Seeman - Lingusamy

சீமான் – லிங்குசாமி மோதலுக்குக் காரணமான மாதவன்… என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் கதை திருட்டு விஷயம் அடிக்கடி பூதாகரமாவதுண்டு. அவ்வாறு சீமானுக்கும் லிங்குசாமிக்கும் இடையே கதை விவகாரத்தில் சமீபத்தில் மோதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால்  அதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் மாதவன். சீமான்- லிங்குசாமி – மாதவன்…? என்ன நடந்ததென ஒரு பிளாஸ்பேக் போகலாமா?

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வட இந்தியாவில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. இதைக் கேள்விபட்ட மாதவனுக்கு இந்த சம்பவம் மிகவும் பாதிப்பைத் தந்திருக்கிறது. எனவே இதை அவர் அவ்வபோது தன் நண்பர்களுடன் ஆச்சர்யமாக பகிர்ந்துகொள்வாராம். அவ்வாறு சீமான் இயக்கத்தில் மாதவன் `தம்பி’ படத்தில் நடித்தபோது, சீமானிடம் அந்த சம்பவத்தை சொல்லியிருக்கிறார். அதன்பிறகு லிங்குசாமி இயக்கத்தில் ‘வேட்டை’ படத்தில் நடித்தபோது அவரிடமும் கேஷூவலாக அந்த சம்பவத்தை சொல்லியிருக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சில வருடங்கள் கழித்து மாதவன் சொன்ன சம்பவத்தை வைத்து சீமான், லிங்குசாமி இருவருமே தனித்தனியே ஒரு கதையை உருவாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன்படி, இருவருமே தங்களது ஸ்டைல்களில் தனித்தனியே திரைக்கதை அமைத்து தனித்தனியே படமாக்க முயற்சியும் செய்திருக்கிறார்கள்.

மாதவன்
மாதவன்

இதில் லிங்குசாமி தரப்பு, படுவேகமாக முன்னேறி ஷூட்டிங்குக்கே போகவிருந்த நிலையில், சீமானுக்கு இந்த விஷயம் தெரியவந்திருக்கிறது. முதலில் தன்னுடைய கதையைத்தான் லிங்குசாமி காப்பியடித்து படமாக்கப்போகிறார் என சீமான் தவறாக நினைத்து கொதித்துப்போயிருக்கிறார். அதைத்தொடர்ந்து இந்த விஷயத்தை திரைத்துறை பெரியவர்களிடம் கொண்டுபோகவும் செய்திருக்கிறார் சீமான். அவர்கள் முன்னிலையில் நடந்த விசாரணையில்தான் இது காப்பி மேட்டர் இல்லை என்பதும் மாதவன் சொன்ன சம்பவத்தை வைத்து  தனித்தனியே இருவரும் கதை அமைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து லிங்குசாமி அந்த புராஜெக்டை சீமானுக்காக விட்டுக்கொடுத்துவிட்டு  சில வருடங்களுக்குப் பிறகு, தான் அந்தக் கதையை தமிழ் அல்லாத பிற மொழிகளில் இயக்கிக்கொள்வதாக வாக்களித்திருக்கிறார்.

சீமான்
சீமான்

அதன்பிறகு லிங்குசாமி வேறு வேறு கதைகளை படமாக்கி வந்தார். இதில் எட்டு வருடங்கள் ஓடியது. ஆனால் இடைபட்ட காலத்தில் சீமான் அந்தக் கதையை படமாக்குவதாகத் தெரியவில்லை. இதற்கிடையே சமீபத்தில் அந்தக் கதையை லிங்குசாமி தெலுங்கு நடிகர் ராம் பொத்தேனியிடம் சொல்ல, அவர் உடனே இந்தக் கதையில் நடிக்க ஆர்வம் காட்டியிருக்கிறார். அதைத்தொடர்ந்து லிங்குசாமி படவேலைகளை மளமளவென ஆரம்பித்து ராமுடன், கிர்தி ஷெட்டி, நதியா, ஆதி போன்ற நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்து ஷூட்டிங்குக்கும் தயாரானார். ஷூட்டிங் தொடங்க சில நாட்களே இருந்தநிலையில் மீண்டும் போர்க்கொடி தூக்கினார் சீமான்.

லிங்குசாமி
லிங்குசாமி

இந்தமுறை பஞ்சாயத்து பேசிய பெரியவர்கள், லிங்குசாமி உங்களுக்காக ஏற்கெனவே விட்டுக்கொடுத்துவிட்டார். நீங்கள்தான் அந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதனால் இந்தமுறை லிங்குசாமி விட்டுக்கொடுக்கத் தேவையில்லை. அவர் படத்தை இயக்கிக்கொள்ளலாம் எனத் திட்டவட்டமாக கூறிவிட்டார்கள்.

அதைத்தொடர்ந்து லிங்குசாமி தற்போது, ‘RAPO19’ எனத் தற்போதைக்கு தலைப்பிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடத்திவருகிறார். விரைவில் இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read – சிகப்பு ரோஜாக்கள் முதல் மாஸ்டர் வரை… தமிழ் சினிமாவில் பூனைகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top