மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஃபேமிலி மேன் சீரியஸின் இரண்டாம் பாகம் தமிழகத்தில் டாக் ஆஃப் தி டவுனாக மாறியிருக்கிறது. என்ன காரணம்?
பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் இரட்டையர்களான ராஜ் – டி.கே இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான வெப்சீரிஸ் ஃபேமிலி மேன். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் திவாரி (மனோஜ் பாஜ்பாய்), தேசிய புலனாய்வு அமைப்பில் பணியாற்றும் ஒரு ஸ்பை. குடும்பத்தையும் வேலையையும் அவர் எப்படி பேலன்ஸ் செய்கிறார் என்ற ஒற்றை லைனில் காமெடி கலந்து த்ரில்லிங் ரைடராக வெளியான முதல் சீசன் பெரிய அளவில் ஹிட்டடித்தது.
ஸ்பை திரில்லர்களே உரிய பரபர சேஸிங், நேர்த்தியான திரைக்கதை என விமர்சகர்களிடமும் அந்த சீரிஸ் பாராட்டுப் பெற்றது. ஸ்ரீகாந்த் திவாரியாக மனோஜ் பாஜ்பாய் மிளிர்ந்தார். இந்தநிலையில், இரண்டாவது சீசன் ஜூன் 4-ம் தேதி முதல் ஸ்ட்ரீமாகும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த 19-ம் தேதி அதன் டிரெய்லர் வெளியிடப்பட்டது. டிரெய்லரில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள் ஈழத் தமிழர்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி தமிழகத்தில் கடும் எதிர்ப்பலை எழுந்திருக்கிறது.
ஃபேமிலி மேன் – 2 சீரிஸ் ஒளிபரப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழகத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதேபோல், நாம் தமிழர் கட்சி, மாநிலங்களவை எம்.பி வைகோ உள்ளிட்டோரும் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஃபேமிலி மேன் சீரிஸ்

டெல்லிக்கு என்னாச்சு?
முதல் சீசன் முடிவில் கெமிக்கல் பிளாண்ட் ஒன்றைக் கைப்பற்றும் தீவிரவாதிகள், அதிலிருந்து விஷவாயுவைக் கசிய விட்டு இரண்டு மணி நேரத்தில் டெல்லியை நாசமாக்கத் திட்டமிடுவார்கள். அந்த வேலையில் பாதிக்கும் மேல் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள் என்ற பரபரப்போடு முடிக்கப்பட்டிருக்கும் முதல் சீசன். இரண்டாவது சீசன் முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து தொடங்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது. முதல் பாகத்தைக் காட்டிலும் முற்றிலும் வேறாக சென்னையை மையமாக வைத்து கதைக்களம் பின்னப்பட்டிருக்கிறது.
மூஸா உண்மையிலேயே இறந்துட்டாரா?
முதல் பாகத்தில் மூஸா ரஹ்மான் (நீரஜ் பாண்டே) எனும் தீவிரவாதி போபால் விஷவாயு கசிவு போலவே டெல்லியிலும் ஒரு சம்பவத்தை ரீ-கிரியேட் பண்ணத் திட்டமிட்டிருப்பார். மிஷன் ஜூல்பிஃகர்’ என்ற பெயரிலான அந்தத் திட்டத்தை ஸ்ரீகாந்த் திவாரியின் டீம் மோப்பம் பிடித்து முறியடிக்க முனைவார்கள். முதல் சீசன் முடிவில் மூஸாவை ஸ்ரீகாந்த் வீழ்த்துவார். மூஸாதான் மெயின் வில்லன் என்பது தெரியவரும் சீன் ஆடியன்ஸுக்கு பெரிய ஷாக்கையே கொடுத்திருக்கும். அதேபோல், மூஸா இறப்பதைக் காட்டியிருக்க மாட்டார்கள். மாறாக, அவரது உடல் மட்டுமே காட்டப்படும். இரண்டாம் பாக ஷூட்டிங் ஷெட்டில் மூஸா கேரக்டர் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை படக்குழுவினர் கடந்த ஜனவரியில்,
மூஸா உண்மையிலேயே இறந்துவிட்டாரா?’ என்ற கேள்வியோடு வெளியிட்டு ஆடியன்ஸை டீஸ் செய்தது. இதனால், இரண்டாம் பாகத்தில் மூஸா கேரக்டருக்கு ஸ்கோப் இருப்பது தெரியவருகிறது.
ஸ்ரீகாந்த் திவாரியின் குடும்ப வாழ்க்கை!

