Oxygen Auto

`என் தாய்க்கு வந்த நிலை யாருக்கும் வரக்கூடாது!’- ஆக்ஸிஜன் ஆட்டோ மூலம் உதவும் சென்னைப் பெண்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் இல்லாமை என ஒவ்வொரு நாளும் வெளிவரும் செய்திகள் மனதைப் பதற வைக்கும் விதமாக உள்ளன. இதனிடையே, ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு நாளும் மூச்சுத் திணறி பலரும் உயிரிழந்து வருகின்றனர். இன்னும் பலர் தங்களது அன்பிற்குரியவர்களைக் காப்பாற்ற ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை கிடைக்க ஓடி வருகின்றனர். பலரால் அவர்களை காப்பாற்ற முடியாத நிலைமையும் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மே 1-ம் தேதி சென்னையைச் சேர்ந்த சீதா தேவி என்பவர் தனது தாயை கொரோனா தொற்று காரணமாக இழந்தார்.

சீதா தேவியின் தாயான விஜயா கடந்த ஏப்ரல் 30-ம் தேதி அன்று இரவு 8 மணியளவில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தது காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சீதா, தனது தாய்க்கு மருத்துவமனையில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீண்ட நேரம் காத்திருந்தால். ஆனால், சுமார் 12 மணி நேரம் காத்திருந்தும் அவருக்கு ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்கவில்லை. இதனையடுத்து மே 1-ம் தேதி சீதாவின் குடும்பத்தினர் அவரது தாயை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அங்கு அவருக்கு அனுமதி கிடைத்தது. எனினும், சீதாவால் அவரது தாயை காப்பாற்ற முடியவில்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சீதாவின் தாய் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சீதா
சீதா

கொரோனாவால் பாதிப்படைந்தவர்களுக்கு சீதா தேவி தனது தாயின் நினைவாக உதவிகளை செய்ய முன்வந்துள்ளார். அதாவது, ஆட்டோ ஒன்றில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வைத்து உதவி தேவைப்படுபவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவைகளை வழங்க தொடங்கியுள்ளார். சீதா ஸ்ட்ரீட் விஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கொரோனா காலத்துக்கு முன்பு குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் நடத்துவது, திருநங்கைகள் மற்றும் ஹெச்.ஐ.வி நோயால் பாதிப்படைந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அறக்கட்டளையின் வழியாக உதவி செய்வது என்று தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்துள்ளார்.

சீதா தேவி இதுதொடர்பாக பேசும்போது, “நாங்கள் என்னுடைய அம்மாவுக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கையைப் பெற சுமார் 12 மணி நேரம் காத்திருந்தோம். வாகனங்களில் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் எனது தாயை ஒரு ஆம்புலன்ஸில் இருந்து மற்றொரு ஆம்புலன்ஸ்க்கு தொடர்ந்து மாற்றி வந்தோம். மே முதல் வாரத்தில் ஆம்புலன்ஸ்க்கு உள்ளேயும் வெளியேயும் பலர் மரணம் அடைவதைக் கண்டேன். பல நோயாளிகளுக்கு சிபிஆர் சிகிச்சை அளிப்பதைக் கண்டேன். எல்லா இடங்களிலும் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. 12 மணி நேரம் கழித்து என்னுடைய அம்மாவுக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைத்தது. ஆனால், ஐந்து மணி நேரத்துக்குள் அவர் இறந்தார். என்னுடைய அம்மாவுக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைத்திருந்தால் அவர் நிச்சயம் உயிர் பிழைத்திருப்பார் என்று இன்னும் நான் நம்புகிறேன். என்னுடைய வலியில் இருந்து நான் இந்த சிறிய முயற்சியைத் தொடங்கினேன்” என்றார்.

ஆக்ஸிஜன் ஆட்டோ
ஆக்ஸிஜன் ஆட்டோ

மே 5-ம் தேதி முதல் சீதா தேவியின் ஆக்ஸிஜன் ஆட்டோ அரசு மருத்துவமனையின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அவரது ஆட்டோ நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சேவையை வழங்கி வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க சரத் மற்றும் மோகன்ராஜ் என்ற இருவர் சீதா தேவிக்கு உதவி செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 பேர் சீதா தேவியின் ஆட்டோ வழியாக ஆக்ஸிஜன் உதவியைப் பெறுகின்றனர். இதுவரை சுமார் 300 பேரின் உயிரை தனது சேவையின் வழியாக சீதா தேவி காப்பாற்றியுள்ளார். “இன்னும் அதிகமான ஆட்டோக்களை வாங்கி ஆக்ஸிஜன் சேவையைப் பொறுத்தத் திட்டமிட்டுள்ளேன். ஆனால், அதற்கு தேவையான பணத்தைச் சேர்ந்து வருகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார். சீதாவின் சேவையை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read : `மும்பை – துபாய்; எரிபொருள் செலவு ரூ.8 லட்சம்’ – 18K டிக்கெட் எடுத்த தனியாளுக்காகப் பறந்த விமானம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top