புதுச்சேரி அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில் ஒன்றியம் என்ற வார்த்தை பயன்படுத்த விவகாரம் தொடர்பாக அம்மாநில ஆளுநர் அலுவலகம் விளக்கம் கொடுத்திருக்கிறது… என்ன நடந்தது?
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், அமைச்சரவைப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகள் இடையே உடன்பாடு எட்டப்படாததால், பதவியேற்பு விழா நடைபெறுவது தாமதமானது. இந்தநிலையில், ஐம்பது நாட்களுக்குப் பின்னர் என்.ரங்கசாமி தலைமையில் ஐந்து அமைச்சர்கள் பதவியேற்பு விழா கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. முதலமைச்சர் என்.ரங்கசாமி உள்ளிட்டோருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். ஆனால், அப்போது `இந்திய ஒன்றிய ஆட்சிப்பரப்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இது சர்ச்சையானது.
ஒன்றிய அரசு
தமிழகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த மே 7-ம் தேதி பதவியேற்றது. அப்போது முதலே மத்திய அரசை, ஒன்றிய அரசு என்றே தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் ஆவணங்களிலும் அமைச்சர்களும் குறிப்பிட்டு வந்தனர். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க இதற்கு கடுமையான எதிர்வினையாற்றியது. `மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தால், தமிழக அரசு என்ன பஞ்சாயத்து அரசா?’ என்று கூறி பா.ஜ.க தலைவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையிலேயே விளக்கம் கொடுத்திருந்தார். இந்த விவாதம் ஓய்வதற்குள்ளாகவே புதுச்சேரி அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை விளக்கம்
பதவியேற்பு விழாவில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையின் பயன்பாடு குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறது. அந்த விளக்கத்தில், “இந்திய ஒன்றிய ஆட்சிப் பரப்பு என்ற வார்த்தையில், ஒன்றியம் என்பது புதுச்சேரிதான். மத்திய அரசு அல்ல. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து பின் இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால், Indian Union Territory என்கிறார்கள். இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு என்பது புதுச்சேரி தமிழறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சட்டமானது. இந்திய அரசின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பரப்பு என்பதால், இந்திய ஒன்றிய புதுச்சேரி நிலப்பரப்பு என்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Also Read – முதல்வர் ஸ்டாலினின் லண்டன் பயணம் டு டிஜிபி-யின் தமிழ்நாடு பாசம் வரை..!