பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மரணம் தொடர்பான விசாரணைகள் இன்றளவிலும் அதிக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவரது மரணத்தில் தொடர்ந்து மர்மங்களும் நீடித்து வருகின்றன. இந்த நிலையில், சுஷாந்தின் மரணத்துடன் தொடர்பு இருப்பதாகக்கூறி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த வெள்ளிக்கிழமை சுஷாந்தின் ஃபிளாட் மேட்டான சித்தார்த் பிதானியை கைது செய்தனர். முன்னதாக, சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியது தொடர்பாக அவருடைய காதலி ரியா சக்கரபர்த்தி, ரியாவின் தம்பி மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஆகியோர் உட்பட 34 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் ஜாமீனில் தற்போது வெளியே வந்துள்ளனர்.
சித்தார்த் பிதானி, விசாரணைக்கு ஆஜராக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அவர் ஆஜராகமல் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான், ஹைதராபாத்தில் சித்தார்த் கைது செய்யப்பட்டு மும்பைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பின்னர், அவர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் ஜூன் 1-ம் தேதி வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. சித்தார்த், சுஷாந்தின் நெருங்கிய நண்பராகவும் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் ஃபிளாட் மேட்டாகவும் இருந்துள்ளார். சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்த முதல் நபர்களில் சித்தார்த்தும் ஒருவர் என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இவர் ஜூன் 8 முதல் ஜூன் 14-வரை பிளாட்டில் நடந்த தொடர் சம்பவங்களை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
கிராஃபிக் டிசைன் ஏஜென்சி ஒன்றில் கிரியேட்டிவ் டைரக்டராக சித்தார்த் பிதானி 2017-ம் ஆண்டு பணிபுரிந்தார். அங்கு பணியாற்றியபோது சுஷாந்தின் நெருங்கிய நண்பரான ஆயுஷ் ஷர்மா என்பவருடன் சித்தார்த் பிதானி தொடர்பு கொண்டிருந்தார். அப்போது அவருடைய துறையில் சிறந்த வாய்ப்புகளைப் பெற மும்பைக்கு வருமாறு ஆயுஷ், சித்தார்த்திடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மும்பைக்கு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பைக்கு வந்து சுஷாந்தை சந்தித்துள்ளார். ஆயுஷ்தான் முதன்முதலில் சித்தார்த்தை சுஷாந்தின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், சுஷாந்தின் மேலாளர் சித்தார்த்திடம் சுஷாந்தின் ட்ரீம்ஸ் 150 புரோஜெக்டில் பணிபுரியுமாறு கேட்டுள்ளதாகவும் இதனையடுத்து, அவரது வீட்டில் பிளாட் மேட்டாக அவர் மாறியதாகவும் கூறப்படுகிறது.
போதைப்பொருள் வழக்கில் சித்தார்த் பிதானிக்கு பங்கு இருப்பது சுஷாந்தின் மரணத்துக்குப் பிறகு நடந்த விசாரணையின் போது வெளியே தெரிய வந்தது. சில மாதங்களுக்கு முன்பு பிதானியை கைது செய்ய வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக்குகளைக்கூட டிரெண்ட் செய்தனர். சமீர் வான்கடே தலைமையிலான குழு ஹைதராபாத்தில் சித்தார்த் பிதானியை கைது செய்தது. முன்னதாக அவருக்கு என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர் விசாரணைக்கு வராததால் அதிகாரிகள் அவரை தற்போது முறையாக கைது செய்துள்ளனர். வாட்ஸ் அப் உரையாடல்கள் மூலமாக சுஷாந்த் சிங்குக்கு போதைப் பொருட்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாலிவுட்டுக்கும் போதைப்பொருளுக்கும் அதிகம் தொடர்பு இருப்பதாகக்கூறி விரிவான விசாரணயாக இது மாறியது. பல பிரபல நடிகர்கள் இதுதொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
Also Read : `என் தாய்க்கு வந்த நிலை யாருக்கும் வரக்கூடாது!’- ஆக்ஸிஜன் ஆட்டோ மூலம் உதவும் சென்னைப் பெண்