துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றிருக்கிறது ஆஸ்திரேலியா. #T20WorldCupFinal
டி20 உலகக் கோப்பை
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் நடத்தப்பட்டது. தொடரில் இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளோடு 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 173 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ் 50 பந்துகளில் 77 ரன்களும் டேவிட் வார்னர் 38 பந்துகளில் 53 ரன்களும் எடுத்தனர்.
T20WorldCupFinal சாதனைத் துளிகள்
- ஒருநாள் உலகக் கோப்பை தொடரை மூன்று முறைக்கு மேல் வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி, டி20 உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல்முறை.
- இதுவரை நடந்துள்ள 7 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளிலும் டாஸ் வென்ற அணி இந்த இறுதிப் போட்டி உள்பட 6 முறை வென்றிருக்கின்றன.
- இறுதிப் போட்டியில் 85 ரன்கள் எடுத்தார் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன். இதன்மூலம், 2016 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மர்லன் சாமுவேல்ஸ் எடுத்த ரன்களை சமன் செய்திருக்கிறார்.
- 31 பந்துகளில் அரைசதமடித்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில் குறைந்த பந்துகளில் அரைசதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இந்தப் பட்டியலில் கேன் வில்லியம்ஸன் (32 பந்துகள்), சங்ககாரா (33 பந்துகள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
- இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்தார். டி20 உலகக் கோப்பை தொடரில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் விட்டுக் கொடுத்த 5 பௌலர்களில் ஒருவரானார் மிட்செல் ஸ்டார்க். உலகக் கோப்பை தொடரைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை 2018ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 64 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். அதேநேரம், டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்த முதல் வீரர் ஸ்டார்க்தான்.
- தொடர் நாயகன் விருது வென்றார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். இந்தத் தொடரில் 289 ரன்கள் அவர் அடித்திருந்தார். கெவின் பீட்டர்சனுக்குப் (2016) பிறகு உலகக் கோப்பையை வென்ற அணியைச் சேர்ந்த ஒருவர் தொடர் நாயகன் விருது பெறுவது, இது இரண்டாவது முறை.
- ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் பந்துவீச்சில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 12 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். டி20 போட்டியில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். ஸ்டார்க் ஓவரில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார் வில்லியம்சன். இதற்கு முன்பு, 2011 சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் ஸ்டார்க் ஓவரில் 11 பந்துகளில் 32 ரன்கள் குவித்திருந்தார் விராட் கோலி.
Also Read – Hanuma Vihari: ஹனுமா விஹாரி எங்கப்பா… விவாதமான பிசிசிஐ முடிவு! #IndVsNZ