முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான சுமார் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினர். ரெய்டு முடிந்த நிலையில், இன்று காலை தூத்துக்குடி சென்றிருக்கிறார் எஸ்.பி.வேலுமணி.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த ஜூலை 7-ல் திடீரென ரெய்டு நடத்தினர். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என ஸ்டாலின், தேர்தல் பிரசாரங்களில் பல்வேறு இடங்களில் பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த ரெய்டு என்று பேசப்பட்டது. இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வீடு உள்ளிட்ட 52 இடங்களில் ஆகஸ்ட் 10-ம் தேதி காலையில் தொடங்கப்பட்ட ரெய்டு, பின்னர் 60 இடங்களாக அதிகரிக்கப்பட்டது. மாலை 6 மணி வரையில் வேலுமணியின் சகோதரர் அன்பரசன், கே.சி.பி இன்ஃப்ரா நிறுவனத்தைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் தொடர்புடைய இடங்கள் என கோவை, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சோதனை நடந்தது.
வேலுமணியிடம் 12 நேர விசாரணை
பொதுவாக பட்டினப்பாக்கத்தில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் தங்கும் எஸ்.பி.வேலுமணி, ரெய்டுக்கு முந்தைய நாள் இரவில் எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருக்கிறார். பத்தாவது மாடியில் இருக்கும் வேலுமணியின் அறைக்கு காலை 6 மணியளவில் வந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி ராமதாஸ் தலைமையிலான போலீஸார், அவரிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். புகார் தொடர்பாக ஏற்கனவே கைப்பற்றப்பட்டிருந்த ஆவணங்களைக் காட்டி அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். பெரும்பாலான கேள்விகளுக்குத் தெரியாது என்றே பதில் சொன்ன எஸ்.பி.வேலுமணி, ஆடிட்டரைக் கூப்பிடவா என்றும் கேட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஆடிட்டரை அழைப்பதற்கு மறுப்புத் தெரிவித்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். விசாரணை முடிந்ததும் லிஃப்ட் வழியாக எம்.எல்.ஏ விடுதிக்கு வெளியே வந்த எஸ்.பி.வேலுமணியை அவரது ஆதரவாளர்கள் தோளில் தூக்கி வைத்து கோஷமிட்டனர். ஆனால், வேலுமணி முகத்தில் மகிழ்ச்சி மிஸ்ஸிங்.
எஸ்.பி.வேலுமணியின் கோவை சுகுணாபுரம் வீட்டில் சோதனை தொடங்கப்பட்ட சிறிதுநேரத்திலேயே அ.தி.மு.க ஆதரவாளர்கள் குவியத்தொடங்கி விட்டனர். அவர்களுக்கு காலை உணவாக பொங்கல், தோசை உள்ளிட்டவைகளும், குளிர் பானங்கள் கொடுத்த தகவலும்தான் சோசியல் மீடியாவின் ஹாட் டாபிக். ஒரு கட்டத்தில் வந்த நோக்கத்தை மறந்து ரோஸ் மில்க்குக்காகப் போராடியதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. ரெய்டுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் – இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. `அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது’ என்று எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர். இரவு 7 மணியளவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆகியோரை சந்தித்து நேரில் விளக்கமளித்ததாகச் சொல்கிறார்கள்.
திடீர் தூத்துக்குடி பயணம்!
ரெய்டு குறித்து முதன்முறையாக இன்று ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார் எஸ்.பி.வேலுமணி. அதில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் பொதுமக்கள், உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில், திடீரென இன்று காலை 7.40 மணியளவில் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார் எஸ்.பி.வேலுமணி. இதனால், அவர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆடிப்பூரமான இன்று கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது சர்ச்சையானது. ஆனால், எஸ்.பி.வேலுமணி தூத்துக்குடி சென்றது திருச்செந்தூர் கோயிலுக்குப் போவதற்காக இல்லை. மாறாக திருச்செந்தூர் அருகே இருக்கும் நாடு நாலு மூலை கிணறு என்ற ஊரில் இருக்கும் சித்ரா லாட்ஜ் உரிமையாளரின் தோட்டத்தில் சில முக்கிய நண்பர்களை சந்திக்கவே எஸ்.பி.வேலுமணி தூத்துக்குடி சென்றார் என்று அ.தி.மு.க வட்டாரங்களில் பேசப்பட்டது. சந்திப்பை முடித்துவிட்டு 2.40 விமானத்தில் சென்னை திரும்புவார் என்றும் கூறப்பட்டது.
இந்தநிலையில், தூத்துகுடி விமான நிலையம் வந்த எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் ரெய்டு குறித்து கேள்வி எழுப்பினர். `இதுகுறித்து இரண்டு நாட்களில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிக்கிறேன். ரெய்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எங்கள் கட்சியின் தலைவர்களான ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். அறிக்கை விட்டிருக்கிறார்கள். அவர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு உங்களையெல்லாம் சந்திக்கிறேன்’’ என்று கூறிவிட்டு சென்றார்.
Also Read – எஸ்.பி.வேலுமணி: ஊழல் வழக்கு; 52 இடங்களில் ரெய்டு… எஃப்.ஐ.ஆர் என்ன சொல்கிறது?