ஒரு பையன் மியூசிக் டைரக்டர் ஆகணும்னு சென்னைக்கு கிளம்பி வறாரு. சவுண்ட் இஞ்சினீயரா வொர்க் பண்றாரு. கீ போர்ட்.. கம்ப்யூட்டர்.. இப்படி மியூசிக் இன்ஸ்ட்ரூமெண்ட் எல்லாம் வாங்கி சேர்க்க ஆரம்பிக்கிறாரு. பல கம்பெனிகள் ஏறி இறங்குறாரு, யாருமே சான்ஸ் கொடுக்கலை. மனுஷன் தளர்ந்து போறதா இல்லை. ரிஜெக்ட் பண்ற நாள்கள்லாம் மியூசிக்கை இன்னும் அதிகமாக கத்துக்குறாரு. ஒருநாள் ஆஸ்கர் ஃபிலிம்ஸ்க்கு போறாரு. இன்ட்ரஸ்டிங்கான விஷயம் என்னனா, சும்மா யாரையாவது பார்த்து வாய்ப்பு கேட்டுட்டு, சி.டி கொடுத்துட்டு வரமாட்டாரு. வாக்மேன், ஹெட்போன்னு எல்லாமே கைல வைச்சிருப்பாரு. ஆஸ்கர் ஃபிலிம்ஸ்ல இருந்த ரவிச்சந்திரன் தம்பிக்கிட்ட அதெல்லாம் கொடுத்து பாட்டு கேட்க வைச்சிருக்காரு. அவரும் கேட்டுட்டு டச்லயே இருங்கனு அனுப்பி வைச்சிருக்காரு. ஒருநாள் போகும்போது இன்னைக்கு அண்ணன் பிஸியா இருக்காரு, இப்போ கிளம்புங்க.. நாளைக்கு வாங்கனு அனுப்பி விடுறாரு. என்னைக்குமே போய்ட்டு வாங்கனு சொன்னா, அந்தப் பையன் வருத்தப்பட்டதே இல்லை. அதேமாதிரி அன்னைக்கும் நார்மலா வெளிய போறாரு. டக்னு ரவிசந்திரனின் தம்பி, இவரைக்கூப்பிட்டு அண்ணனை பார்க்கலாம் வாங்கனு சொல்றாரு. உள்ளப்போனதும் இவர் பாட்டைக் கேட்குறாரு. அவர் சிச்சுவேஷன் ஒண்ணு சொல்லி அனுப்புறாரு.. அதுக்கு மாஸா, பெப்பியான பாட்டு ஒண்ணு கம்போஸ் பண்ணிட்டு போறாரு. அந்த சி.டியை டிஷ்யூம் படத்தோட டைரக்டர்ட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரன் போட்டு காமிக்கிறாரு. அவருக்கு பாட்டு புடிச்சுப்போனதும், யாரு இந்த பையன்னுகேட்டு, இவரை கூப்பிட்டு பேசுறாரு.. சின்ன டெஸ்டெல்ல்லாம் வைக்கிறாரு. சான்ஸ் தேடி அலைஞ்ச அந்தப் பையன்கிட்ட கடைசியா, நீங்கதான் டிஷ்யூம் படத்துக்கு மியூசிக்னு சொல்லிருக்காங்க. பத்து வருஷமா கேட்கணும்னு ஆசைப்பட்ட அந்த வார்த்தையை மனுஷன் சந்தோஷமா கேட்ருக்காரு. யெஸ், அவர்தான் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனி கரியரா, கஷ்டப்பட்டேன், யாரும் சான்ஸ் கொடுக்கலை, ஃபினான்சியலா ஸ்ட்ரகிள்ஸலாம் அனுபவிச்சேன்னு சொல்லுவாரு. ஆனால், புலம்புற ஆள் இல்லை. நல்ல வேளை யாரும் உடனே சான்ஸ் கொடுக்கலை. அந்த டைம்லாம்தான் நான் நிறைய கத்துக்கிட்டேன். அதுனாலதான், இவ்வளவு நல்ல பாடல்களை என்னால கொடுக்க முடியுது. அதுனால, எனக்கு வாய்ப்பு தராத டைரக்டர்ஸ், தயாரிப்பாளர்கள் எல்லாருக்கும் மனசுல இருந்து நன்றி சொல்லிக்கிறேன். திமிருல சொல்லல.. நிஜமாவே சொல்றேன்னு