சூர்யா நடித்து வெளியான ‘காப்பான்’ படக் கதை முதலில், இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பதற்காக எழுதப்பட்ட கதை என்பது தெரியுமா..? என்ன நடந்தது.. அட்லீ எப்படி இதில் உள்ளே வந்தார்.. இந்தக் கதை எப்படி சூர்யாவுக்குப் போனது..? பார்க்கலாம்.

‘மாற்றான்’ படத்துக்குப் பிறகு ஏ.ஜி.எஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார் ரஜினி. அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிய இயக்குநர் கே.வி.ஆனந்திடம் அப்போது கைவசம் இருந்த எந்த கதையும் ரஜினிக்கு ஏற்றதுபோல இல்லை. அதைத்தொடர்ந்து வழக்கமாக எழுத்தாளர்கள் சுபாவுடன் பயணித்து வந்த கே.வி.ஆனந்த் இந்தமுறை கொஞ்சம் நடையை மாற்றி எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரை சந்தித்து கதைக் கேட்டார். அந்த சந்திப்பில் அவர் சொன்ன ஒரு கதை கே.வி.ஆனந்துக்கு மிகவும் பிடித்துப்போய்விட, உடனே அதற்கான திரைக்கதை அமைக்கும் வேலைகளிலும் பரபரப்பாக இறங்கவும் செய்தார்.

முழு திரைக்கதையும் ரெடியாகி, ரஜினியை சந்தித்து விவரிக்க, அவருக்கும் கதை மிகவும் பிடித்துப்போய்விட, ஒப்பந்தங்களில் கையெழுத்திட சம்மதமும் தெரிவித்துவிட்டார் ரஜினி. கே.வி.ஆனந்த் தரப்பிலும் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கான வேலைகளும் பரபரப்பாக நடந்துவந்தது. ஆனால் இடையில் ரஜினி என்ன நினைத்தாரோ இப்போதைக்கு இந்த கதை வேண்டுமா என யோசிக்க ஆரம்பித்தார். இதன் விளைவாக அந்த ப்ராஜெக்டிலிருந்து பின்வாங்குவதென திடீரென முடிவெடுத்தார். இன்னும் சொல்லப்போனால் ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஏ.ஜி.எஸ் நிறுவனம்வரை சென்றுவிட்டு காரிலிருந்து இறங்குவதற்கு முன்பு ரஜினி தன் முடிவை மாற்றிக்கொண்டு திரும்பிவிட்டார் என்ற தகவலும் கோலிவுட்டில் பரவிவருகிறது.

இவ்வாறு அந்த ப்ராஜெக்ட் கடைசி நேரத்தில் நின்றுவிட, கே.வி.ஆனந்த் ‘அனேகன்’ பட வேலைகளைத் தொடங்கி அதில் பிஸியானார். ரஜினியோ ‘லிங்கா’ படத்தில் நடிக்கப் போனார். அதைத்தொடர்ந்து இந்த விஷயத்துக்குள் அட்லீயும் உள்ளே வந்தார். அதாவது ‘மெர்சல்’ வெற்றிக்குப் பிறகு, அட்லீ ரஜினியை சந்தித்து ஒரு கதை சொன்னார். ஆனால் அந்த கதை ரஜினிக்கு திருப்தியளிக்கவில்லை. ஆனால் தான் எப்படியாவது ரஜினியுடன் பணியாற்றிவிட வேண்டுமென நினைத்த அட்லீ, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரை சந்தித்து அந்தக் கதையை தனக்குத் தரும்படியும் அதற்கு தன்னுடைய ஸ்டைலில் திரைக்கதை அமைத்துக்கொள்கிறேன் என்றும் கோரிக்கை வைத்தார். ஆனால், பட்டுக்கோட்டை பிரபாகரோ ‘மன்னிக்கவும், இது ரஜினிக்காக கொடுத்த கதை இல்லை, கே.வி.ஆனந்துக்காக கொடுத்த கதை. அந்த ஒப்பந்ததை என்னால் மீற முடியாது’ எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதைத்தொடர்ந்து அட்லீ ‘பிகில்’ பட வேலைகளில் மூழ்கினார்.

அதன்பிறகு சூர்யாவுக்கும் கே.வி.ஆனந்துக்கும் இடையே இருந்த மனமாச்சர்யங்கள் நீங்கி, இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றுவது என முடிவெடுத்தபோது கையிலெடுத்த கதைதான் இப்போது நாம் பார்க்கும் ’காப்பான்’. அதேபோல அப்போது ரஜினி ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்குக் கொடுத்த வாக்குபடிதான் தற்போது அந்த நிறுவனத்திற்காக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
Also Read : `லாபம்’ முதல் `Tuck Jagadish’ வரை… இத்தனையுமா இந்த வாரம் வருது?!