அன்றாட உணவில் நாம் சேர்க்கும் தக்காளி உடல் நலனுக்குப் பல்வேறு பலன்களை அளிக்கிறது. தக்காளியால் கிடைக்கும் 6 முக்கிய பலன்கள்.
தக்காளி
தாவரவியல் உலகில் பிரபலமான solanaceae குடும்பத்தைச் சேர்ந்த பழவகையே தக்காளி. ஆனால், உலகின் பெரும்பாலான பகுதிக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறி வகையாக தக்காளி இருக்கிறது. தக்காளி முதன்முதலில் பெரு நாட்டில் உருவானதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். சிவப்பு நிறம் மட்டுமல்லாது, வெள்ளை, மஞ்சள், ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் தக்காளி உள்ளன. தக்காளியால் எண்ணற்ற மருத்துவ பயன்கள் கிடைக்கின்றன. உடல் நலன் மட்டுமல்லாது சரும பராமரிப்பிலும் தக்காளி முக்கியப் பங்காற்றுகிறது.
தக்காளியால் கிடைக்கும் 6 மருத்துவ பயன்கள்!
ஆன்டி-ஆக்ஸிடண்டல் பலன்கள்
ஆன்டி-ஆக்ஸிடண்டல்கள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் உடல் இயக்கப் பராமரிப்பில் முக்கியமானவை. உயிரணுக்களில் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போரிடவும், தீவிர நோய்களைத் தடுக்கவும் செய்கின்றன. லைசோபீன், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் இ போன்ற ஆன்டி – ஆக்ஸிடண்டல்கள் தக்காளியில் செறிவாக நிறைந்திருக்கின்றன. நம்முடைய உடல் செல்களை ரேடிக்கல் டேமேஜ் எனும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.
மலக்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையத்தில் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. தக்காளியில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகளால் இதயம் பலப்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் நரம்பு மண்டலம் வலுவடைகிறது.
வைட்டமின் மற்றும் தாதுக்கள்
உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகளான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்புச் சத்து, கால்சியம் சத்து, மெக்னீசியம் உள்ளிட்டவைகள் தக்காளி நிறைந்திருக்கின்றன. இந்த சத்துகளால் நமது உடலுக்குப் பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. தக்காளியில் இருக்கும் இந்த சத்துகள், உடலில் ரத்த சுழற்சியை சீராக்குகின்றன, ரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கிறது, நரம்பு மண்டல பாதிப்புகளைக் குறைக்கிறது.
கொழுப்பு அளவு
தக்காளியில் இருக்கும் உணவு இழைகள், உடலில் கொழுப்பின் அளவை சீராகப் பராமரிக்க உதவுகின்றன. LDL எனப்படும் கெட்ட கொழுப்பு சேர்வதைக் கட்டுப்படுத்துகிறது. தமனியின் சுவர்களில் கொழுப்புப் படிந்து Atherosclerosis என்ற நோய் ஏற்படுகிறது. மேலும், இது மாரடைப்பு வரை இட்டுச்செல்லும் அபாயம் கொண்டது. தக்காளியில் இருக்கும் சத்துக்கள் தமனியின் சுவர்களில் படியும் கொழுப்பைக் குறைக்கவும், சூரிய வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் உதவுகின்றன.
சரும பாதுகாப்பு
சருமத்தில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ-வை தக்காளி பாதுகாக்கிறது. வயதான தோற்றம் ஏற்பட முக்கிய காரணம் இந்த டி.என்.ஏ தான் என்று நம்பப்படுகிறது. தக்காளியைத் தொடர்ந்து எடுத்து வருவதன்மூலம், அது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப்படுத்துகிறது. அதேபோல், வைட்டமின் குறைவினால் சருமத்தில் ஏற்படும் சுருக்கம், வெயிலில் அலைவதால் ஏற்படும் சருமப் பிரச்னைகளையும் தக்காளி தீர்க்கிறது.
கண்களுக்குப் பாதுகாப்பு
தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ,சி மற்றும் இ சத்துகள் கண்கள் பாதுகாப்பில் முக்கியமானவை. கண்களில் ஏற்படும் கண்புரை, குளூக்கோமா போன்ற பாதிப்புகளையும், வயதாவதால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க தக்காளியில் இருக்கும் சத்துக்கள் உதவுகின்றன. தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து, கண்பார்வை சக்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும், மாலைக்கண் நோய் ஏற்படுவதையும் தடுக்க உதவுகிறது.
ஜீரண மண்டலம்
தக்காளியில் இருக்கும் எளிதில் ஜீரணிக்கக் கூடிய நார்ச்சத்து, மலக்குடலின் பணியை எளிதாக்குகிறது. இதனால், மலச்சிக்கல் மற்றும் அதுதொடர்புடைய அஜீரணக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. தக்காளியில் இருக்கும் சுமார் 94% நீர்ச்சத்து, ஜீரண சக்தியை அதிகரித்து, மெட்டபாலிஸம் அதிகரிக்கவும் உதவுகிறது. அதேபோல், உணவுப் பொருட்களில் இருக்கும் சத்துகளை உறிஞ்சும் தன்மையையும் உடலில் அதிகரிக்கச் செய்கிறது.
Also Read – ஊரும் உணவும் : சேலத்தில் மிஸ் பண்ணக்கூடாத 10 உணவுகள்!