சொல்லுவாரு. அவர் பாடல்களைப் பத்தி ரிலீஸான படம் வரிசைல பேசுவோம். டிஷ்யூம் படம் வொர்க் பண்ணும்போது ஆர்யா மூலமா விஜய் அப்பாவை மீட் பண்ண சான்ஸ் கிடைச்சுருக்கு. அப்படிதான் சுக்ரன் படத்துக்குள்ள வர்றாரு. அவரைப் பொறுத்த வரைக்கும் ஒரு பாட்டு ஹிட்டாகணும்னு கிடையாது. ஆல்பமா ஹிட்டாக்கணும்னு தான் நினைச்சு வொர்க் பண்ணுவாரு. சுக்ரன் ஆல்பம்தான் ஃபஸ்ட் அவருக்கு ரிலீஸ் ஆச்சுனு நினைக்கிறேன். பாட்டு ஒவ்வொன்னும் அவ்வளவு டிஃபரண்டா எஞ்சாய் பண்ற விதமா இருந்துச்சு. முதல் படத்துல இருந்தே ஜிப்ரிஷ் வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாரு. ஏன்னு கேட்டா, என்னோட ட்யூன்லாம் லாலா, னானானு பாடுனாலாம் ஓக்கே ஆகாது. அதுனாலயே, இந்த மாதிரி கேட்சிங்கான சவுண்ட் உள்ள வார்த்தைகளை வைச்சு ட்யூன் பண்ணிடுவேன்னு சொல்லுவாரு. சாத்திக்கடி போத்திக்கடி, சப்போஸ் உன்னை காதலிச்சா போட்டுலாம் வேறமாறி. சுக்ரனைவிட பெஸ்ட்டான, ஃபீல் குட்டான ஆல்பம்னா, டிஷ்யூம் தான். முதல்ல கிடைச்ச படம் எல்லாருக்கும் ஸ்பெஷல்ன்றதாலயோ என்னவோ.. ஒவ்வொரு பாட்டையும் செதுக்கியிருப்பாரு. டைலாமோ, டைலாமோ வார்த்தைக்கு அர்த்தமை இன்னும் தேடுறாங்க. எவனுக்கும் கிடைக்கல. ஒருநாள் திடீர்னு ஸ்கூல்ல மேக்ஸ் கிளாஸ் போகும்போது மண்டைக்குள்ள டைலமோ டைலமோ ஓடும் பாருங்க. விஜய் ஆண்டனி மாம்ஸ் ஃபேன்டா!
பூமிக்கு வெளிச்சமெல்லாம் பாட்டுக்கு ரீல்ஸ் போட்டு சுத்துறாங்க கிட்ஸ். கிட்ட நெருங்கிவாடி கர்லாகட்ட உடம்புக்காரி பாட்டுலாம் வினோதமான பாட்டு. எவ்வளவு பெரிய மியூசிக் நாலேஜ் இருந்தா, அதாவது நம்ம வைப் பல்ஸ் தெரிஞ்சுருந்தா, இதெல்லாம் அப்பவே மனுஷன் போட்ருப்பாரு. நம்ம சின்ன பிள்ளையா இருக்கும்போது, டி.வில போடுற பாட்டு மட்டும்தான.. அப்போ, நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பாட்டு அடிக்கடி போடுவாங்க. பாட்டு, லிரிக்ஸ் ஒண்ணும் புரியாது. ஆனால், பல காதலிகள் இருக்குற மாதிரி ஃபீலாகும். இப்படி அந்த ஆல்பமே ஃப்ரெஷ் ஃபீலிங்தான். நான் அவனில்லை படத்துல மச்ச கன்னி பாட்டு வரும். ங்கொம்ம.. ங்கொம்ம.. வார்த்தையே நம்மள போதையாக்கிடும். இடைல, எத்தன எத்தனை யப்பா சக்கரனு என்னலாமோ வரும். ப்யூர் விஜய் ஆண்டனி திங்ஸ். அதே படத்துல தேன் குடிச்ச நிலவுனு பாட்டு வரும்.. வைப் டைம்னு ஒண்ணு போட்டு விஜய் ஆண்டனி பண்ண சில்மிஷங்கள்னு பெரிய பாட்காஸ்ட்டே பண்ணலாம். அவ்வளவு நுட்பமா சில விஷயங்களை பண்ணியிருப்பாரு. அவர் கரியர்ல முக்கியமான படம் காதலில் விழுந்தேன். நாக்கு முக்கா