விராட் கோலி

ViratKohli: கலங்க வைக்கும் கவர் டிரைவ்… விராட் கோலியின் சதமில்லாத 50 இன்னிங்ஸ்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்த இந்திய கேப்டன் கோலி, சதமில்லாமல் 50 இன்னிங்ஸ்களைக் கடந்திருக்கிறார். 2019 நவம்பரில் வங்கதேச டெஸ்டுக்குப் பிறகு சுமார் 2 ஆண்டுகளாக அவர் சதமடிக்கவில்லை. ஏன் இந்த தடுமாற்றம்?

லீட்ஸ் டெஸ்ட்

லீட்ஸில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் அரைசதத்துக்குச் சொந்தக்காரரானார். இந்த அரைசதத்தை கோலியோ, அவர்களது ரசிகர்களோ கொண்டாட முடியாது. காரணம். சதங்களே இல்லாமல் 50 இன்னிங்ஸ்களை விளையாடியிருக்கிறார் இந்தியாவின் `ரன் மெஷின்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி.

விராட் கோலி
விராட் கோலி

2019 நவம்பரில் ஷகிப் அல் ஹசன் இல்லாத வங்கதேச அணியை, கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்டில் எதிர்க்கொண்டது இந்தியா. ஈடன் கார்டனில் நடந்த அந்தப் போட்டியில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றுவிதமான ஃபார்மேட்டுகளிலும் சேர்த்து அதன்பின்னர் 50 இன்னிங்ஸ்கள் விளையாடிவிட்டார். ஆனால், 71-வது சதம் அவருக்கு இதுவரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நடப்பு டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் கூட அவரால் இதைத் தகர்க்க முடியும் என்பது சாத்தியம்தான். ஆனால், சதங்களே இல்லாத இந்த 50 இன்னிங்ஸ்கள் விராட் கோலியால் நிச்சயம் மறக்கக் கூடிய ஒன்றாக இருக்காது. 2019 நவம்பருக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அவரின் பேட்டிங் ஆவரேஜ் – 23.00, ஒருநாள், டி20 போட்டிகளில் முறையே 43.26, 64.45 என்றிருக்கிறது. செஞ்சுரி இல்லாமல் வீரர்கள் தடுமாறுவது சர்வதேச கிரிக்கெட்டில் புதிதல்லதான். ஆனாலும், மற்ற ஃபார்மேட்டுகளை விட டெஸ்டில் கோலி தடுமாறி வருகிறார் என்பது நிதர்சனம் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். குறிப்பாக, வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் அவரால் சரளமாக ரன் குவிக்க முடியவில்லை.

விராட் கோலி
விராட் கோலி

2019 நவம்பருக்குப் பிறகு விராட் கோலி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே அரைசதம் (74) அடித்திருக்கும் அவரின் பேட்டிங் சராசரி 18.50. இங்கிலாந்து அணிக்கெதிரான தற்போதைய தொடரில் இதுவரை நான்கு இன்னிங்ஸ்களில் களமிறங்கியிருக்கும் கோலி அடித்த ரன்கள் முறையே, 0, 42, 20, 7. இதனால், இந்திய டெஸ்ட் அணியால் விராட் கோலி இல்லாமல் சாதிக்க முடியும் என்ற விவாதமும் எழுந்திருக்கிறது.

பேட்ஸ்மேனாக அவரது பங்களிப்பு குறித்து கேள்வி எழத் தொடங்கியிருக்கும் நிலையில், அவரது கேப்டன் பொறுப்பு பற்றிய விவாதமும் எழுவதை இயல்பாகத் தவிர்க்க முடியவில்லை. இதற்கு இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலிய சீரிஸ் வெற்றியைத் தான் கைகாட்டுகிறார்கள். ஆஸ்திரேலியாவுடன் கடந்த டிசம்பரில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில்தான் இந்தியா 36 ரன்களில் ஆட்டமிழந்தது. அதன்பின்னர், குழந்தை பிறப்புக்காக கோலி இந்தியா திரும்பினார். 4 போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்று பின்தங்கியிருந்த இந்திய அணி, ரஹானே தலைமையில் 2-1 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