மனைவி சுசித்ரா ஐயருடனான (பிரியாமணி) திருமண வாழ்க்கை சரியான திசையில் போகவில்லை என்பது குறித்து நாயகன் ஸ்ரீகாந்த் திவாரி ரொம்பவே வருத்தப்படுவார். முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனிலும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. கணவன் – மனைவி இணைந்து மனநல மருத்துவரைப் பார்க்கும் காட்சியோடுதான் டிரெய்லர் தொடங்குகிறது – முடிகிறது. இந்தக் காட்சியில் மருத்துவராக நடித்திருந்த ஆசிஃப் பஸ்ரா கடைசியா நடித்தது இந்த வெப் சீரியஸில்தான். இவர் சமீபத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
ராஜி
முதல் பாக்த்தில் மூஸா கேரக்டருக்குப் பதிலாக இரண்டாவது சீசனில் நெகட்டிவ் ரோல் செய்திருக்கிறார் சமந்தா. ராஜலஷ்மி சந்திரன் என்ற போராளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமந்தா நெகட்டிவ் ரோலில் நடிப்பது இதுவே முதல்முறை.

மூஸாவுக்கும் ராஜிக்கும் என்ன சம்பந்தம்?
முதல் பாகத்தில் வில்லனாக வந்த மூஸா – இரண்டாம் பாகத்தில் நெகட்டிவ் ரோலில் வரும் ராஜி 2 கேரக்டர்கள் இடையே சம்மந்தம் இருக்கிறதா என மனோஜ் பாஜ்பாயிடம் ட்விட்டரில் ஒரு ரசிகர் கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் நழுவிய மனோஜ் பாஜ்பாய், `மூஸா – ராஜி என இரண்டு கேரக்டர்களுமே போல்டானவர்கள், இரக்கமற்றவர்கள், அதிகாரத்துக்கு எதிரானவர்கள். ஒரு சம்பவமே அடுத்த சம்பவத்தை நோக்கி நம்மை நகர்த்தும் என்று எடுத்துக் கொள்ளலாம்’ என்று பதில் சொல்லியிருந்தார்.
ஸ்ரீகாந்த் திவாரின் புதிய வேலை
இரண்டாவது சீசன் டிரெய்லரில் ஸ்ரீகாந்த் திவாரி, புதிய 9-5 வேலையில் சேர்ந்திருப்பது தெரிகிறது. அவர் ஏன் அந்த வேலையில் சேர்ந்தார் என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம் டிரெய்லரின் பிற்பகுதியில் வழக்கமான ஸ்பையாக தீவிரவாதிகளைத் துரத்தும் வேலையைச் செய்கிறார்.
ஐ.எஸ்.ஐ-யுடன் கைகோர்த்தார்களா போராளிகள்?
டிரெய்லரில் வரும் ஒருவசனம் போராளிகள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யுடன் கைகோர்த்ததாகச் சொல்கிறது. அதேபோல், சமந்தா அணிந்திருக்கும் மிலிட்டரி யூனிஃபார்ம், பயிற்சி எடுத்துக்கொள்வது போன்றவை ஈழப் போராளிகளை நேரடியாகக் குறிப்பிடுவது போல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தமிழ் பேசி நடித்திருக்கும் ராஜி கேரக்டர், மெட்ராஸ் கஃபே போன்ற படங்கள் மூலமாகத் தமிழர்களை விமர்சிக்கும் பாலிவுட் மைண்ட் செட்டையே காட்டுகிறது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், தமிழ் மக்கள் மீதும் தமிழர்களின் கலாசாரம் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகச் சொல்லும் படக்குழுவினர், யாரையும் அவமதிக்கும் வண்ணம் இந்த சீரிஸ் இருக்காது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். மேலும், `படக்குழுவில் முன்னணி நடிகர்கள் முதல் கிரியேட்டிவ் – கதை எழுதும் குழுவில் தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். முதல் சீசனைப் போலவே இந்த சீசனும் பாரபட்சமற்ற நடுநிலையாகக் கையாளப்பட்டிருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றும் படக்குழு சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
Also Read – லாக்டவுனில் பார்க்க 10 ஃபீல் குட் படங்கள்! – பார்ட் 2