அஜித் தன் ரசிகர்களுக்கு டிரிபிள் ஆக்சன் விருந்து படைத்த ‘வரலாறு’ படத்தில் ரஜினியும் நடிக்க ஆசைப்பட்டிருக்கிறார் என்பதும் அந்த ப்ராஜெக்டுக்கு ரஜினி `மதனா’ என டைட்டில் வைத்ததும் உங்களுக்குத் தெரியுமா..? தொடருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
`அவ்வை சண்முகி’ வெற்றிக்குப் பிறகு கமல் – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி மீண்டும் இணைவதாக உறுதியானதும் அதற்காக அப்போது ஏராளமான கதைகளை பரிசீலித்துவந்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். அந்த காலகட்டத்தில் தன் நண்பரான கே.எஸ்.ரவிக்குமாரின் அலுவலகத்துக்கு ரஜினி அவ்வபோது கேஷூவலாக வந்துபோயிருக்கிறார். அப்போது, ‘வரலாறு’ படக் கதையில் கமலை நடிக்கவைக்க முயற்சியில் இருப்பதையும் ‘ஹேராம்’ படத்தில் இருக்கும் கமல் வந்ததும் அவரிடம் சொல்லி சம்மதம் வாங்கி ஷூட்டிங்கை தொடங்கும் ஐடியாவில் இருப்பதையும் ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார். அதற்கு ரஜினி, ‘கதை ரொம்ப நல்லாயிருக்கு. ஆனால், கமல் இந்தக் கதையில நடிக்கமாட்டார். அப்படி ஒருவேளை அவர் நடிச்சார்னா டைட்டில் ‘மதனா’னு வைங்க ரொம்ப நல்லாயிருக்கும்’ என ஆலோசணை வழங்கியிருக்கிறார்.
ரஜினி சொன்னதுபோலவே கமல் அந்தக் கதையில் நடிக்க மறுக்கவே, அதன்பிறகு வேறொரு கதையை தயார் செய்து படமாக்கியிருக்கிறார்கள். அதுதான் ‘தெனாலி’. அதன்பிறகு ‘பாபா’ தோல்விக்குப் பிறகு ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி இணைவதாக ‘ஜக்குபாய்’ பட அறிவிப்பு வந்தது. ஆனால், அந்தக் கதையின் இரண்டாம் பாதி ஓட்டத்தில் எவ்வளவு சரி செய்தாலும் தீராத பிரச்சனை ஒன்று திரைக்கதையில் தொடரவே அந்த ப்ராஜெக்டை கைவிட்டது ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி. அதன்பிறகு ரஜினி ‘சந்திரமுகி’ படத்தில் நடிக்கப் போய்விட, கே.எஸ்.ரவிக்குமார், அஜித் நடிப்பில் ‘வரலாறு’ படத்தைத் தொடங்கினார்.
அப்போது நட்புரீதியாக ‘சந்திரமுகி’ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கே.எஸ்.ரவிக்குமார் சென்றபோது, ரஜினி எதார்த்தமாக ‘என்ன ப்ராஜெக்ட் போய்ட்டிருக்கு ரவி..?’ எனக் கேட்க, ‘அஜித்தை வெச்சு ‘காட்ஃபாதார்’னு படம் பண்ணிக்கிட்டிருக்கேன் சார்..? (பின்னாளில்தான் அது ‘வரலாறு’ என டைட்டில் மாறியது) என சொல்லியிருக்கிறார். ‘காட்ஃபாதரா..? டைட்டிலே பவர்ஃபுல்லா இருக்கே.. என்ன கதை..?’ என ரஜினி கேட்க, ‘வரலாறு’ கதையை சுருக்கமாக சொல்லியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். அவர் சொல்லி முடித்ததும் ரஜினி மிக வருத்தமாக, ‘என்ன ரவி இப்படி பண்ணிட்டீங்க..? நான் என்ன சொன்னேன் உங்கக்கிட்ட கமல் இந்தக் கதையில நடிக்கமாட்டாரு.. அப்படி அவர் நடிக்கலைன்னா சொல்லுங்க, நாம பண்ணுவோம்னு சொன்னேனே.. மறந்துட்டீங்களா..?’ எனக் கேட்க, ‘அய்யய்யோ. சார். சுத்தமா நான் மறந்துட்டேனே’ என ஃபீல் பண்ணியிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். ‘ ‘ஜக்குபாய்’ குழப்பத்துல இருந்தப்பகூட நமக்கு நியாபகம் வராம போயிடுச்சே ரவி.. வந்திருந்தா அதே டைட்டில்ல இந்த கதையைவே நாம பண்ணியிருக்கலாமே’ என வெகுநேரம் அதைப்பற்றி பேசி வருத்தப்பட்டிருக்கிறார் ரஜினி.
ஒருவேளை ‘வரலாறு’ படத்தின் கதையில் ரஜினி நடிப்பில் ‘மதனா’ என உருவாகியிருந்தால் எப்படி இருந்திருக்கும்..? உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
Also Read : நடிகை ஜோதிகா ஃபேனா நீங்க… உங்களுக்கான க்விஸ் இதோ!