விராட் கோலி
விராட் கோலி

வீரர்களிடம் கம்ப்ளீட் ஃபுரஃபஸனலிஸத்தை எதிர்ப்பார்ப்பவர் கேப்டன் விராட் கோலி. ஃபிட்னெஸ் விஷயத்திலும் அது தவிர்க்க முடியாதது. ஆனால், கோலி தலைமையில் வீரர்கள் ஒருவித அழுத்தத்துடனே இருப்பார்கள் என்ற வாதத்தையும் விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். இதுபற்றி அப்போது பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் லீ, ` கண்டிப்பான கேப்டனான வீராட் தலைமையில் வீரர்கள் புதிய ரிஸ்குகளை எடுக்க தயங்குவார்கள். அதேநேரம், ரஹானே தலைமையில் களமிறங்கிய இந்திய வீரர்கள் ரொம்பவே ரிலாக்ஸாக விளையாடினார்கள். அவுட் ஆஃப் தி லைன் முயற்சிகளை இந்திய வீரர்கள் எடுத்தது கைகொடுத்தது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், ரஹானேவோ மாற்றி யோசித்தார்.விராட்தான் எப்போதுமே எங்களுடைய கேப்டன். நான் அவரின் துணை கேப்டன்தான்’ என்று அந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

செக் வைக்கும் கவர் டிரைவ்!

2018-19 சீசனுக்குப் பிறகு டெஸ்டில் விராட் கோலியின் பேட்டிங் ஆவரேஜ் – 38.93. இதேகாலத்தில் ரோஹித் ஷர்மா (54.84), மயங்க் அகர்வால் (45.73), ரிஷப் பன்ட் (40.82), ஜடேஜா (40.76) இவர்களை விடக் குறைவு. இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸில் இதுவரை விளையாடியிருக்கும் 4 இன்னிங்ஸ்களிலுமே ஆஃப் ஸ்டம்ப்க்கு வெளியே போன பந்துகளில் விக்கெட்டை இழந்திருக்கிறார் கோலி. விக்கெட் கீப்பர் அல்லது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்திருக்கிறார். அதுவும் ஆண்டர்சன் பந்துவீச்சில் இரண்டு முறை ஆட்டமிழந்திருக்கிறார்.

விராட் கோலி
விராட் கோலி

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போகும் பந்துகளை கவர் டிரைவ் ஆட முயற்சித்து தொடர்ந்து விக்கெட்டைப் பறிகொடுத்து வருகிறார் கோலி. கவர் டிரைவை மொத்தமாகத் தவிர்த்துவிடுங்கள் கோலி என்று கமெண்ட்ரியில் இருந்த சுனில் கவாஸ்கர் அட்வைஸ் செய்திருக்கிறார். மேலும், `சச்சினுக்கு அவர் (விராட் கோலி) போன் செய்து, இந்த சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என ஐடியா கேட்டு, அதன்படி செயல்பட வேண்டும். சிட்னி டெஸ்டின் சச்சின் ஆடிய விதத்தை அவர் பின்பற்ற வேண்டும்’ என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சிட்னியில் சச்சின் என்ன செய்தார்?

சிட்னியில் 2004-ம் ஆண்டு ஜனவரி 2-6ல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் கவர் டிரைவைக் கவனமாகத் தவிர்த்து நேர்த்தியான ஆட்டம் ஆடிய சச்சின் டெண்டுல்கர், 436 பந்துகளை எதிர்க்கொண்டு 241 ரன்கள் குவித்தார். சச்சினின் இந்த மராத்தான் ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 705 ரன்கள் குவித்தது. அதேநேரம், ஆஸ்திரேலியாவின் ஃபைட் பேக்கால் அந்த போட்டி டிரா ஆனது.

`ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசி என்னை இரண்டு முறை அவுட்டாக்கினார்கள். அதனால், கவர் டிரைவ் ஆடவே கூடாது என்ற முடிவோடு களமிறங்கினேன்’ – சிட்னி டெஸ்டுக்குப் பின் சச்சின் டெண்டுகல்கர்.

`மற்றவர்கள் செய்யும் தவறுகளில் இருந்தே நல்ல வீரர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள். சச்சின் போன்ற சிறந்த வீரர், தெரிந்தே தனது ஃபேவரைட் ஷாட்டைத் தவிர்த்து ஒரு இன்னிங்ஸை ஆட முடியும் என்று சிட்னி டெஸ்டில் நிரூபித்தார். அவரது மன உறுதியைக் கண்டு வியந்து போனேன்’ – ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்.

Also Read – விராட் கோலி ரசிகர்களே… உங்களுக்கான சின்ன டெஸ்ட்! #13YearsOfViratKohli

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top