MK Stalin

முதல்வர் ஸ்டாலினின் லண்டன் பயணம் டு டிஜிபி-யின் தமிழ்நாடு பாசம் வரை..!

தமிழக அரசியல் களத்தில் லேட்டஸ்டாக நிகழ்ந்த நிகழ்வுகள் அப்டேட்டுகள்!

முதலமைச்சரின் லண்டன் பயணம் எப்போ?

MK Stalin

மு.க.ஸ்டாலின் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவத்திற்காக லண்டன் செல்வது வழக்கம். ஆனால், கடந்த 2018-க்குப் பிறகு, அவர் லண்டன் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை. 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் செல்வதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றன. ஆனால், கொரோனா பாதிப்பு மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் என அப்போது அவர் பிஸியாக இருந்ததால், அந்தப் பயணமும் ரத்தானது. இந்நிலையில், ஜூலை 10-ஆம் தேதி அவர் லண்டன் செல்ல இருக்கிறார். மொத்தம் 15 நாள்கள் பயணமாக லண்டன் செல்ல உள்ள மு.க.ஸ்டாலின், அங்கு மருத்துவ சிகிச்சையை முடித்துவிட்டு, தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்கான சில சந்திப்புக்களையும் மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிழல் முதல்வராகிறாரா உதயநிதி!?

Udhayanidhi Stalin

தமிழகத்தில் துணை முதலமைச்சர் என்ற பதவி, 2006-2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, தன் அரசியல் வாரிசான மு.க.ஸ்டாலினுக்கு அந்தப் பதவியை உருவாக்கிக் கொடுத்தார். அதன்பிறகு, 2016-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இறந்தபிறகு, அந்தக் கட்சிக்குள் அதிகாரத்திற்கு அடித்துக் கொண்ட, ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்ஸை சமாதானம் செய்து, கட்சியை  நடத்த ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தொடர்ந்தார். ஓ.பன்னீர் செல்வம் துணை முதலமைச்சராக இருந்தார். ஆனால், தற்போதைய தி.மு.க ஆட்சியில் அப்படி ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும், அதற்கான தேவையும் எழவில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் 15 நாட்கள் லண்டன் செல்வதால், அந்த நேரத்தில் நிழல் முதலமைச்சராக உதயநிதி செயல்பட உள்ளார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். இதுவே, அவர் எதிர்காலத்தில் துணை முதலமைச்சராக வருவதற்கான அறிகுறிகள் என்கின்றனர் தி.மு.க-வினர்.

சசிகலா மீது தினம் ஒரு வழக்கு!

ஒரு காலத்தில் அ.தி.மு.க-வில் நிழல் அதிகாரமாகத் திகழ்ந்தவர் திகழ்ந்தவர் சசிகலா. அந்தக் கட்சியின் ஒவ்வொரு அசைவும் சசிகலா விருப்பப்படியே நடந்தது.  அ.தி.மு.க ஆட்சியில், சசிகலாதான் நிழல் முதலமைச்சராக இருந்தார். அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் நம்பர் 2-வாக இருந்த சசிகலாதான் நம்பர் 1. அந்தக் காலத்தில் சசிகலாவை நேரில் பார்த்தவர்களும், அவர் குரலைக் கேட்டவர்கள் கூட மிக அரிதாகவே இருந்தனர். சசிகலா அப்படி சீக்ரெட்டாக இருந்து, அந்தக் கட்சியை ஆட்டிப்படைத்த காலத்தில், அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் முதல் அமைச்சர்கள் வரை சசிகலா பெயரைக் கேட்டால், நடுங்குவார்கள்.

Sasikala

ஆனால், ஜெயலலிதா இறந்து, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்று, அ.தி.மு.க-வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பிறகு, சசிகலாவின் பிம்பம் சுக்குநூறானது. அதை மற்றவர்கள் சிதைத்ததைவிட அதிகமாக, சசிகலாவே சிதைத்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் முயற்சியில், அவர் வெளியிடும் தொலைபேசி உரையாடல்கள், சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என சிரிக்கும், முன்னால் அமைச்சர்கள், பி.ஜே.பி தலைமையோடு பேசி, சசிகலாவை முழுமையாக அடக்கும் வேலையைத் தொடங்கி உள்ளனர். அதற்கான பலன் பி.ஜே.பி தலைமையிடம் இருந்தும் பாசிட்டிவ்வாக வந்துள்ளது. சசிகலா தீவிரமாக எதையாவது செய்ய முயற்சித்தால், ஒரு நாளைக்கு ஒரு பழைய வழக்கை தூசி தட்டவும், புதியதாக நிறைய வழக்குகளைப் போடவும், திட்டம் தயாராகி உள்ளது. இந்தத் தகவலும் சசிகலாவுக்குச் சொல்லப்பட்டுள்ளது.

