ஆத்தூர் அருகே ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய தாய், மகளை மீட்ட இளைஞர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. என்ன நடந்தது?
ஆனைவாரி நீர்வீழ்ச்சி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கும் ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகள் இடையே பிரபலமானது. இந்த நீர்வீழ்ச்சியில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிக அளவில் நீராடுவதுண்டு. மலைப்பகுதியில் பெய்த பெருமழையால் நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த நிலையில், ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்குக் குளிக்கச் சென்ற தாய், மகள் உள்பட நான்கு பேர் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்க அங்கிருந்த இளைஞர்கள் முயற்சித்தனர். இதற்காக, செங்குத்தான பாறை பகுதியில் இறங்கி அவர்களை மீட்க முயற்சி செய்தனர். இந்த முயற்சியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் நீரில் தவறி விழுந்தனர். ஆனால், நீச்சல் தெரிந்த அவர்கள் சுதாரித்துக் கொண்டு நீந்தி கரையேறினர். வெள்ளத்தில் சிக்கியிருந்த தாய், மகளை இளைஞர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றவே, மீட்புப் பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் அப்துல் ரகுமான், கார்த்திக் உள்ளிட்ட குழுவினருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட இளைஞர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், “தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது! பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்!” என்று பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர் மழை பெய்துவரும் நிலையில், நீர் நிலைகளுக்கு நீராடச் செல்லும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.