கேட்டு வைப் பண்ணாதவன்லாம் விஜய் ஆண்டனி பெயர் சொல்லவே தகுதி இல்லாதவன். அந்தப் பாட்டுக்கு மாடு செத்தா மனுஷன் தின்னான்னு லிரிக்ஸ பார்த்துட்டு என்னயே கலாய்க்கிறீங்களா.. இப்போ பாருங்கனு மனுஷன் அவங்கள கலாய்க்கிற மாதிரி ட்யூன் போட்டு கொடுத்துருக்காரு. சேட்டை.. அவ்வளவு சேட்டை. சாய் கிங் டீக்கடைக்குலாம் போனால் தோழியா என் காதலியா பாட்டுலாம் போடுவாங்க. அதுக்காகவே அங்க போய் உட்கார்ந்து டீ குடிச்சிட்டு உட்காருவோம். உன் தலை முடி உதிர்வதைக்கூட பாட்டுலாம்.. கிரிஞ்சா தோணும். ஆனால், விஜய் ஆண்டனி ஃபேன்ஸ்க்கு மட்டும்தான் தெரியும் தங்கம்னு.
காதலில் விழுந்தேன்ல உனக்கென நான் பாட்டு மட்டும் டைரக்டர் பெயர் வரும். ஏன்னா, அந்த பாட்டை நான் காப்பி பண்ண மாட்டேன்னு விஜய் ஆண்டனி சொன்னதும், டைரக்டரே அதை பண்ணியிருக்காரு. TN 07 AL 4777 படத்தோட ஆல்பத்துல லிரிசிஸ்ட் ஔவையார்னு போட்ருந்தாங்க. யார்யா நீ.. எந்தப் பாட்டுயானு தேடிப்பார்த்தா ஆத்திச்சூடி பாட்டு. யார்கிட்டயாவது போய் ஆத்திச்சூடி சொல்லுனா.. இந்தப் பாட்டைதான் இன்னைக்கும் பாடிட்டு இருக்காங்க. என்னடா இப்படி பாட்டு போட்டு கொல்றீங்கனு கேட்டா, கேளு மவனே கேளு நீ வாயை மூடி கேளுனு தக் லைஃப் போட்டு மனுஷன் பாடுவாரு. குத்துப்பாட்டு, ஐட்டம் பாட்டு எல்லாத்துலயும் ஐயா கில்லினு நமக்கு தெரியும். ஆனால், மெலடிலயும் அவரு கில்லிதான். நினைத்தாலே இனிக்கும்ல.. அழகாய் பூக்குதேன்ற ஒரு பாட்டு சாட்சி. பெப்பினஸ்க்கு செக்ஸி லேடி, ஃப்ரெண்டுக்கு நண்பனைப் பார்த்த தேதி மட்டும், செல்ஃப் இண்ட்ரோக்கு என் பேரு அல்லா, டூயட்டுக்கு பியா பியானு மொத்த ஆல்பமும் வெரைட்டில குழைச்சு வெறித்தனமா விருந்து வைச்சிருப்பாரு. பியா பியா பாட்டுலாம் கேட்டு தளபதி விஜய்யே வைப் பண்ணிட்டு இருந்துருக்காரு. சாஃப்ட்டா போன விஜய் ஆண்டனி கரியரை சரவெடியா மாத்துனது, வேட்டைக்காரன். விஜயோட பெஸ்ட் ஓப்பனிங் சாங்ல நான் அடிச்சா தாங்க மாட்ட பாட்டுக்கு எப்பவும் ஸ்பெஷல் அந்தஸ்து. விஜய், “அவர் பாட்டுல அர்த்தம் இருக்குதா இல்லையான்றது ரெண்டாவது விஷயம். ஆனால், எப்படியோ அதை ஹிட் பண்ணிடுறாரு. அவர் குத்து பாட்டுக்கு மட்டும்தான் ஃபேமஸ்னு சொல்றாங்க. நான் ஒத்துக்கமாட்டேன். அந்தக் குத்துலயும் எங்கயாவது லைட்டா மெலடிய ஒளிச்சு வைச்சிடுறாரு”னு வேட்டைக்காரன் ஆடியோ லாஞ்ச்ல சொல்லுவாரு. யோசுச்சுப் பார்த்தா அதுவும் அவ்ளோ உண்மைதான்னு தோணும். புலி உறுமுதுலாம் அர்ஜுனரு வில்லுக்கு அப்புறம் விஜய்க்கு அமைஞ்ச தரமான பாட்டு.