இப்போதும் டாஸ்மாக்கில் கல்லா கட்டும் அ.தி.மு.க!

TASMAC

தி.மு.க ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நிறைவடையப் போகின்றன. கொரோனா இரண்டாவது அலை என்பதாலும், 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை இழந்த எச்சரிக்கை உணர்வோடும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக வைக்கிறார். அதனால், கட்சிக்காரர்களின் பணம் சம்பாதிக்கும் ஆசைக்கு கடும் அணை போடப்பட்டுள்ளது. அதுபோல், சொந்த மாவட்டத்தில் கட்சிக்காரர்களுக்கு அதிகாரமட்டத்தில், போலீஸ் மட்டத்தில் சட்டத்தை மீறி எந்த உதவியும் செய்யக்கூடாது என்ற உத்தரவும் போடப்பட்டுள்ளது. அதனால், தி.மு.க-வினர் எந்த வேலையைத் தொடுவதற்கும் பயப்படுகின்றனர். அதே நேரத்தில் சட்டப்படியாக பார்க்கப்போனாலும், டாஸ்மாக்கில் எந்த மாற்றமும் இதுவரை செய்யப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சியில் இருந்ததால், டாஸ்மாக்கில் சேல்ஸ்மேன் முதல் சூப்பர்வைசர் வரை, அ.தி.மு.க-வினரே அதிகம் உள்ளனர். அதுவும் நன்றாக வருமானம் வரும் கடைகளில் எல்லாம் அவர்களை அமர்ந்துள்ளனர். நன்றாக வருமானம் வரும் ஒரு கடையில் ஒரு நாளைக்கு சூப்பர்வைசர், சேல்ஸ்மேன் கூட்டணி 50 ஆயிரம் ரூபாய் கல்லா கட்ட முடியும். அதனால், தி.மு.க ஆட்சி நடந்தாலும், இன்னும் டாஸ்மாக்கில் வளம் கொழிப்பவர்களாக அ.தி.மு.க-வினரே உள்ளனர். இதில் முதலமைச்சர் உடனடியாக சரியான உத்தரவுகளைப் பிறப்பிக்கவில்லை என்றால், தி.மு.கவினர் உற்சாகம் இழந்து விடுவார்கள் என்கின்றனர், கட்சிக்காரர்கள்.


என்ன செய்கிறார் டி.டி.வி.தினகரன்? 

TTV Dhinakaran

கடந்த ஆட்சிக்காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடிக்கும், அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வைக் காட்டிலும் சிம்ம சொப்பனமாக இருந்தவர் அ.ம.மு.க-வின் டி.டி.வி.தினகரன் தான். ஆனால், இந்தத் தேர்தலில் அந்தக் கட்சி அடைந்த படுதோல்வியை அடுத்து, வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார் டி.டி.வி.தினகரன். கொரேனா காலகட்டம் என்பதால், அவர் மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணமும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கட்சிக்காரர்கள் சந்திப்பு, மீடியா சந்திப்பு என எதுவும் இல்லாமல் இருக்கும் டி.டி.வி.தினகரன், சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகளாலும், அதிருப்தி அடைந்துள்ளார். அதனால், பெசன்ட் நகர் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார் டி.டி.வி.

டி.ஜி.பி சைலேந்திர பாபுவின் தமிழக பாசம்!

Sylendra Babu

புதிதாகப் பொறுப்பேற்கவிருக்கும்  தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு, தேர்தலுக்கு முன்பிருந்தே, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனோடு, மிக மிக நெருக்கமாக இருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான இவர்,  தன்னுடைய ஒட்டுமொத்த சர்வீஸ் காலத்தில், எந்தவித மத்திய அரசு தொடர்பான காவல்துறைப் பணிகளில் ஈடுபட்டதில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Also Read – குண்டர் தடுப்புச் சட்டம் என்றால் என்ன… யாரை சிறையில் அடைக்கலாம்?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top