இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி – தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவதுண்டு. இந்த விவகாரம் பற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதல்முறையாக மனம்திறந்திருக்கிறார்.
ரவி சாஸ்திரி புத்தகம்
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கிரிக்கெட் உலகில் தன்னைக் கவர்ந்த வீரர்கள் பற்றியும் கிரிக்கெட்டராகத் தனது அனுபவங்கள் பற்றியும் `Star Gazing’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் லண்டன் தாஜ் ஹோட்டலில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஆலன் வில்கின்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, `ரவி சாஸ்திரியின் குரலில் எப்போதும் தெளிவு இருக்கும். கம்பீரக் குரலில்Boys’ என்று பேசத் தொடங்குவார். 2014-ல் ஒரு அணியாக நாங்கள் சோர்ந்துபோயிருந்தபோது அவர் கொடுத்த உணர்வுப்பூர்வமான பெப் டாக்கை மறக்கவே முடியாது. முதல்முறையாக அவர் குரலைக் கேட்டது இப்போதும் நினைவிருக்கிறது. அவர் பேசத் தொடங்கியபோது நான் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அவரது குரலைக் கேட்டவுடன் எனது உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டதை இப்போதும் உணர்கிறேன்’’ என்று பேசினார்.
விராட் கோலி – ரோஹித் ஷர்மா பிரச்னை
நிகழ்ச்சிக்குப் பின்னர் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ரவி சாஸ்திரியிடம் விராட் கோலி – ரோஹித் ஷர்மா இடையில் பிரச்னை எதுவும் இருக்கிறதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரவி சாஸ்திரி, `அப்படி ஒன்றை நான் இதுவரை பார்த்ததே இல்லை. இதுபற்றி என்னிடம் சிலர் கேள்வி எழுப்பும்போது, நான் என்ன சொல்வேன் என்றால்,நீங்கள் பார்க்காததை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன்’ என்பதைத்தான். எப்போதுமே ஒரு இணக்கமான சூழல் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அது அணியை எப்போதுமே பாதித்ததை நான் பார்த்ததில்லை. விராட் அல்லது ரோஹித்திடம், `இதை இப்படிப் பார்க்காதீர்கள், கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்’ என எதைப்பற்றியும் என்னால் நேருக்கு நேர் சொல்ல முடியும். ஆனால், அப்படி ஒரு பிரச்னையால் அணி பாதிக்கப்பட்டதாக நான் எப்போதும் பார்த்ததில்லை. முதல்நாள் முதலே அது அணியைப் பாதித்ததில்லை. மனதில் தோன்றியதை வெளிப்படையாகப் பேசுபவன் நான்’’ என்று தெரிவித்தார்.
விராட் கோலி – ரோஹித் ஷர்மா இடையே பிரச்னை எழுந்ததாக அவ்வப்போது சில வதந்திகள் எழுந்து மறைவதுண்டு. இதுபற்றிய கேள்வி விராட் கோலியிடமே 2019-ல் முன்வைக்கப்பட்டது. அப்போது பேசிய விராட் கோலி, “நானும் இதுபோன்ற வதந்திகளை நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் சூழல் வெற்றிக்கு ரொம்பவே முக்கியமானது. அந்தத் தகவல் உண்மையென்றால், எங்களால் சரியாக விளையாட முடியாமல் போயிருக்கும். இதுபோன்ற செய்திகள் அபத்தமானவை. நாங்கள் தினசரி நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள வேண்டி இருக்கும்’’ என்று பதில் கொடுத்திருந்தார்.
Also Read – ViratKohli: கலங்க வைக்கும் கவர் டிரைவ்… விராட் கோலியின் சதமில்லாத 50 இன்னிங்ஸ்கள்!