வேட்டைக்காரன்ல மட்டுமில்லா எல்லா படத்துலயும் தீம் மியூசிக்ல ஸ்லோகங்களை சூப்பரான இடத்துல பயன்படுத்துவாரு. புலி உறுமுதுல தொடங்கி பிச்சைக்காரன் வரைக்கும் அந்த லிஸ்ட்டை சொல்லலாம். தங்களோட காதலிக்கு அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாட்டைவிட அழகான பாட்டை யாராலயும் டெடிகேட் பண்ண முடியாது. விஜய் ஆண்டனியோட பெஸ்ட் ஆல்பம்ல இன்னொன்னு, உத்தமபுத்திரன். உசமலாரிசே, கண் இரண்டில் மோதி, இடிச்ச பச்சரிசினு ஒவ்வொன்னும் செலிபிரேஷனுக்கான பாட்டா இருக்கும். வெடி படம் ஆல்பம் எத்தனை பேருக்கு புடிக்கும்னு தெரியல. இச்சு இச்சு இச்சு இச்சுக்கொடு பாட்டுலாம் ப்யூர் வைப் பாட்டு. அடுத்த மாஸ், வேலாயுதம். அண்ணன் தங்கச்சிக்கான தேசிய கீதம், ரத்தத்தின் ரத்தமே. ரக்ஷா பந்தனுக்குலாம் எல்லார் ஸ்டேட்டஸ்லயும் அதுதான். விஜய் டான்ஸ், மியூசிக், சில்லாக்ஸ் வார்த்தைனு எல்லாமே அந்தப் பாட்டுல எஞ்சாய் பண்ண வைக்கும். தீம் எடுத்துக்கோங்க, வேலா வேலா வேலா வேலா வேலாயுதம்னு தனியா வைப் ஒண்ணை கிரியேட் பண்ணிவிடும். நான், சலீம் இந்த ரெண்டு படத்துலயும் பாடல்கள் வேல்யூ அதிகம். மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்கயாலா மக்கயாலானு பாட்டுலாம் சும்மா கொளுத்திவிட்ட மாதிரி, கேட்ட உடனே பத்திக்கும். செலிபிரிரேஷனுக்குனே நேந்துவிட்டவர் மாதிரி அவர் மியூசிக் போட்டாலும், உலகினில் மிக உயரம், நூறு சாமிகள், ஒரு வேளை சோற்றுக்காகனு சில பாட்டுலாம் அழவும் வைக்கும். மண்டைய உடை, சண்டைய போடுனு தான் அவரோட பாடல் வரிக இருக்கும். ஆனால், எஞ்சாய் பண்ற மாதிரி இருக்கும். அங்கதான் மனுஷன் பல்ஸ புடிக்கிறாரு. ஆக்சுவலா, மியூசிக் பண்ணலாம்னு முடிவு பண்ணதும்.. சென்னைப் போறோம்.. மணி ரத்னம் படத்துல மியூசிக் பண்றோம்னுதான் கிளம்பி வந்துருக்காரு. அப்போ, அவருக்கு கொட்டடிக்க மட்டும் தான் தெரியும். ஆனால், அந்த கான்ஃபிடன்ஸ் இருக்குல.. அதுதான் அவரை இங்ககொண்டு வந்து விட்ருக்கு.
என்னடா, அவரோட ஆக்டிங் பத்தி பேசவே இல்லைனு நீங்க கேட்கலாம். மியூசிக் பண்ணி அவ்வளவு ஹிட் கொடுத்துருக்கேன். எவனும் என்னை கொண்டாடலைனுதான், நடிக்கவே வந்துருக்காரு. அவரோட பாட்டுல உங்களோட ஃபேவரைட் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க.