை ஷோபனா 33 படங்களிலும் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

மோகன்லால் நட்பு
மம்மூட்டியின் திரைப்பயணத்தை மோகன்லாலை விடுத்து எழுத முடியாது. ரசிகர்கள் இருவரையும் எதிரெதிர் துருவங்களாக நினைத்துக் கொண்டிருக்கையில், அதற்கு நேரெதிராக இருவரும் நிஜ வாழ்வில் நெருங்கிய நண்பர்கள். படையோட்டம் தொடங்கி டிவெண்டி 20 வரை இருவரும் இணைந்து 51 படங்களில் நடித்திருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை பிளாக்பஸ்டர் படங்கள்.
எழுத்தாளர் மம்மூட்டி
பிரபல மலையாள நாளிதழில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் எழுதி வந்த மம்மூட்டி, அதைத் தொகுத்து, `காழ்ச்சப்பாடுகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். பல்வேறு விஷயங்கள் குறித்த தனது கருத்துகளை அதன்மூலம் தெரிவித்ததாக மம்மூட்டி ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்தார்.