மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் தங்கள் ராசிக்கு அதிபதி யார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் நல்ல பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். ஒவ்வொருவரும் பிறக்கும்போதே நட்சத்திரமும் ராசியும் உடன் வந்துவிடும். நமது ராசியைத் தெரிந்துகொண்டு அதன் பலன்களுக்கேற்ப நம் வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டு இறைவனை சரணடைவது வாழ்வில் எல்லா நற்பேறுகளையும் பெற உதவும் என்கிறார்கள் ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள். வாழ்வில் மிகப்பெரிய தடைகள் ஏற்படும்போது, தங்கள் ராசிக்குரிய கோயில்களில் சென்று வழிபட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் இன்று ரிஷப ராசிக்கான அதிபதி யார்… அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.
ரிஷப ராசி
கார்த்திகை 2,3,4-ம் பாதங்கள், ரோகிணி மற்றும் மிருகசீரிஷத்தின் முதல் இரண்டு பாகங்கள் ரிஷப ராசியாகும். இந்த ராசிக்கு அதிபதி சுக்கிரன். ரிஷபம் என்பது நந்திபகவானைக் குறிப்பதால், அவரின் கொம்புகளுக்கு இடையே அருள் பாலிக்கும் ஈசனை வழிபடுவது விசேஷம். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் அருள்புரியும் யோகநந்தீஸ்வரர் திருக்கோயில் ரிஷப ராசிக்காரர்கள் அவசியம் சென்று வழிபட வேண்டிய கோயிலாகும்.
திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரர் திருக்கோயில்
“அரவும்மலை புனலும்மிள
மதியும்நகு தலையும்
விரவுஞ்சடை யடிகட்கிடம்
விரிநீர்விய லூரே’’ என்று திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற தலம் இது. ரிஷப ராசிக்காரர்களுக்குப் பரிகாரத் தலமாக இருக்கும் இந்தத் தலத்தில், சித்திரை முதல் மூன்று தேதிகளில் நடைபெறும் சூரிய ஒளி பூஜை சிறப்பு பெற்றது. கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக ஈசன் அருள்பாலிக்கிறார். சித்திரை முதல் மூன்று நாட்களில் சூரிய ஒளி கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. இந்த நாட்களில் நடக்கும் சூரிய ஒளி பூஜை சிறப்பு வாய்ந்தது. பிரதோஷம், சிவராத்திரி, சோமவார நாட்களில் வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் கிட்டும் என்பது ஐதீகம். ஆலயத்தில் இருக்கும் கிணற்றில் கார்த்திகை அமாவாசை தினத்தில் கங்கை பொங்கி வரும் என்று நம்பப்படுகிறது. ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று கங்கை பொங்குகிறது. அன்றைய தினம் இரவு முழுவதும் திவ்யநாம சங்கீர்த்தனம் நடைபெறும். ரிஷப ராசிக்காரர்கள் இதில் கலந்துகொண்டு புனித நீராடினால் குடும்பம் தழைத்தோங்கும் என்பது நம்பிக்கை. தேவாரப் பாடல்பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 43-வது தலமாகும். கோயிலை தஞ்சாவூர் அரண்மனை நிர்வாகம் நிர்வகித்து வருகிறது.
Also Read – Rasi Temples: மேஷ ராசிக்காரர்களுக்கு உகந்த தெய்வம்… வழிபட வேண்டிய கோயில் எது?
எப்படி செல்லலாம்?
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கி.மீ தூரத்தில் திருவிடைமருதூர் சென்று, அங்கிருந்து 4 கி.மீ சென்றால் திருவிசநல்லூரை அடையலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிசநல்லூர் என்ற பெயரில் பல ஊர்கள் இருப்பதால், இந்த ஊரை பண்டாரவாடை திருவிசநல்லூர் என்றழைக்கிறார்கள். மேலும், திருவியலூர், திருவிசலூர் உள்ளிட்ட பல பெயர்களில் இந்த ஊரை அழைக்கிறார்கள்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து கும்பகோணத்துக்கு பேருந்து வசதி இருக்கிறது. அங்கிருந்து திருவிடைமருதூர் வழியாக திருவிசநல்லூருக்குச் செல்லலாம். தஞ்சாவூர், கும்பகோணத்துக்கு ரயில் வசதி இருக்கிறது. காரில் செல்ல விரும்புபவர்கள் கும்பகோணம் சென்று அங்கிருந்து திருவிசநல்லூரை அடையலாம். அருகிலிருக்கும் விமான நிலையம் திருச்சி. கும்பகோணத்தில் நிறைய தங்கும் விடுதிகள் இருக்கின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
மிஸ் பண்ணக் கூடாத இடங்கள்
திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரரைத் தரிசித்துவிட்டு அருகில் இருக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியையும் மறக்காமல் தரிசித்துவிட்டு வாருங்கள். கோயில் நகரான கும்பகோணத்தில் இருக்கும் கோயில்களுக்கும் ஒரு விசிட் அடிச்சுட்டு வாங்க.